எமது முஸ்லிம் சகோதர சகோதரிகள் , வாழ்த்துக்கள் பறிமாறுவதில் அந்நிய மதத்தினரின் கடவுள்களையும் இணைத்து பதிவிட்டு , அவர்கள் தெரிவிக்காத அளவு வாழ்த்துக்கள் பகிரப்பட்டு தூய இஸ்லாம் புறக்கணிக்கப்படும் நிலைக்கு கொண்டு சென்று விட்டனர் . ஆகையால் இன்றைய காலத்தின் தேவை கருதி இப்பதிவை பதிவிடுகிறேன் .
எமது மார்க்கத்தில் இருக்கும் புதிய வருடத்திற்கே வாழ்த்துக் கூறுவதைத் தடுத்த இஸ்லாம் எவ்வாறு மாற்று மத சகோதரர்களுக்கு வாழ்த்துக் கூற அனுமதித்திருக்கும் ?! . அநேக அறிஞர்களின் கருத்துப்படி மாற்று மத சகோதரர்கள் வாழ்த்துக்களை முதலில் ஆரம்பிக்கும் பட்சத்தில் மாத்திரமே பதில் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம் , மாறாக நாம் முதலில் வாழ்த்துக்களை ஆரம்பிப்பது மிகவும் தடையான ஒன்று .
எங்கும் எமது தனித்துவமான இஸ்லாத்தை பாதுகாப்போம் .
மாற்று மதத்தினரை மதிக்குமாறு கூறிய இஸ்லம் எமது தனித்துவங்களை விட்டுக்கொடுக்கும்படி ஒருக்காலும் பணித்தது கிடையாது . அந்நிய மதத்தினரின் வணக்க வழிபாடுகளுக்கோ , அவர்களது கலாசார விழுமியங்களுக்கோ , மற்றும் உரிமை , கடமைகளுக்கோ இடையூறு விளைவிக்காது , பங்கம் ஏற்படுத்தாது இருப்பதே எமது கடமை . இது தான் நாம் அவர்களை மதித்து வாழ்வது என்பது .
மாற்று மதத்தினரை குஷிப்படுத்த வேண்டும் என்ற நொக்கில் நாம் எமது மார்க்கம் காட்டித்தந்த வழிமுறைகளை ஒரு போதும் புறந்தள்ளுதலாகாது . நபியவர்களும் ஸஹாபாக்களும் மாற்று மத சகோதரர்களோடு கொடுக்கல் வாங்கல் , வியாபாரம் போன்றவற்றை மேற்கொண்ட பொழுதும் ஒரு பொழுதும் அவர்களது வைபவங்களுக்கு வாழ்த்துக்கூறிய வரலாறே கிடையாது . எமது இரு பெரும் பெருநாள்களுக்கு மாத்திரம் தான் சில ஸஹாபாக்கள் தமக்கு மத்தியில் வாழ்த்துக்கூறியதாக அறிவிப்புக்கள் பதிவாகியுள்ளன , இவற்றை வைத்தே இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் எமது பெருநாட்களுக்கு மாத்திரம் வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொள்ள முடியும் எனத் தீர்ப்பளித்துள்ளனர் .
மாற்று மத சகோதரர்களை நான் இங்கு புறக்கணிப்பதாக யாரும் தப்பெண்ணம் கொண்டு விடக்கூடாது , நாம் இருக்கும் தேசமும் மாற்று மதத்தினரோடு தொடர்பாக இருக்கும் பொழுது எவ்வாறு நாம் வாழ்த்துக் கூறாமல் இருப்பது என்று சிலருக்கு கேள்வி எழும்பலாம் , நாம் வாழ்த்துக் கூறாத வேளையில் எம்மை அவர்கள் தப்பபிப்பிராயம் கொள்வார்களே என்று சிலரும் நினைப்பதுண்டு .
உண்மை தான் , மேற்கூறியது போல் நாமாக முதலில் வாழ்த்துக்கள் தெரிவிப்பதை விடுத்து அவர்கள் வாழ்த்துக்களை ஆரம்பிக்கும் பட்சத்தில் மாத்திரமே வாழ்த்துக்களை பறிமாற அனுமதியுண்டு . அவர்கள் வினவும் தருணங்களில் நுணுக்கங்களை கையாண்டு , நளினமாக இஸ்லாத்தின் சட்டதிட்டம் இவ்வாறு தான் என்பதை எடுத்துக் கூற எத்தனிப்பது எமது கடமை .
ஆக இஸ்லாமிய அன்பர்களே , தயவு செய்து இஸ்லாத்தின் தனித்துவத்தை எங்கும் எப்பொழுதும் நடைமுறைப்படுத்துவதோடு , அதனை விட்டுக்கொடுக்காது பாதுகாக்க முயல்வோம் .
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியா புரம் -


0 Comments