Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (ஒரு தந்தை ஏங்குகிறார்) கவிதை தொகுப்பு.



Mohamed Nizous

தெருவாய் நான் அலைந்து
தேடிய வருவாயால்
உருவான பின்னாலே
ஊர் விட்டுப் போனவனே
ஒரு தரம் என்றாலும்
உன் தந்தை பார்ப்பதற்கு
வருவாய் என நம்பி
வயசு போன பின்னாலே
வருவாய் ஏதுமின்றி
வாடி நிற்கின்றேன்
ஒருவாய் சோறூட்ட
ஓடி வருவாயா?

சின்ன வயதினிலே
செல்லமாய்க் கதை சொல்ல
என்னை நீ சுற்றி
எத்தனை முறை வந்தாய்.
இன்னும் எனக்குள்ளே
இருக்கிறது பல கதைகள்
சொன்ன கதைகளிலும்
சோகமாய் சொந்தக் கதை.

அக்கம் பக்கத்தார்
ஆதரவு தந்தாலும்
வெட்கத்தை விட்டு விட்டு
வேண்டியதைக் கேட்பதற்கு
பக்கத்தில் மகனிருந்தால்
பாவி என் வாழ்வில்
துக்கம் குறந்து விடும்
தொல்லைகள் பறந்து விடும்.

செருப்பு பிஞ்சு போச்சு
சேர்ட்டு கிழிஞ்சு போச்சு
தெருவிலுள்ள மனிதரிடம்
தேவைகளைக் கூறும் போது
அருமை என் மகனே
அவருனக்கு ஏசுவதை
பொறுக்குதில்லையடா
பொன்னான என் மகனே

இன்னும் எத்தனை நாள்
இருப்பேனோ உயிரோடு
எண்ணுகிறேன் நாட்களினை
இறந்து நான் போகு முன்னால்
பறந்து வா மகனே
பாசமாய் உன் வாயை
திறந்து வாப்பான்னு
திருப்தி தரக் கூப்பிடுவாய்
இரந்து கேட்கின்றேன்
இதையேனும் செய்வாயா?          

(பிள்ளைகளால் கைவிடப்பட்டு வறுமையில் வாடும் மனிதர் ஒருவர் மனக் கவலைகளை என்னிடம் கொட்டினார். அத்தோடு மேலதிக சில விபரங்களையும் சேர்த்து எழுதப்பட்டது) 

Post a Comment

0 Comments