நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பிரதான பாத்திரமாக செயற்பட்ட அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரரின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் அத்ததஸ்ஸி தேரரின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் அத்ததஸ்ஸி தேரர் நற்குணங்களினால் பௌத்த மக்களிடம் மாத்திரமன்றி, இந்நாட்டில் வாழும் ஏனைய மதத்தினராலும் மதிக்கப்படும் ஒரு சிறந்த முன்மாதிரிமிக்க தலைவராக விளங்கினார்.
அவர் அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரராக நியமிக்கப்பட்டு இன்னும் ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. எனினும், இக்காலப்பகுதிக்குள் அவர் நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
கடந்த காலங்களில் நாட்டில் இனவாத செயற்பாடுகள் அதிகரித்திருந்த வேளை, அதற்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரு பௌத்த மதகுரு என்ற ரீதியில் முஸ்லிம்கள் அவரது சேவையை மறக்கக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
media unit of State Minister of Rehabilitation and Resettlement
0 Comments