கடந்த தசாப்தத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வந்த இஸ்லாமியப் பீதியும் முஸ்லிம்கள் மீதான குரோதங்களும் கிழக்கைரோப்பிய நாடுகளை நோக்கித் திரும்பியுள்ளன. கிழக்கு ஐரோப்பாவிலுள்ள போல்கன் பல்வேறு இனக் குழுமங்களையும் சமயங்களையும் உள்ளடக்கிய பிராந்தியமாகும்.
வரலாற்று ரீதியில் ஒரு காலகட்டத்தில் உஸ்மானியப் பேரரசின் கீழிருந்த இப்பிராந்தியத்தில் இஸ்லாத்திற்கு எதிரான காழ்ப்புணர்வு தலைநீட்டத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் போல்கன் நாடுகளுள் ஒன்றான பல்கேரியாவில் முகத்தை முற்றாக மூடும் முகத்திரை (நிகாப்) அணிவதைத் தடைசெய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதற் கட்டமாக மத்திய பல்கேரிய நகரமான பஸார் ஸிக்கில் பொது இடங்களில் நிகாப் அணிவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சியாளர்களின் அபிப்பிராயத்தில் பாதுகாப்பை நோக்காகக் கொண்டும், பல்வேறு சமூகங்களுக்கிடையில் நிலவும் பதட்டத்தைத் தணிக்கவுமே இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
கிழக்கு ஐரோப்பாவிலுள்ள போல்கன் பிராந்தியத்தில் சேர்பியா, மொன்டநீக்ரோ, ஸ்லோவேனியா, பல்கேரியா, அல்பேனியா, பொஸ்னியா, ஹெஸகோவினா போன்ற நாடுகள் உள்ளன. இதில் பொஸ்னியாவும் அல்பேனியாவும் பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளாகும். பல்கேரியாவின் மொத்த சனத் தொகை 7.2 மில்லியனாகும். அதில் 12% (864,000) முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இப்பிராந்தியத்தில் சுமார் 800 ஆண்டு காலமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
தற்போது பல்கேரியாவில் நிகாபை அரசு தடை செய்திருப்பது ஏனைய நாடுகளுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும் எனவும் ஏனைய நாடுகளிலும் நிகாப் எதிர்காலத்தில் தடை செய்யப்படலாம் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது தடைசெய்யப்பட்டுள்ள நகரத்தில் மொத்தமாக 70,000 மக்கள் வாழ்கின்றனர். ரோமா இன முஸ்லிம் சிறுபான்மையினர் பெரும்பான்மையும் நிகாப் அணியும் வழக்கம் கொண்டுள்ளனர். இந்நிலையிலேயே அங்கு நிகாப் தடைசெய்யப்பட்டுள்ளது.
இன ரீதியில் இம்முஸ்லிம்கள் துருக்கிய பூர்வீகத்தைக் கொண்டவர்கள். நகர மேயர் போபோவ் “பஸாட்ஸிக் நகரம் புர்கா நகரம் என நான் அறிகிறேன். ஆனால், அது புர்காக்க ளின் நகரம் அல்ல என நான் உரத்துச் சொல்வேன். மக்கள் பொறுப்புள்ளவர்களாக வாழ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும், ஆள் அடையாளத்திற்கு நிகாப் பெரும் தடையாக உள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.
ரோமா இன சிறுபான்மை முஸ்லிம் பெண்கள் சமீப காலமாகவே நிகாபை அணிந்து வருகின்றனர். ஐரோப்பாவிற்குள் அகதிகள் ஊடுருவுவதைத் தடுக்கவும் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை இனங்காணவும் நிகாப் ஒரு சவாலாக உள்ளதென்று பல்கேரிய அரசாங்கம் கூறுகின்றது.


0 Comments