குளியாப்பிட்டியில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று பீதி காரணமாக பாடசாலை அனுமதி மறுக்கப்பட்ட மாணவருக்கு நாட்டின் எந்தவொரு பாடசாலையிலும் அனுமதி பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
நிபந்தனையின்றி நாட்டின் எந்தவொரு பாடசாலைக்கும் செல்ல அனுமதியளிக்குமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.
மாணவரின் தாய் விண்ணப்பம் செய்யும் எந்தவொரு பாடசாலையிலும் அந்த மாணவருக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும்.
அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சர் எடுக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவரின் தந்தை எயிட்ஸ் நோயினால் உயிரிழந்தார் என்ற அச்சம் காரணமாக குறித்த மாணவரை பாடசாலையில் அனுமதிக்க வேண்டாம் என பாடசாலையொன்றில் பெற்றோர் போராட்டம் நடத்தியதனால், மாணவருக்கு அந்தப் பாடசாலையில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், மாணவருக்கு எச்.ஐ.வீ தொற்று கிடையாது என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது.
0 Comments