இன்றைக்கு உலகின் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் தமிழ் படத்துல வர்ற மாதிரி ஒரே பாட்டுல பணக்காரர்கள் ஆனவர்கள் இல்லை. ஒவ்வொரு வெற்றியாளனுக்குப் பின்னாலும் மிகப் பெரிய கதை இருக்கிறது.
இன்றைக்கு சில்லறை வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் வால் மார்ட் நிறுவனத்தை உருவாக்கிய சாமுவேல் வால்டனின் கதையும் அவற்றில் ஒன்று.
அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் உள்ள எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்த (great depression) காலத்தில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர். குடும்பத்தின் வறுமையைப் போக்க செய்தித் தாள் போட ஆரம்பித்தார்.
சின்ன சின்ன வேலைகளை செய்தவர், தனது 26 வது வயதில் ஒரு பல்பொருள் கடையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வெறுமனே வேலையை மட்டும் செய்யாமல் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். விரைவில் சொந்தமாக ஒரு கடையை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் கொழுந்து விட ஆரம்பித்தது.
கடன் வாங்கித் தனது முதல் கடையை ஆரம்பித்தார். கடையைப் பெரிய அளவில் விரிவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விரைவிலேயே இரண்டாவது கடையை திறந்தார். இப்படி வரிசையாக கடைகளைத் திறந்ததோடு இல்லாமல் சில்லறை வர்த்தகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையுடன் ஜூலை 2, 1962 ஆம் ஆண்டு தனது முதல் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டை தொடங்கினார்.
வாடிக்கையாளர் தான் நமக்கு முதலாளி, அவர்களின் தேவை என்னவோ அதை நிறைவேற்றுவது தான் முதல் கடமை, எந்த நேரத்திலும் எங்கேயும் குறைந்த விலை என்ற சாம் வால்டனின் இந்த உத்திகள் தான் வால் மார்ட் நிறுவனத்துக்கு அசைக்க முடியாத அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
தான் செய்கின்ற வேலையை நேசிப்பது. அப்படி நேசிப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் அந்த வேலையை சிறப்பாக செய்வதற்காக முயற்சிப்பது. இப்படி நாம் இருந்தால்தான் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அதே போல் ஒரு உந்துதல் ஏற்பட்டு அவர்களும் வேலையை நேசிக்க ஆரம்பிப்பார்கள். இப்படி குழுவாக நேசத்துடன் வேலையை செய்யும் போது வெற்றி சுலபமாகிவிடுகிறது என்பது அவரது வெற்றிக்கான கொள்கை.
ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்குகளில் தனது தொழிலை வளர்த்துக்கொண்ட வால்மார்ட் விரைவில் உலகின் முக்கியமான இடங்களில் எல்லாம் தனது கடையை நிறுவினார். 2000-லேயே அமெரிக்க வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வழியாக ஷாப்பிங் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது.
இன்றைக்கு வால்மார்ட் 27 நாடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை கொண்டு, 20 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுடன் உலகின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது இந்தியாவில் சிறுகடைகளை, வியாபாரிகளை நசுக்கியது என்பது வேறு கதை.
ஆனால் இத்தகைய பிரம்மாண்ட நிறுவனத்தை உருவாக்கிய சாமுவேல் வால்டன் ஆரம்பத்தில் செய்தித்தாள் போட்டவர் என்பதை மறைந்துவிடக்கூடாது.


0 Comments