Subscribe Us

நமது புத்தளம் மாவட்டம் என்பது பல கிராமங்களை கொண்ட, மிகப்பெரிய எல்லை பரப்பை உடைய ஒரு மாவட்டம் ஆகும்.


இந்த மாவட்டத்தில் பல மக்கள் கூலி தொழில் செய்தும், விவசாயம் , மீன்பிடி போன்றவற்றிலும் தான் ஈடுபடுகின்றார்கள். அதிலும் பல குடும்பங்களிற்கு இன்று வரையிலும் வீடு , கிணறு, மலசல கூடம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு அவல நிலையும் காணப்படுகிறது.

எங்களை போல எத்தனை அரசியல்வாதிகள் வந்த போதிலும், எத்தனை கட்சிகள் வந்த போதிலும் மக்களின் குறைகளை பூரண படுத்த முடியாது என்பதே நிதர்சனம் ஆகும், நமது சக்திக்கு உற்பட்ட வகையிலேயே எம்மால் சேவைகளை செய்ய முடிகிறது.

எனவே இந்த நேரத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சில படித்த இளைஞர்கள் இணைந்து சமூக சேவை செய்வதற்கு என்று சில சங்கங்களையும், அமைப்புகளையும் ஆரம்பம் செய்து வைத்திருப்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய ஆறுதலாகவும், சந்தோசமாகவும் உள்ளது. இவர்களை ஊக்கம் கொடுத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளான நமக்கு உள்ளது.

இப்படியான துடிப்புள்ள இளைஞர்கள் ஆரம்பம் செய்திருக்கும் இப்படியான அமைப்புக்களில் பொதுவான ஒரு குறைப்பாடு நிலவுவதை நான் அவதானிக்கிறேன். அதனை சுட்டிக்காட்டுவதும் இவ்விடத்தில் பொருத்தம் என்று நினைக்கிறேன்.

உதாரணமாக ஒரு கிராமத்தில் A,B,C,D,E என்று ஐந்து அமைப்புக்கள் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இந்த ஐந்து அமைப்புக்களும் ஒரே மாதிரியான சேவைகளை செய்வதையே அவதானிக்க முடிகிறது. பெரும்பாலும் சிரமதானம், மருத்துவ முகாம் போன்ற விடயங்களை தான் அதிகம் செய்கிறார்கள்.

இந்த நிலை மாறி நீங்கள் கொஞ்சம் மேல் நோக்கி செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். உதாரணமாக உங்கள் கிராமத்தில் உள்ள ஐந்து அமைப்புக்களும் இணைந்து ,ஒரு அமைப்பில் இருந்து ஒருவர் வீதம் ஒரு பொது அணியை உருவாக்கி கொள்ள வேண்டும்.

இந்த பொது அணியின் முகாமையின் கீழ் ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்கான பொறுப்புக்களை ஏற்க வேண்டும். கல்விக்கு பொறுப்பாய் ஒரு அமைப்பு, சுகாதாரத்திற்கு ஒரு அமைப்பு, வேலைவாய்ப்பு & கல்வி விடயத்திற்கு ஒரு அமைப்பு ,வர்த்தக விடயங்களுக்கு ஒரு அமைப்பு என்று ஒரு கட்டுக்கோப்பின் கீழ் வந்ததன் பின்பு எந்த திணைக்களங்கள், எந்த அமைச்சு, எந்த அரசியல்வாதி மூலம் இவ்விடயங்களை தீர்க்க முடியும் என்கிற முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு அழகிய முறையில் செயல் படும் போது தான் ஒவ்வொரு கிராமமும் கல்வி, சுகாதாரம்.விளையாட்டு, வர்த்தகம் என்று எல்லாதுறையிலும் சிறந்து விளங்கும் என்பதே எனது கருத்தாகும்.இதற்கு நமது உதவிகளும் , ஆலோசனைகளும் என்றும் உண்டு.

கட்சி , இயக்க வேறுப்பாடுகளுக்கு அப்பால் நமது ஒவ்வொரு கிராமத்திலும் இவ்வாறான அமைப்புக்கள் தோற்றம் பெற எனது பிரார்த்தனைகளும் , வாழ்த்துக்களும்.

எஸ். ஆப்தீன் எஹியா
முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்,
உயர் பீட உறுப்பினர்-ACMC

Post a Comment

0 Comments