Subscribe Us

header ads

முஸ்லிம் காங்கிரஸ் என்னும் அரசியல் இயக்கத்தில் பசுந்தோல் போற்றிய போராளிகளும், தியாகிகளும்

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமையை இழந்த ஒரு சமூகம் தங்களது உரிமையை பெற்றுக்கொள்வதற்காக இரண்டு வழிமுறைகளில் போராட்டங்களை மேற்கொள்வார்கள். முதலில் வன்முறையற்ற அரசியல் ரீதியிலான சாத்வீக போராட்டத்தினையும், அது தோல்வியடையும் பட்சத்தில், வண்முறை சார்ந்த ஆயுதப்போராட்டம் மூலம் தங்களது உரிமையினை பெற்றுக்கொள்ள போராடுவார்கள். இந்த இரண்டு வழிமுறைகளிலும் போராடுகின்றவர்களை போராளிகள் என்றே அழைக்கப்படுவர். இதுதான் உலக நடைமுறை. மாறாக ஆயுதம் தூக்கி போராடுகின்றவர்களை மட்டும் போராளிகள் என்று அழைப்பதில்லை. 

அந்தவகையில் முஸ்லிம் மக்களின் உரிமையினை பெற்றுக்கொள்வதற்காக மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்னும் அரசியல் இயக்கத்தினை தோற்றுவித்தார். அதனை மக்கள் மத்தியில் கொண்டுசென்று மக்கள் ஆதரவினை திரட்டுவதற்காக தலைவரும், கட்சி உறுப்பினர்களும் அடைந்த துன்பங்கள் கொஞ்சமல்ல. இவ்வியக்கத்தினை வளர்த்தெடுப்பதற்காக பல உயிர்களும் தியாகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் போராளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். 

இந்த போராட்டம் அன்றைய தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் தலைமையின்கீழ் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. அதனையும் விட அதிகமாக இன்றைய தலைவர் ஹகீம் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பாரிய சவால்களும், சதிவலைகளும், சூழ்ச்சிகளும் இன்றுவரைக்கும் தொடர்ந்து எதிர்நோக்கியவன்னமே இருக்கின்றது. இந்த இரு தலைவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடானது, அன்றைய தலைவர் எதிரிகளுடன் போராடினார். ஆனால் இன்றைய தலைவர் எதிரிகளுடனும், துரோகிகளுடனும் போராடுகின்றார்.
      
முஸ்லிம் காங்கிரசின் இந்த போராட்டத்தில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி உண்மையாக போராடுகின்ற போராளிகள் அதிகம் உள்ளனர். அதுபோல போராளி என்று வேசமிட்டும், போராளிகளுக்குள் நலைந்துகொண்டும் சுகபோகம் அனுபவிப்பதற்கென்று ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கின்றது. இந்த போலி வேஷமிட்ட பேராசைக் காரர்களினாலேயே விமர்சனங்களையும், ஏச்சுக்களையும், கட்சியும் அதன் தலைமையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றது.  

இந்த விமர்சாங்களை கட்சிக்கும், தலைவருக்கும் உரியது என்று பாராமுகமாக இருந்துவிட முடியாது. அப்படியிருப்போமானால் பாதிக்கப்படப்போவது எமது தனித்துவ அரசியல் இயக்கமும், முஸ்லிம் சமூகமுமே.

எமது வீட்டுக்கு ஒரு வேலையை செய்து தருபவர் எந்தவித கூலியும் பெறாவிட்டால் வாழ்நாளில் நாம் அவரை நன்றியுனர்வுடனேயே பார்க்கின்றோம். ஆனால் செய்த வேலைக்கு கூலியை பெற்றுக்கொண்டால் குறித்த நபரை நன்றியுனர்வுடன் நாம் பார்ப்பதில்லை.
அந்தவகையில் வடக்கிலே வன்னியில் இறுத்திக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய அரசு தலையிட்டு அப்போரினை நிறுத்தச் சொல்லியும், அப்போருக்கு இந்திய அரசு ஆதரவு வழங்க கூடாதென்றும் வலியுறுத்தி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் பல இளைஞ்சர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்கள்.  

அப்போது தமிழ் நாட்டு முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி அவர்கள், தற்கொலை செய்து மரணித்த தியாகிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று, நஷ்ட ஈடாக பல லட்சம் ரூபாய்கள் வழங்கினார். ஆனால் முதலமைச்சரினால் வழங்கப்பட்ட நஷ்ட ஈட்டு பணத்தினை பெற்றுக்கொள்ள அந்த குடும்பத்தினர்கள் மறுத்துவிட்டனர்.

தனது சமூகத்துக்காக உயிரை தியாகம் செய்கின்றவர்கள் ஒருபோதும் பணவசதி படைத்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக மிகவும் வறுமை நிலையில் வாழ்கின்றவர்களாகவே காணப்படுவர். அப்படியிருந்தும் தனது ஏழ்மையிலும் கொள்கையினை விட்டுக்கொடுக்காது தியாகி என்ற அந்தஸ்துக்கே மதிப்பளித்தார்கள்.
நஷ்டஈட்டு பணத்தினை பெற்றுக்கொண்டால் மரணித்தவரின் தியாகம் விலை பேசப்பட்டு, அவரது தியாகி என்ற அந்தஸ்து இல்லாமல் போய்விடும் என்றும், மரணித்தவரின் புனிதத்தினை பேணும் பொருட்டுமே, ஏழ்மையிலும் அப்பணத்தினை ஏற்க அக்குடும்பங்கள் மறுத்தது. 

ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற சில சுயநலவாதிகள் தங்களை போராளிகளாகவும், தியாகிகளாகவும் வேசமிட்டுக்கொண்டு, கட்சியினால் கிடைக்கின்ற நலன்களை தகுதியுடையவர்களுக்கு கிடைக்கவிடாமல் தட்டிப்பறித்துக்கொண்டு நன்கு அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியிலிருந்து எதனையும் அனுபவிக்காவிட்டால் மட்டுமே இவர்களை போராளிகள் என்றும், தியாகிகள் என்றும் அழைக்க முடியும். செய்த வேலயையும்விட அதிகமாக கூலியையும் பெற்று, பங்கினையும் பெற்றவர்களை அவ்வாறான எந்தவித புனிதமான பதவியும் கொண்டு அழைக்க முடியாது.  

இன்று கட்சிக்கும், தலைவருக்கும் எதிராக அதிகமாக விமர்சிக்கின்றவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் உரையாடினால், அவர்கள் ஒருபோதும் மு.காங்கிரசுக்கு எதிரானவர்களல்ல. மாறாக தங்களுக்கு முஸ்லிம் காங்கிரசில் இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தினாலேயே அவ்வாறு விமர்சிகின்றார்கள். இவ்வாறானவர்களை கட்சிக்குள் உள்வாங்குவதற்கு போலி வேஷமிட்ட போராளிகளே அதற்கு தடையாக இருகின்றார்கள். 

சிலர் கொழும்பில் இருந்துகொண்டு தலைவருடன் மட்டும் நெருக்கமான உறவுகளை பேணுவதுடன், அடிக்கடி தலைவரை சந்தித்து அவருக்கு பலதரப்பட்ட நெருக்குதல்களை வழங்குவதன் மூலம் கட்சியிலும், அரசியலிலும் பதவிகளை பெற்றிருக்கின்றார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கோ, கட்சிக் கட்டமைப்புக்கோ எந்தவொரு பங்களிப்பினையும் செய்ததில்லை. கட்சியின் நலன்களை மட்டும் அனுபவிக்கின்றார்கள்.  

யுத்தமொன்றின் மூலம் பெறப்படும் வெற்றிப்பொருட்களை எவ்வாறு பங்கிடவேண்டும் என்ற வரையறை இருக்கின்றது. அப்பொருட்கள் முதலில் போராளிகளுக்கு சென்றடைதல் வேண்டும். ஆனால் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கும் எந்தவொரு வெகுமதிகளும் போராளி அல்லாதவர்களுக்கே அதிகம் கிடைக்கப்பெறுகின்றது. இதனால் விரக்தியுற்று இறுதியில் விமர்சிக்கப்படுவது கட்சியும், தலைவருமே.

எனவே பசுத்தோல் போற்றிய புலியாக இருந்துகொண்டு போராளிகள், தியாகிகள் என்ற பெயரில் கட்சிக்கு விமர்சனங்கள் மூலம் வீழ்ச்சியை தேடித்தருபவர்கள் இனங்கானப்படுவதுடன் செயற்திறன் உள்ளவர்களுக்கு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படல் வேண்டும். தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்ற போராளிகள் ஓரம்கட்டப்பட்டு வருகின்ற அதேவேளை இன்னுமொரு கூட்டத்தினர் போராளிகள் என்ற பெயரில் கட்சியின் நலன்களை தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றார்கள். இக்கூட்டத்தினர்களை தொடர்ந்து அரவணைத்து சென்றால் அது எதிர்காலங்களில் கட்சியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமாக இருக்காது என்பதுவே கள யதார்த்தமாகும்.   
         

Post a Comment

0 Comments