Subscribe Us

கற்றலும் தொலைக்காட்சியும்


பாரம்பரிய இலத்திரனியல் ஊடகங்களில் தொலைக்காட்சி இன்னும் அதன் மவுசை இழந்துவிடவில்லை. உலகம் முழுவதும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் நாளாந்தம் கோடிக் கணக்கான மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். விஞ்ஞான, தொழில்நுட்ப படிமலர்ச்சியில் இது ஒரு முக்கிய பரிமாணம். நம்மைச் சுற்றியுள்ள உலகைக் காண்பதற்கும் சமூக, கலாசார, அரசியலைப் புரிந்துகொள்ளவும் தொலைக்காட்சிகள் பெரும் பங்காற்றி வருகின்றன.
இன்று 350 கோடி தொலைக்காட்சிப் பெட்டிகள் பாவனையில் உள்ளன. 60,000 தொலைக்காட்சி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளை அவை ஒளிபரப்புகின்றன. தொலைக்காட்சிகளின் இந்த அனுகூலத்திற்கு அப்பால் அதற்கு இன்னொரு முகம் உண்டு. புலன்களை சிறைப்படுத்தும் அதன் வசீகரத்தில் பலர் கிறங்கிப் போகின்றனர். 22 அங்குல திரை, மாணவர்களின் மனதைக் கவர்கின்றது.
பாடல்கள், நடனக் காட்சிகள், வன்முறைகள், பாலியல் அனுபவங்கள், பொய்களால் போர்த்தப்பட்ட விளம்பர மாயைகள், அதிகாரிகளுக்கு எதிரானதும் சார்பானதுமான செய்திகள் என மனித நடத்தையில் தாக்கம் செலுத்தும் உள்ளடக்கம் அதற்குண்டு. கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்கள் பழக்கப்படுவதனால் அவற்றை நிறுத்தவோ மாற்றவோ முடிவதில்லை.
திரும்பத் திரும்பப் பார்க்கும்போது அது அறிவாகவும் நம்பிக்கையாகவும் நடத்தையாகவும் மாறுகிறது. மாணவர் பருவத்தில் உள்ளவர்கள் தீமைகளோடு உறவாடுவதற்கு இன்று தொலைக்காட்சிகள் பெரும் பங்களிக்கின்றன. சமீபத்திய சமூக ஊடகங்களின் செல்வாக்கைக் கடந்து, தொலைக்காட்சியின் இந்தத் தாக்கத்தினை வெகுவாக உணர முடிகின்றது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா சீரிஸ்கள் மாணவர்களின் கல்வியை பெருமளவு பாதிக்கின்றன. வினைத் திறனுள்ள கற்றல் நிகழ்வதற்கு மிகப் பொருத்தமான நேரம் எதுவோ அதே நேரத்தில்தான் இந்த மெகா சீரிஸ்கள் ஒளிபரப்பாகின்றன. பெற்றோர்கள் தொலைக்காட்சித் திரைகளுக்கு முன்னால் அமர்ந்து அவற்றைப் பார்த்து லயிக்கின்றனர். தமது பிள்ளைகளை ‘நீங்கள் சென்று படியுங்கள்’ என கட்டளையிடுகின்றனர்.
கற்றலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாத பெற்றோர்களே இவ்வாறு நடந்து கொள்கின்றனர். கற்றலில் முதன்மையானது மனஒருமைப்பாடு. தொலைக்காட்சியில் நாடகங்களோ சினிமாப் படங்களோ ஒளிபரப்பாகும் நேரத்தில் வீட்டில் ஒதுக்குப் புறமாகவுள்ள ஓரிடத்திலிருந்து கற்கும் மாணவனின் கவனம் கூட சிதைகின்றது என்ற உண்மையை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஊடகங்கள் – குறிப்பாக தொலைக் காட்சிகள் மாணவர்களின் ஆளுமையில் ஏற்படுத்தும் தாக்கங்களில் அநேகமானவை எதிர்மறையானவை. கவனக் குறைவு, ஓய்வின்மை, வன்முறை, ஒழுங்கீனம், இவற்றின் ஒட்டுமொத்த விளைவான அசாதாரண நடத்தை என மாணவர்களை தொலைக்காட்சிகள் பல வகையில் பாதிக்கின்றன. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால ஆய்வுகளின் முடிவுகள் பின்வருமாறு அமைகின்றன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படும் வன்முறைகளுக்கும் அதைப் பார்ப்போரின் நடத்தைகளுக்கும் இடையில் காரண காரியத் தொடர்புள்ளது.
தொலைக்காட்சி வன்முறைகள் பார்ப்போரின் வன்முறை நடத்தையைத் தூண்டுகின்றன.
கடந்த காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வன்முறைச் சம்பவங்கள் ஒப்பீட்டு ரீதியில் அதிகரித்துள்ளன.
தொலைக்காட்சி அதிகம் பார்ப்பவர்கள் மற்றவர்களில் நம்பிக்கை அற்றவர்களாகவும் பல்வேறு உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவர்களாகவும் உள்ளனர்.
தொலைக்காட்சியில் காட்டப்படும் வன்முறைகள் கற்றுக்கொள்ளப்பட்டு போலச் செய்தல் (Imitation) மூலம் வெளிக்காட்டப்படுகின்றன. இதனை Bandura Observational Modeling Theory  என வரையறுப்பார்.
பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் காதல் செய்யும் காட்சிகள், பழிக்குப் பழிவாங்கும் உணர்வுகளைத் தூண்டும் காட்சிகள், கல்வியின் விழுமியங்களைக் குறைக்கக் கூடிய காட்சிகள், விரசத்தைத் தூண்டும் பாடல் காட்சிகள், யதார்த்த மில்லாத கற்பனாவாதங்கள், பலமான வனே சரியானவன் என்பதை உணர்த்தும் காட்சிகள் என மாணவர்களில் எதிர் மறை ஆளுமைகளை ஊக்குவிப்பதா கவே தொலைக்காட்சி உள்ளடக்கங்கள் அமைகின்றன.

Post a Comment

0 Comments