ஹனான் அஷ்ராவி –
பெரும்பான்மையான மாணவர்கள் தகவல், தொழில்நுட்பம், முகாமை மற்றும் விஞ்ஞானக் கற்கை நெறிகளை நோக்கியே விரைந்து செல்கையில் ஒரு சிலர் வித்தியாசமான துறைகளின் பக்கம் தமது கவனத்தைத் திருப்புகின்றனர். அந்த வகையில், மாணவர்களின் கவனயீர்ப்பைப் பெற்றுவரும் அறிவுப் புலங்களில் ஒன்றுதான் உளவியல். இன்றைய இயந்திரத்தனமான வாழ்வியலில் பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். பலர் படிப்படியான தமது உள ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர்.
மனிதர்கள் சக மனிதர்களைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை முன்பை விட அதிகரித்துள்ளது. மனித உறவுகளின் நெருக்கம் தொழில்நுட்பத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
வேலைத் தளங்களுக்கு ஊழியர்களை உள்ளீர்க்கும்போது பல்வேறு காரணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. வீட்டில் எமது பிள்ளைகளை முறையாக வளர்த்து ஆளாக்க வேண்டுமாயின், குழந்தை உளவியலைக் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில் இன்று உளவியல் ஊடுருவாத அறிகைப் புலங்கள் எதுவுமில்லை எனக் கருதுமளவு எங்கும் உளவியல், எதிலும் உளவியல் எனும் நிலை தோன்றியுள்ளது.
ஊழியச் சந்தையில் ஒரு வளர்ந்து வரும் தொழிற் துறையாக உளவியல் மாறியுள்ளது. மேற்கு நாடுகள் போன்று கீழைத்தேய உலகில் உளவியல் சார்ந்த தொழின்மைகள் பாரியளவு வளரவில்லை. எனினும், உளவளத் துணையாளர்கள், உள மருத்துவர்களின் எண்ணிக்கை கிழக்கில் வேகமாக அதிகரித்து வருகின்றது.
உள ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள சரிவின் அடையாளமாகவே இதனைக் கருத வேண்டும். எவ்வாறாயினும், இலங்கைச் சூழலில் உளவியல் கற்கைகள் தொழிற் தகைமைக்குரிய கற்கைப் புலமாக மாறி வருகின்றது. இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு பாடமாகவே இது கற்பிக்கப்படுகின்றது. உளவியல் இளமானிப் படிப்பு இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இல்லை. விசேட கற்கையாகவும் சில பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்படவில்லை. வெளிவாரிப் பட்டப் படிப்பில் மெய்யியலின் ஒரு பகுதியாகக் கற்பிக்கப்படுகின்றது. அதுவும் பொது உளவியல் என சுருக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மட்டத்தில் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறியாக உளவியல் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்யலாம். அதற்கு மேல் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வாய்ப்பில்லை. கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடம் பட்டப் பின் டிப்ளோமா கற்கை நெறியொன்றை ஆங்கில மொழி மூலம் வழங்குகின்றது. சுமார் 1 இலட்சம் ரூபா இதற்கான கட்டணமாக அறவிடப்படுகின்றது. ஆங்கில மொழித் தேர்ச்சியும் இளமானி (BA) பட்டத்தையும் கொண்டுள்ளோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்முகப் பரீட்சையொன்றின் மூலம் மாணவர் கற்கைநெறிக்குத் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் இதே வாய்ப்பு உள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் மெய்யியல் மற்றும் உளவியல் துறையின் கீழ், உளவியல் பொதுக் கலைத் தேர்வில் ஒரு பாடமாகவும், அதேவேளை விசேட கற்கைப் புலமாகவும் விளங்குகின்றது. இவ்விரு பல்கலைக்கழகங்களினதும் பட்டப் பின் டிப்ளோமா காலம் ஒரு வருடமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
பொதுக் கலைத் தேர்வில் உளவியலை ஒரு பாடமாகக் கற்ற மாணவர்கள் இக் கற்கைநெறியில் இணையலாம். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் உளவியல் முதுமானி M.A., முதுகலைமானி பட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை. எதிர் வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு சில பல்கலைக்கழகங்களில் உளவியலுக்கு தனிப்பீடமொன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கை சமூக சேவை அமைச்சின் கீழ் இயங்கும் சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனம் NISD உயர் தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உளவளத் துறையில் டிப்ளோமா கற்கையை வழங்குகின்றது. ஒன்றரை வருடகால அளவைக் கொண்ட இதில், ஓராண்டு கோட்பாட்டிற்காக வரையறுக்கப்பட்டுள்ளது. இளமானிப் பட்டதாரிகளுக்கு அங்கு முன்னுரிமை வழங்கப்படும். அயல் நாடான இந்தியாவில் உளவியலைக் கற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
-Meelpaarvai-


0 Comments