Subscribe Us

header ads

மீண்டும் அரங்கேறும் மஹிந்தவின் அரசியல் நாடகம்!


நல்லாட்சிக்கு எதிரான மஹிந்த ராஜபக்ச அணியினரின் பிரசாரக் களம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் ஹைட்பார்க்கில் விஸ்வரூபமெடுத்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உயர் பீடத்தின் எச்சரிக்கை, அறிவுறுத்தலையும் மீறி அக்கட்சியை சேர்ந்த மஹிந்த தரப்பினர் இந்த அரசு எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

கட்சியை சேர்ந்த சிலர் மட்டும் பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன் போன்று நடந்து கொண்டதையும் நன்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

சுதந்திரக் கட்சியிலிருந்து எக்காரணம் கொண்டும் வெளியேற மாட்டேன் என கடந்த காலத்தில் வலியுறுத்திக் கூறிவந்த மஹிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தின் போது மேடையேறிப் பேசியதன் மூலம் சுதந்திரக் கட்சிக்கு எதிரான அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டதற்கான அறிவிப்பை பகிரங்கப்படுத்திவிட்டார்.

ஆட்சியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பை விட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீதே தமது ஆத்திரத்தை இந்த மஹிந்த அணி வெளிப்படுத்தியுள்ளது.

சுதந்திரக் கட்சிக்கு எதிரான எந்தக் கூட்டத்திலும் கட்சியை சேர்ந்த அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ, மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களோ பங்கேற்கக்கூடாது என கட்சியின் செயலாளரால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் கூட அக்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களான குமார வெல்கம, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களைப் பார்க்கும் போது கடந்த காலத்தில் மஹிந்த ஆட்சி மீது நாட்டு மக்கள் வெறுப்படைவதற்கு முக்கிய காரணிகளாகக் காணப்பட்டவர்களையே அங்கு காண முடிந்தது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச தெரிவித்த ஒரு கூற்று இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகவே உள்ளது.

உங்களால் ஆட்சியை ஒழுங்காக நடத்த முடியாது போனால் ஆட்சிப் பெறுப்பை என்னிடம் தந்து பாருங்கள் நான் நடத்திக் காட்டுகின்றேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மஹிந்தவின் இக்கூற்றைக் கேட்கும் மக்களிடமிருந்து திருப்பிக் கேட்கப்படக் கூடிய கேள்விக்கு அவரால் என்ன பதிலை அளிக்க முடியும்? என்பதே முக்கியமானதாகும்.

பத்து வருடங்களாக ஆட்சி செய்த நீங்கள் இறுதிக் கட்டத்தில் யுத்தத்தை வெற்றி கொண்டதாகக் கூறி ஜனநாயக நடைமுறைக்கு மாற்றமாக உங்களை சர்வாதிகாரியாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டீர்களே. சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு பௌத்தம் போதிக்காத பேரினவாத மக்கள் விரோதிகளுடன் கைகோர்த்துச் செயற்பட்டீர்களே, இவற்றை நாட்டு மக்களான நாம் மறந்து விட்டோம் என்றா நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு மஹிந்த எவ்வாறான பதிலை அளிக்கப் போகிறார்?

தனது ஆட்சியின் போது முழு நாட்டையும் ரண களமாக மாற்றி இனவாதத் தீயை கொழுந்து விட்டெரியச் செய்த மாபாதகமான செயலை முன்னெடுத்த மஹிந்த ரஜபக்சவும் அவரது குடும்பமும், அடிவருடிகளும் மீண்டுமொரு தடவை ஆட்சிக்கு வருவார்களேயானால் அடுத்த கணமே நாடு முழுமையான பாதாள உலகமாக மாறிவிடும் என்பதை புத்திஜீவிகள் பலரும் விமர்சித்துள்ளதை மறுக்க முடியாதுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்கள் மீது இனவெறியாட்டம் இடம்பெற்ற போது மஹிந்த கண்களை மூடிக் கொண்டிருந்தார்.

அவரது சகோதரர் பாதுகாப்புச் செயலாளர் அந்த இனவெறியாட்டத்துக்கு எண்ணெய் ஊற்றினார்.

எல்லாம் முடிந்து ஆட்சி பறிபோனதன் பின்னர் பள்ளிவாசல்கள் உடைப்பு, முஸ்லிம்களுக்கு எதிரான அடாவடித்தனங்களுக்கு தான் பொறுப்பில்லை என கூறும் மஹிந்த ராஜபக்ச அன்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார் என்பதை மறந்து விட்டாரா? எனக் கேட்க வேண்டியுள்ளது.

இன்று நாட்டில் அமைதியும், மன ஆறுதலும் உருவாகி வரும் சூழலில் மீண்டும் இனவாதம், பாதாள உலக அடாவடித்தனங்களை மறைமுகமாகத் தூண்டி விடும் முயற்சிகளில் இவர்கள் மிக தந்திரமாக முன்னெடுத்து வருவதை எவராலும் மறுதலிக்க முடியாது.

நாட்டின் மற்றொரு இன வன்முறைக்கு தூபமிடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படக் கூடாது.

இன்று நாட்டில் நடப்பவற்றைப் பார்க்கும் போது மஹிந்த தரப்பினருக்குத் தேவைப்படுவது மைத்திரி – ரணிலை ஒழித்துக் கட்டிவிட்டு அதிகாரத்தை மீளக் கைப்பற்றுவது ஒன்றே ஆகும்.

கடந்த கால கசப்புணர்வுகளை, ரணகளமாக மாற்றிய இந்த நாட்டை மக்கள் மீள நினைவூட்டி மனக்கண் முன் கொண்டுவந்து பார்ப்பார்களேயானால் அடுத்த ஏழேழு ஜன்மங்களானாலும் மஹிந்த பக்கம் திரும்பி்க்கூடப் பார்க்கமாட்டார்கள்.

மஹிந்தவின் இன்றைய ஒரே இலட்சியம் தனக்குத் துரோகமிழைத்த மைத்திரிபால சிறிசேனவை பழிவாங்குவதாகும். அதற்காக மோசமான எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்க அவர் தயங்கப் போவதில்லை.

பத்து வருடங்களாக நாட்டை பேரழிவுக்குள் தள்ளிவிட்ட தேசத்துரோகியென மக்களால் வெறுத்து ஓரங்கட்டப்பட்டவர் மீது சர்வாதிகார வழியிலன்றி ஜனநாயக வழியில் சட்டத்தின் முன் நிறுத்தி விசாரிக்கும் நேர்மை அரசியலையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

மஹிந்த அணியினர் எவ்வளவுதான் கூச்சலிட்டாலும் உரிய நேரத்தில் காலம் பதில் சொல்லும். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்ளலாம்.

இதேவேளை முன்னாள் இராணுவத் தளபதியான தற்போதைய அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தி இருக்கும் போர்க்கால இரகசியங்கள் கூட மஹிந்தவின் நேர்மையற்றதும். வெட்கப்படக் கூடியதுமான செயற்பாடுகளை வைத்துப் பார்க்கையில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனநாயக அரசியலுக்கு உகந்தவரா? என்ற கேள்விகூட எழுகிறது.

நாட்டை மீண்டும் குழப்பச் சூழலுக்குள் தள்ளி அதில் குளிர்காய நினைக்கும் மஹிந்த அணியினருக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பளிக்கத் தயாரா? என்பதே எமது கேள்வியாகும்.

Post a Comment

0 Comments