கைதிகள் சிறையில் இருந்து கொண்டு தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களில் எண்ணிக்கை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் அதனை தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளும், தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு முன்னர் சிறைச்சாலைக்குள் கைதிகள் குற்றவாளிகள் செல்லிடப் பேசி பயன்படுத்துவதனை நிறுத்த ஜாமர்கள் நிறுவப்பட்டன. எனினும், இந்த ஜாமர்கள் ஊடாக கைதிகளின் செல்லிடப்பேசி பயன்பாட்டை முழுமையாக
நிறுத்த முடியவில்லை.
அண்மையில் நாட்டில் இடம்பெற்று வரும் பல குற்றச் செயல்கள் செல்லிடப்பேசி மூலம் சிறையிலிருந்து போட்ட திட்டங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டவை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அடிக்கடி சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு செல்லிடப்பேசிகளை கைதிகளிடமிருந்து மீட்ட போதிலும், கைதிகளின் செல்லிடப்பேசி பயன்பாட்டை முழுமையாக தடுக்க முடியவில்லை என சிறைச்சாலை திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சிறைச்சாலைகளில் செல்லிடப்பேசி பயன்பாட்டை தடுக்க விசேட திட்டமொன்று வகுக்கப்பட உள்ளதாகவும், தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவுடன் இணைந்து இந்த திட்டத்தை சிறைச்சாலை திணைக்களம் முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments