கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி மாகாண சபைக்குத் தெரிவாகிருந்தார்.இதன் பின்னர் இவருடைய புகழ் மக்களிடையே ஒரு படி மேல் மிளிர்ந்தது.கடந்த பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பெயரிடப்பட்ட ஐ.தே.கவின் தேசியப்பட்டியலில் அசாத் சாலிக்கு ஒரு இடம் வழங்கப்படுமென அனைவரும் நம்பிருந்த போதும் வழங்கப்படவில்லை.இதனைத் தொடர்ந்து அசாத்சாலி ஐ.தே.க அரசில் தான் தொடர்ந்தும் நிலைத்திருக்கப்போவதில்லை எனக் கூறி இருந்தார்.எனினும்,காலப்போக ்கில் அவரது இக் கருத்து மரித்துவிட்டது போன்றே காணப்பட்டது.அண்மையில் மரணித்த காணி அமைச்சர் எம்.கே.டி,எஸ் குணவர்த்தனவின் வெற்றிடத்திற்காவது அசாத் சாலி நியமிக்கப்படுவார் என நம்பப்பட்டது.அதுவும் அசாத்சாலிக்கு கை கூடவில்லை.தற்போது திடீர் என தனது மாகாண சபை பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அசாத்சாலியின் இவ் இராஜினாமா மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்த்தனவின் வெற்றிடத்திற்கு தான் நியமிக்கப்படாமையின் விரக்தியாகவும் இருக்கலாம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைக் கண்டு நாட்டின் பலமிக்க முக்கிய புள்ளிகளே வாய் திறக்க அச்சப்பட்டுக் கொண்டிருந்த வேளை அசாத்சாலி மஹிந்த அரசின் பிழைகளை தைரியமாக தட்டிக் கேட்டிருந்தார்.அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் குரோத செயற்பாடுகளுக்கெதிராக அதிகம் குரல் கொடுத்தார்.முஸ்லிம் கட்சிகளான மு.கா,அ.இ.ம.கா ஆகியன மஹிந்த அரசின் அமைச்சுக்களை பெற்று அடங்கிக் கிடந்தமை முஸ்லிம் மக்களை தன் பக்கம் ஈர்க்க இவருக்கு மிகவும் சாதகமாகவும் அமைந்தது.ஒரு தடவை கைது செய்யப்பட்டு சிறையிலும் தள்ளப்பட்டிருந்தார்.எனினும ்,இவரது வீரமிக்க பேச்சுக்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.இதனால் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு ஹீரோவாகவும் திகழ்ந்தார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை வீழ்த்தி மைத்திரி ராஜ்ஜியத்தை அமைக்க முஸ்லிம்கள் மத்தியில் அதிகம் பிரச்சாரம் செய்தார்.அசாத்சாலி மைத்திரியின் வெற்றியினைத் தொடர்ந்து தோற்றம் பெற்ற தேசிய அரசில் தனக்கென ஒரு இடத்தையும் தக்க வைத்திருந்தார்.இவ்வாறு அசாத்சாலி முஸ்லிம்களிடத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் தான் கடந்த பாராளுமன்றத் தேர்தல் வந்தது.இத் தேர்தலில் ஐ.தே.க சார்பாக போட்டி இட்டு தனது மக்கள் செல்வாக்கை நிரூபிக்க அதிகம் முனைப்புக்காட்டினார்.முஸ்ல ிம் அரசியல் வாதிகள் கண்டியில் அரசியல் முகவரி பெற்று கண்டியை மறந்து செல்வது வழமையாக இருந்தது.இவ்வாறு அசாத்சாலியும் செய்துவிடுவார் என்ற அச்சம் கண்டி மாவட்ட முஸ்லிம்களிடத்தில் இருந்தது.இதன் காரணமாக அசாத்சாலி கடந்த மத்திய மாகாண சபை தேர்தல் காலப்பகுதியில் இதற்குப் பிறகான தனது அரசியல் வாழ்வு கண்டியினூடாகவே அமையும் என்ற உறுதி மொழியை கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு வழங்கியுமிருந்தார்.இதனால் அசாத்சாலி கடந்த பாராளுமன்றத் தேர்தல் கண்டி மாவட்டத்தில் ஐ.தே.க சார்பாக போட்டி இடவே அதிகம் முனைந்தார்.
சில பெளத்த அமைப்புக்கள் கண்டியில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்டியில் ஐ.தே.க சார்பாக இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை மாத்திரமே போட்டி இட அனுமதி அளிக்க வேண்டும் என ஐ.தே.கவிடம் பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருந்தன.இக் கோரிக்கையின் பின்னணியிலேயே அசாத் சாலிக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்ததாகவும் சில கதைகள் அந் நேரத்தில் அடிபட்டன.ஐக்கிய தேசிய கட்சி கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி அமைச்சர் ஹக்கீமிற்கு ஒரு ஆசனத்தை கண்டியில் வழங்கியாக வேண்டும்.கண்டியில் தான் போட்டி இடுவதில் சிறிதும் இடையூறுகள் வந்து விடக் கூடாதென அமைச்சர் ஹக்கீம் அத் தேர்தல் காலத்திற்கு சில நாட்கள் முன்பு கண்டி அஸ்கிரிய பீட மகா நாயக்க தேரர்களையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஏனைய ஒரு ஆசனத்தை அசாத்சாலிக்கு வழங்குவதா? அல்லது அமைச்சர் ஹலீமிற்கு வழங்குவதா? என்ற சிந்தனையில் ஏற்கனவே தாங்கள் அமைச்சை வழங்கி உருவாக்கி வைத்துள்ள அமைச்சர் ஹலீமிற்கு ஒரு ஆசனத்தை வழங்குவதே மிகவும் பொருத்தமானது.அசாத்சாலி ஐ.தே.கவில் நிலைத்திருப்பார் என உறுதியாக நம்பி அவருக்கு ஆசனமும் வழங்க முடியாது.அசாத்சாலியின் பேச்சுக்கள் இனாவதத்தைத் தூண்டும் வகையில் உள்ளதான குற்றச் சாட்டுகளும் அவர் மேலுள்ளது.இது பேரின மக்களின் வாக்குகளை ஐ.தே.கவிற்கு செல்வதைத் தடுத்துவிடலாம் என்ற அச்சமும் பேரின கட்சிகளிடையே உள்ளது.இவைகளே அசாத்சாலி கடந்த முறை ஐ.தே.கவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாமைக்கான காரணங்களாகும்.
ஐ.தே.க கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அசாத்சாலிக்கு ஆசனம் வழங்காமையின் காரணமாக அசாத் சாலி சுயேட்சையாக களமிறங்க முனைந்தார்.அசாத்சாலி கண்டியில் சுயேட்சையாக களமிறங்கும் போது அது கண்டியில் முஸ்லிம் பிரதிநிதித்துவ இழப்பிற்கு காரணமாக அமைந்துவிடும் என்ற அச்சம் முஸ்லிம்களிடையே எழுந்தது.இதன் காரணமாக முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து இதனைத் தடுக்க முனைந்தனர்.இச் சந்தர்ப்பத்தில் இவரை வெளியில் விடுவது ஐ.தே.கவிற்கும் ஆபத்தானது என்பதை நன்குணர்ந்த ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் அசாத் சாலிக்கு தேசியப்பட்டியல் உறுதி மொழியை வழங்கிருந்தனர்.ஐ.தே.க அசாத்சாலிக்கு தேசியப்பட்டியல் வாக்குறுதியை வழங்கிய போதும் அதனை தான் கூறும் இன்னுமொருவருக்கு வழங்கக் கூறிவிட்டு தன்னை ஐ.தே.கவில் கிழக்கிலாவது போட்டி இடச் செய்யுமாறு கோரினார்.அதற்கும் ஐ.தே.க உடன்படவில்லை.தனக்கு தேசியப்பட்டியல் உறுதி மொழி கிடைத்துவிட்டதால் அதனை அவரும் பெரிதாக அலட்டிக்கொள்ளாது ஐ.தே.கவிற்கு ஆதரவாக தனது பிரச்சாரத்தை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தொடர்ந்தார்.
இரண்டிற்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்ற பௌத்த அமைப்புக்களின் கோரிக்கை கண்டியில் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் வரக் கூடாது என்பதனை தெளிவாக கூறுகிறது.இரண்டு நபர்களை தேர்தல் மூலம் களமிறக்கி மூன்றாம் நபருக்கு தேசியப்பட்டியல் கொடுப்பதை அவ் அமைப்புக்கள் ஒரு போதும் விரும்பாது.மேலும்,இவ்வாறு செய்வது அவ் அமைப்புக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவும் அமைந்துவிடும்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பப்பட்ட போதும் பெரு வெற்றி பெறவில்லை.கடந்த தேர்தலில் ஐ.தே.கவிற்கு 13 தேசியப்பட்டியல் மாத்திரமே கிடைத்திருந்தது.இத் தேர்தலில் ஐ.தே.கவுடன் பல சிறு சிறு கட்சிகள் இணைந்து தேர்தல் கேட்டமையால் ஐ.தே.கவிற்கு சொந்தமான நேரடித் தேசியப்பட்டியலின் எண்ணிக்கை குறைவடைந்தது.ஐ.தே.கவில் போட்டி இட்ட முஸ்லிம்கள் பலரும் வெற்றியும் பெற்றிருந்தனர்.முஸ்லிம் கட்சிகளான மு.காவிற்கும் அ.இ.ம.காவிற்கும் தனது தேசியப்பட்டியல் மூன்றையும் ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாயமுமிருந்தது.
ஐ.தே.கவில் போதுமளவான முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதுத்துவங்கள் இருந்ததன் காரணமாக தனது தேசியப்பட்டியலில் ஐ.தே.க இன்னும் முஸ்லிம்களை கவனிக்க வேண்டிய தேவையும் குறைவாகவே காணப்பட்டது.கட்சிகள் தங்களது தேசியப்பட்டியலை பகிரும் சந்தர்ப்பத்தில் அசாத்சாலியின் தனிப்பட்ட வாழ்வில் சில சல சலப்புக்கள் தோன்றி முஸ்லிம்களிடத்தில் அதிருப்தியையும் பெற்றிருந்தார்.இச் சந்தர்ப்பத்தில் இவருக்கு தேசியப்பட்டியல் வழங்குவது ஐ.தே.கவின் வளர்ச்சிக்கு அவ்வளவு உசிதமானதுமல்ல.ஐ.தே.க அசாத்சாலிக்கு தேசியப்பட்டியல் கொடுத்தாலும் அவர் ஐ.தே.கவில் தொடர்ந்திருப்பார் என நம்பவும் முடியாது.அசாத்சாலியின் தேசியப்பட்டியல் பரிந்துரையில் ஐ.தே.கவிற்கு ஜனாதிபதி மைத்திரியின் அழுத்தம் சிறிது இருந்ததாகவும் அந் நேரத்தில் சில கதைகள் உலாவந்திருந்தன.இது ஐ.தே.கவிற்கு இன்னும் அசாத்சாலி மீதான சந்தேகப்பார்வையை அதிகரிக்கச் செய்திருக்கலாம்.இவர் 2013ம் ஆண்டு ஐ.தே.கவில் போட்டி இட்டு மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றி ஈட்டிய போதும் அதன் பின்னர் ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்ரமசிங்கையை விமர்சித்திருந்தார்.இது இச் செயற்பாட்டிற்கான ஐ.தே.கவின் பழி வாங்கலாகவும் இருக்கலாம்.இவைகளே ஐ.தே.கவின் தேசியப்பட்டியலில் அசாத்சாலி புறக்கணிக்கப்பட்டமைக்கான காரணங்களாகும்.எனினும்,தாங் கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது கட்சித் தலைமைகளின் தலையாய கடமையாகும்.ஒரு தலைமை எத்தனை வாக்குறுதிகளை தான் நிறைவேற்றுவது? ஓரிரு தேசியப்பட்டியல் மாத்திரம் கிடைக்கும் என நிச்சயப்படுத்திக் கூற முடியுமான மு.கா,அ.இ.ம.கா ஆகியன கூட பல வாக்குறுதிகளை கொடுத்து தற்போது கல்லில் மலம் கழித்த பூனை போல் முழித்துக்கொண்டிருப்பது நாமறிந்ததே.இதனை வைத்து இது விடயத்தில் ஐ.தே.க எத்தனை சவால்களை எதிர்கொண்டிருக்கும் என்பதை மட்டிட்டுக்கொள்ளலாம்.
ஒரு சமூகம் தங்களது அரசியல் பிரதிநிதித்துவமாக ஒரு குறித்த நபரை விளையாட்டுக்கு தெரிவு செய்வதில்லை.மிக அதிகமாக சிந்தித்தே ஒரு குறித்த நபரை தெரிவு செய்வார்கள்.அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களும் அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.தான் நினைத்த போது பதவிகளை இராஜினாமா செய்து தூக்கி வீச இது ஒன்றும் விளையாட்டு பொருளல்ல.பொதுவாக இலங்கை அரசியலில் பாராளுமன்றத் தேர்தல் வரும் போது மாகாண சபையில் உள்ளவர்கள் அதில் போட்டி இடுவது வழமை.இது பேரினக் கட்சிகளில் தங்கி அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு பொருத்தமாதல்ல.இவர்கள் பாராளுமன்றத் தேர்தலுக்கு போட்டி இடும் போது மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவதற்கு ஏதுவாக அமையும்.அசாத்சாலியின் இராஜினாமாவின் மூலம் அவரின் இடத்திற்கு பேரினத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.இவரின் இச் செயற்பாடு மத்திய மாகாண சபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவக் குறைப்பிற்கு காரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இன்னுமொர ு வகையில் இதனை சித்தரிக்கப்போனால் முஸ்லிம்கள் அசாத்சாலிக்கு வாக்களித்து ஒரு பேரினத்தவரை மாகாண சபைக்குச் செல்ல வைத்துள்ளார்கள்.ஏற்கனவே,கண ்டி மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதானதொரு குற்றச்சாட்டும் உள்ளது.இச் சந்தர்ப்பத்தில் இது சிறிதும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றல்ல.
சேவை செய்யக்கூடியவன் எங்கிருந்தாலும் சேவை செய்வான்.தான் மாகாண சபை உறுப்பினரென்ற பதவியை வைத்துக் கொண்டு தான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியதில்லை என்ற நியாயமே அவர் பக்கத்திலிருந்து வருகிறது.இவ்வாறான வசனங்கள் திரைப்படங்களுக்கு மாத்திரம் பொருந்துமே தவிர நடைமுறைச் சாத்தியமானதல்ல.குறித்த ஒரு பதவியில் இருந்து கொண்டு செய்யக் கூடிய ஒரு சேவையை அப் பதவியில் இல்லாத போது ஒரு போதும் செய்ய முடியாது.ஆனால்,குறித்த பதவியில் இல்லாத போது செய்யக் கூடிய சேவைகளை பதவியில் இருந்து கொண்டும் செய்யலாம்.இவர் இப் பதவியை இராஜினாமா செய்தது சமூக நோக்கத்திற்கானதாக வர்ணிக்க சிறிதும் வாய்ப்பில்லை.இதனை அசாத்சாலி சமூக விடயங்களை மையப்படுத்தி ஐ.தே.கவிற்கு தனது எதிர்ப்புக்களை வெளிப்படுத்துமுகமாக செய்திருந்தாலும் சிறிது ஏற்றுக்கொண்டிருக்கலாம்.இவர ் தனது தனிப்பட்ட சுக போகங்களுக்காக பதவியை இராஜினாமா செய்துள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.தன்னை நம்பி வாக்களித்த மக்களை விட தனது அரசியல் சுக போகங்களே இவருக்கு பெரிதாக தோன்றியுள்ளது.இப்படியான ஒருவரை நம்பி இதற்கு பிறகு மக்கள் வாக்களிக்க தயங்குவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
கட்சி மாறுவது அசாத் சாலிக்கு ஒன்றும் புதிதல்ல.கொழும்பு மாநகர சபை பிரதி மேயராக இருந்த இவர் சு.கவிற்கு கட்சி விட்டு கட்சி தாவி இருந்தார்.2010ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜ பக்ஸவிற்கு ஆதரவாக அதிகம் பிரச்சாரம் செய்தார்.மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இவரால் முக்கிய அரசியல் பதவிகளை சுவைத்துக்கொள்ள முடியவில்லை.இப்படியாக அவரின் அரசியல் வாழ்வு தொடர்ந்து சென்றுகொண்டிருந்த போது முஸ்லிம்கள் மீது மஹிந்த அரசில் வன்முறைகளும் தொடர்ந்தன.இந் நிலையில் மஹிந்த அரசின் பக்கம் நிலைத்திருந்தால் மக்கள் செல்வாக்கை இழக்க வேண்டி வரும் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.இச் சந்தர்ப்பத்தில் 2012ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலும் வந்தது.இவர் இத் தேர்தலில் கிழக்கில் வெற்றி வாகை சூடப்பொருத்தமான மு.காவுடன் கை கோர்த்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கி மிகக் குறுகிய வாக்குகளுக்குள் முடக்கப்பட்டார்.இதன் பிறகு மு.காவானது சு.கவுடன் ஒன்றிணைந்ததை காரணம் காட்டி மு.காவிலிருந்து விலகினார்.இவர் 2013ம் ஆண்டு இடம்பெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.கவில் களமிறங்கி வெற்றி பெற்றிருந்தார்.தேர்வாகியதன ் பிற்பாடு ஐ.தே.கவைப் பற்றி அதிகம் விமர்சனம் செய்தார்.இவ்வாறு அவரது அரசியல் பயணம் சென்று கொண்டிருந்த போது கடந்த ஜனாதிபதித் தேர்தலும் வந்தது.அவ் ஜனாதிபதித் தேர்தலை இலங்கையிலுள்ள பலரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டமை யாவரும் அறிந்ததே.இதில் தானும் ஒருவராக பங்குகொண்டிருந்தார்.இதில் மஹிந்த அணியை வீழ்த்த அதிக பிரயத்தனங்களையும் எடுத்தார்.
இவர் ஒரு போதும் ஒரு கட்சியில் நிலைத்திருந்த வரலாறில்லை என்பது இவரது கட்சி மாறுகைகள் தெளிவாக சுட்டி நிற்கின்றன.ஒரு கட்சி ஒரு குறித்த நபருடைய கொள்கைக்கு நூறு வீதம் உடன்பாட்டுப் போக்கை கடைப்பிடிக்குமென ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.ஒரு சில விடயங்களை குறித்த கட்சிக்குளிருந்து போராடி வெற்றி பெறுவதே சிறந்த ஆளுமைமிக்கவர்களின் பண்பு.இதற்கு பல வரலாறுகளும் உள்ளன.இவர் அடிக்கடி கட்சி மாறுவது இவரது ஆளுமைகளை கேள்விக்குட்படுத்துகிறது.இ வர் எக் கட்சியில் இருக்கின்றாரோ அந்தக் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க தன்னாலான முயற்சிகளை செய்வார்.இவர் முயற்சி செய்து கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என்பதை விட விமர்சனம் செய்து கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என்பது மிகவும் பொருத்தமானதாக அமையும்.இவரை நம்ப வைத்து கழுத்தறுத்த ஐ.தே.கவை இனி விமர்சித்து தள்ளுவார் என்பதில் ஐயமில்லை.இதற்குப் பிறகு இவருக்குள்ள ஒரே ஒரு தெரிவு மைத்திரி அணிதான்.இவ் இராஜினாமா மிகக் குறுகிய காலத்தினுள் வருமென எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தியதாகவே இருக்க வேண்டும்.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சு.க,ஐ.தே.க ஆகியன நேரடியாக மோதவுள்ளன.மஹிந்த ராஜ பக்ஸவின் காலத்தில் முஸ்லிம்களின் ஆதரவை இழந்த சு.க மீண்டும் பூச்சியத்திலிருந்து முஸ்லிம்களின் ஆதரவை பெறுவதற்கான முன்னெடுப்புக்களை செய்ய வேண்டும்.அதற்கு அசாத்சாலி போன்றவர்களை சு.கவில் உள் வாங்குவது பொருத்தமானது.அசாத்சாலி ஐ.தே.கவுடன் முரண்பட்டு வெளியேறுவதால் அசாத்சாலி ஐ.தே.கவை விமர்சிப்பது சு.கவுடனுள்ள உறவிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தாது.
இனியும் அசாத்சாலியின் பருப்பு முஸ்லிம்களிடத்தில் வேகுமென உறுதிபடக் கூற முடியாது.மஹிந்தவை விமர்சித்தமை இவரின் புகழ் உச்சிக்கு செல்ல பிரதான காரணமாகும்.தற்போது மஹிந்த ராஜ பக்ஸவின் ஆட்சி முடிந்து விட்டது.இலங்கையில் தேசிய அரசு நிறுவப்பட்டிருப்பதால் அசாத்சாலி ஒரு கட்சியில் இருந்து கொண்டு இவ் அரசின் பிழைகளை சுட்டிக் காட்டவும் முடியாது.ஒரு கட்சியை விமர்சிப்பது ஏனைய கட்சிகளையும் பாதிக்கும்.தற்போது நல்லாட்சி என வர்ணிக்கப்படும் இவ் அரசிலும் மஹிந்தவின் காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்றது போன்ற அநீதிகள் சில அரங்கேறுகின்ற போது அசாத்சாலியின் வாய் அவைகளுக்கெதிராக திறந்தமையை அறியமுடியவில்லை.இது மக்களிடையே பலத்த விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.பொதுவாக எதிர்கட்சியிலுள்ளவர்கள் ஆளும் அரசை வாய்க்கு வந்தாப் போல் விமர்சிப்பது வழமை.இது போன்றே இவ்வளவு நாளும் அசாத்சாலி மகிந்தவை விமர்சித்துள்ளாரா எனவும் சிந்திக்கத் தூண்டுகிறது.அசாத்சாலியின் தனிப்பட்ட சில பிரச்சினைகளும் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளன.இவரின் பேச்சு வடிவங்களும் மக்களிடையே முகச் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாத்சாலி மஹிந்த அரசை மிக கடுமையாக விமர்சித்த காலப்பகுதிதான் 2012ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியாகும்.இக் காலத்தில் அசாத்சாலி மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா சார்பாக போட்டி இட்ட போதும் மிகக் குறுகிய வாக்குகளுக்குள் முடக்கப்பட்டிருந்தார்.இதில ் இவர் பெற்ற வாக்குகளைக் கூட அவருக்குரிய வாக்குகளாக குறிப்பிட முடியாது.இத் தேர்தலில் மு.கா மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் வழமையாக தக்க வைத்துக்கொள்கின்ற வாக்குகளையே பெற்றிருந்தது.இது இவர் மு.கவின் வாக்குகளில் இவர் நனைந்து கொண்டார் என்பதே கூறி நிற்கின்றது.2013ம் ஆண்டு இடம்பெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க சார்பாக போட்டி இட்டு அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்குத் தெரிவாகிருந்தார்.கண்டி மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் ஐ.தே.கவை ஆதரித்து பழக்கப்பட்டவர்கள்.அவர்கள் கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க விற்கு வாக்களிக்கும் போது அசாத்சாலிக்கும் வாக்களித்தார்கள்.அசாத்சாலி க்கு வாக்களிக்க ஐ.தே.கவிற்கு வாக்களித்தார்கள் எனக் கூற முடியாது.அசாத்சாலிக்கு ஐ.தே.க தேசியப் பட்டியல் வழங்காத போதும் கண்டியில் எதுவித சிறு சல சலப்பும் ஏற்படாமை இதனை மேலும் நிறுவி நிற்கின்றது.அசாத்சாலி எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.கவைப் புறக்கணித்து வேறு முடிவுகளை எடுக்கும் போது சில வேளை அவரது கச்சை அவிழ்ந்து அம்மணம் வெளிப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
குறிப்பு: இக் கட்டுரை 17-03-2016ம் திகதி வியாழக்கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


0 Comments