Subscribe Us

மொஹமட் நிஷோஸின் (காடழித்துப் பார்) கவிதை தொகுப்பு.



Mohamed Nizous

உன்னைச் சுற்றி
உஷ்னம் தோன்றும்.
உலகம் வருத்தப்படும்.
வெயிலின் கோரம் விளங்கும்.
புயல் புவியழிக்கும்.

தண்ணீர் தேடி
தலையெழுத்தை 
நொந்து கொள்வாய்.
தெம்பிலி விற்பவன்
தேசிய வீரனாவான்.

காடழித்துப் பார்.
***
வெய்யிலால்
வியர்வையில்
நனைவாய்

மூர்க்க வெப்பத்தால்
மூன்று முறை
மூழ்கிக் குளிப்பாய்

நெருப்புப் பூமியில்
நிமிஷம் நிமிஷமாய்
நிழல் தேடி அலைவாய்.

வருஷங்கள் வாழ்ந்த
வனாந்திரங்களை
நிமிஷங்களில் அழித்து
நிர்மூலமாக்கியதற்காய்
சந்ததி சந்ததியாய்
சாபமிடக் காண்பாய்

காக்க ஆளில்லா
காட்டு மிருகங்கள்
ஊருக்குள் வந்து
உலவுவதைக் காண்பாய்

உயிரையும்
பயிரையும்
உருவம் பெருத்த யானைகள் ஒழிக்கக் காண்பாய்

இந்த தோட்டம் இந்த ஆறு
இந்த பூமி இந்த வயல்
எல்லாம்
கருகி வாடுவதைக்
கவலையுடன்
காண்பாய்

காடழித்துப் பார்!

***

பறவைகள் இடமின்றி
பதறித் துடிக்கும்…

பச்சைப் பசேலென்பது
பழைய போட்டோக்களிலேயே
பார்க்கக் கிடைக்கும்

உன் காடழிப்பே
உன்னை
அழிக்கும்..

மரத்தை வெட்டி
மண்ணை அழிப்பதில்
சலசலத்து ஓடிய
சரித்திர கால நதிகள்
சகாராவாகும்


காடழித்துப் பார்!

***

காடழிப்பை நிறுத்தி
கருணை கொள்
காட்டின் மேல்

சிறகடிக்கும் பசுமைகளில்
சிலிர்க்க முடியுமே…
அதற்காகவேனும்

புதுக்காற்றை சுவாசித்து
பூரிக்க முடியுமே…
அதற்காகவேனும்…

ஆழகு என்ற சொல்லுக்கும்
மழை என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்…

வாழ்ந்துகொண்டே
வாழவைக்க முடியுமே
வாழவைத்துக் கொண்டே
வாழவும் முடியுமே…
அதற்காக வேணும்…

கருணைகொள் 
காட்டின் மேல்

Post a Comment

0 Comments