சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பூரண குணமடைந்த நிலையில் நாடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதயத்துக்கு குருதியை எடுத்துச் செல்லும் இரண்டு நாளங்களில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 15ம் திகதி அமைச்சர் ராஜித சேனாரத்ன திடீர் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் பெப்ரவரி மாதம் 16ம் திகதி சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் விசேட அம்பியூலன்ஸ் விமானம் மூலமாக அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அவருக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியில் அமைச்சர் ராஜிதவைப் பார்வையிட்டு சுகம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, பிரதியமைச்சர் பைசல் காசிம் உள்ளிட்டோர் சிங்கப்பூர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.
அத்துடன் இலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அமைச்சர் ராஜிதவின் சுகம் விசாரிப்பதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தனர். இதுவரை எந்தவொரு அமைச்சரும் வெளிநாட்டில் சிகிச்சை பெறும்போது இந்தளவு ஆதரவாளர்கள் சுகம் விசாரிக்க படையெடுத்ததில்லை என்றும் கூறப்படுகின்றது.
அத்துடன் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பௌத்த, இந்து, இஸ்லாமிய மதத்தலங்களில் அமைச்சர் ராஜித சேனாரத்ன விரைவில் பூரண குணமடைய வேண்டி விசேட வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றிருந்தன.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னரும் அமைச்சர் ராஜித சிங்கப்பூரில் சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வு எடுத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த பதினேழாம் திகதி மாலை அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பியுள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் தனது அமைச்சு அலுவலகத்துக்கும் வருகை தருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments