நியூசிலாந்து முன்னால் கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 53.
கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ட்டின் குரோவுக்கு புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒக்லேண்ட் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
நியூசிலாந்து அணிக்காக 13 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய மார்ட்டின் குரோ 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 ஆயிரத்து 444 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இதில் 17 சதங்களும் அடக்கம். அவர் 143 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
நோய் கொடுமை இருந்தாலும் 40 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக கடந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியதால், இறுதிப் போட்டியை நேரில் பார்க்க மெல்பேர்ன் மைதானத்திற்கே வந்திருந்தார் மார்ட்டின் குரோவ்.
அத்தோடு ''நியூசிலாந்து அணி கிண்ணத்தை வெல்லும் என்றும், இதுதான் நான் நேரில் பார்க்கும் கடைசிப் போட்டி' என்றும் மார்ட்டின் குரோவ் உருக்கமாக கூறியது கிரிக்கெட் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருந்தது. இதைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்திக்க ஆரம்பித்தனர்.
குறைந்தபட்சம் இந்த மனிதருக்காகவாவது நியூசிலாந்து அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டனர். ஆனால் நியூசிலாந்து அணியின் கெட்ட நேரம் இறுதிப் போட்டியில் மோசமாக விளையாடி தோற்றுப்போனது.
போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மார்ட்டின் குரோவின் முகத்தில் எந்த சலனமும் காணப்படவில்லை. நியூசிலாந்து அணி கிண்ணத்தை வெல்லும் என்ற கனவுடன் மெல்பேர்ன் வந்த மார்ட்டின் குரோவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் அவுஸ்திரேலிய அணி வீரர்களை வாழ்த்தவும் அவர் தவறவில்லை.
0 Comments