முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
எதிர்பார்ப்பினையும் தாண்டி மிகவும் வெற்றிகரமாக
நடைபெற்று முடிந்த முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டை தடுத்து நிறுத்தும்
பொருட்டும், தலைவருக்கு இருக்கின்ற கட்சியின் அதிகாரங்களினை குறைக்கச்
செய்யும்படியும் வலியுறுத்தி பசீர் சேகுதாவூத், ஹசனலி ஆகிய இருவரினாலும் மு.கா.
இன் அதிஉயர் பீட உறுப்பினர்களிடம் சில தினங்களுக்கு முன்பு கையெழுத்து வேட்டை
மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் தலைவருக்கு அதிகாரங்கள் இருக்க
வேண்டும் என்று வலியுறுத்திய இவ்விருவரும், இன்று அதிகாரங்களை குறைக்க
வேண்டுமென்று போர்க்கொடி தூக்குவதற்குரிய மர்மம் என்ன? இவ்விருவருக்கும் பின்னணியில்
யார் இருக்கின்றார்கள்? என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகின்றது.
தேர்தல் ஒப்பந்தத்தின் பிரகாரம் இரு
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை முஸ்லிம் காங்கிரசுக்கு ஐ.தே.கட்சி
வழங்கியிருந்தது. இவ்விரு பதவிகளுக்கும் தன்னை நியமிக்கும்படி பசீர் சேகுதாவூத்,
ஹசனலி ஆகியோர்கள் தனித்தனியே தலைவரை வற்புறுத்தி வந்தனர். தன்னைப்பற்றி மட்டும்
சிந்திக்கும் இவ்விருவரும், கட்சியின் எதிர்காலம் பற்றியும், அனைத்து முஸ்லிம்
பிரதேசங்களுக்கும் அரசியல் அதிகாரம் வழங்குவதன் மூலம் அம்மக்களை திருப்தி படுத்த
வேண்டும் என்றும் பொறுப்புள்ள பதவிகளில் இருக்கும் இவ்விருவரும் சிந்திக்கவில்லை.
கடந்த காலங்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு
வந்த பசீர் சேகுதாவூதுக்கு மூன்று முறைகளும், ஹசனலிக்கு இரண்டு முறைகளும்
தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளும், பிரதி அமைச்சர் பதவிகளும்
வழங்கப்பட்டிருந்தது. இதனால் பலவித நெருக்கடிகளையும், விமர்சனங்களையும் கட்சிக்குள்ளும்,
வெளியிலும் தலைவர் ஹக்கீம் அவர்கள் அவ்வப்போது எதிர்கொண்டிருந்தார். கட்சிக்கும்,
தலைமைக்கும் விமர்சனங்களை தேடித்தரும் இவ்வாறான விசப்பரீட்சையில் எந்தவொரு
கட்சியின் தலைமைத்துவமும் தொடர்ந்து இறங்காது.
கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடும்படி பசீர்
சேகுதாவூத் அவர்களை தலைவர் அவர்கள் அறிவுறுத்தியிருந்தும், தான் மக்கள் செல்வாக்கு
இல்லாதவர் என்பதனை அறிந்ததனால் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியிருந்தார். அத்துடன்
இவர் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான கள்ளத்தொடர்பினை பேணி வந்ததனால்தான் தலைவர்
ஹக்கீம் அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது
தலைவருக்கும், அதியுயர்பீடத்துக்கும் தெரியாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்
பதவியினை மகிந்த ராஜபக்ஸவிடமிருந்து பெற்றிருந்தார்.
கடந்த ஆட்சியில் மகிந்தவின் அரசாங்கத்தினை
விட்டு விலகுவதில் தலைவர் ஹகீம் அவர்கள் கட்சிக்குள் பாரிய சிக்கல்களை
எதிர்கொண்டிருந்தார். முஸ்லிம் மக்களின் விருப்பங்களுக்கும், உணர்வுகளுக்கும்
அப்பால், தனது சுயநலனுக்காக முஸ்லிம் காங்கிரசையும், அதன் தலைவரையும் திசை திருப்ப
பசீர் சேகுதாவூத் எடுத்த எந்தவித முயற்களுக்கும் தலைவர் இடம்கொடுக்கவில்லை. இறுதியில்
முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவின் அரசாங்கத்தினை விட்டு வெளியேறியபோது மகிந்த
ராஜபக்சவுக்கு காதல் கடிதம் எழுதியதுடன், தேர்தலன்று வாக்களிக்க வாக்குச்சாவடிக்கும்
இவர் சென்றிருக்கவில்லை.
பசீர் சேகுதாவூத் அவர்கள் ஏறாவூரையும், ஹசனலி
அவர்கள் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதனால், குறித்த இப்பிரதேசங்களை
பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் முறையே அலிசாகிர் மௌலானா, பைசல் காசிம் ஆகிய
முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
இவ்வாறிருக்கும்போது மீண்டும் அதே ஊரை சேர்ந்தவர்களுக்கு திரும்பத்திரும்ப தேசியப்பட்டியல்
மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், முஸ்லிம் காங்கிரசுக்கு செறிவாக
வாக்களித்தும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கின்ற பிரதேசங்களிலிருந்து
தலைமைத்துவத்துக்கு எதிராக வரயிருக்கின்ற எதிர்ப்பலைகள் எதிர்காலங்களில் கட்சிக்கு
பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது தலைவரின் கணிப்பாகும்.
இவர்களது கடந்தகால சேவைகளை கட்சியும், தலைவரும்
ஒருநாளும் குறைத்து மதிப்பிடவில்லை. அதனாலேயே பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில்
கடந்த காலங்களில் இவர்களுக்கு பல தடவைகள் பதவிகள் வழங்கப்பட்டு தலைவரினால்
கௌரவிக்கப்பட்டார்கள்.
திருப்தியடையாமல் தொடர்ந்தும் தங்களுக்கே எம்பி
பதவியை வழங்க வேண்டும் என்ற இவ்விருவரின் கடுமையான அழுத்தம் காரணமாகவே குறிப்பிட்ட
நாட்களுக்குள் இப்பதவிகளுக்கு உரியவர்களை நியமிப்பதில் தலைமை பாரிய சவாலினை
எதிர்கொண்டிருந்தது. அதனாலேயே தற்காலிகமாக தலைவருக்கு நம்பிக்கையான இருவர்
அப்பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்னர்.
கடந்த பொதுத் தேர்தலில் சற்றும்
எதிர்பாராதவிதமாக திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனது
பிரதிநிதித்துவத்தினை இழந்திருந்தது. அம்மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு
வாக்களித்த இருபத்தியாராயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களையும், கிட்டத்தட்ட
இருபது கிராமங்களில் வாழுகின்ற முஸ்லிம் மக்களையும் திருப்தி படுத்தும் நோக்கில்,
திருகோணமலை மாவட்டம் சார்பாக எம்.எஸ். தௌபீக் அவர்களுக்கு தேசியப்பட்டியல் மூலம்
பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
எஞ்சிய ஒரு உறுப்பினர் பதவியை பாராளுமன்ற
பிரதிநிதித்துவம் இல்லாத மன்னார் மாவட்டத்துக்கும், மட்டக்களப்பு மாவட்டம் என்றால்
ஓட்டமாவடி அல்லது காத்தான்குடி பிரதேசத்துக்கும், அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குவதென்றால்
அது அட்டாளைச்சேனைக்கும் வழங்கப்படும். ஆகவே தங்களுக்கு எப்படியும்
தேசியப்பட்டியல் மூலம் எம்பி பதவி கிடைக்க மாட்டாது என்று இவ்விருவரும் உறுதியாக நம்பியதனால்,
தங்களுக்கு பதவி தராத தலைவர் ஹக்கீமை
எப்படியும் பழிவாங்குவதற்கு புதிய முயற்சிகளில் இவ்விருவரும் இறங்கியுள்ளனர்.
அந்தவகையில் தங்களுக்கு எம்பி பதவி
வழங்கப்படவில்லை என்ற கருத்தினை அதியுயர் பீட உறுப்பினர்கள் மத்தியில் நியாயப்படுத்த
முடியாது என்ற காரணத்தினால், தலைவருக்கு இருக்கின்ற அதிகாரங்கள் குறைக்கப்பட
வேண்டும் என்றும், செயலாளருக்கு மீண்டும் அதிகாரங்கள் பழையபடி வழங்கப்பட
வேண்டுமென்றும் வலியுறுத்தி இவ்விருவரினாலும் முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீட
உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை இடம்பெற்றுள்ளது.
தலைவரை மாற்ற வேண்டுமென்றால் அது எடுபடாது என்ற
காரணத்தினால், அதிகாரக்குறைப்பு என்ற புதிய கோசத்தினை முன்வைத்துள்ளனர். அதிகாரம்
உள்ள தலைவராக ஹகீம் அவர்கள் இருக்கின்றபோதே தீர்மானங்கள் எடுப்பதில் பாரிய தடைகளை
எதிர்கொள்கின்ற நிலையில், அதிகாரமில்லாத தலைவராக இருந்துகொண்டு எதனை சாதிக்க
முடியும்? அதிகாரம் இல்லாத தலைவரை வைத்துக்கொண்டு தங்களுக்கு ஏற்றமாதறி கட்சியை
பேரினவாதிகளின் நிகழ்சிநிரலுக்கு ஏற்ப வழிநடத்துவதற்கும், பதவிகளை அடைந்து
கொள்ளுவதற்கும் ஏதுவாக அதிகாரக்குறைப்பு என்ற கோசத்துடன் களத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த பேராளர் மாநாட்டில் செயலாளரின்
அதிகாரங்கள் குறைக்கப்பட தீர்மானிக்கப்பட்டபோது எம்பி பதவி கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் தானும் சேர்ந்து கையுயர்த்திவிட்டு, இப்போது எம்பி பதவி கிடைக்காது
என்றவுடன் மீண்டும் தனக்கு பழைய அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று ஹசனலி அவர்கள் கோருவதில்
என்ன நியாயம் இருக்கின்றது?
தலைவரினால் பதவிகளும், சொகுசு வாகனங்களும்
வழங்கப்படாத முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீட உறுப்பினர்களை தங்களுக்கு சார்பாக
இவ்விருவரும் திசைதிருப்பியுள்ளார்கள். இதற்காக பெருமளவு பணமும் கையாளப்பட்டிருப்பதாக
அறியக்கிடைக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இவர்களுக்கு பணம் எங்கிருந்து
வந்தது என்ற உண்மை விரைவில் வெளிவரும்.
எனவேதான் காலத்துக்கு காலம் தங்களது
சுயநலத்துக்காக கட்சியையும், சமூகத்தையும் கூறுபோட நினைக்கும் இவ்வாறான போலிவேஷம்
தரித்த சுயனலவாதிகளை மக்களும், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் இனங்கான வேண்டும்.
பதவியாசை பிடித்தலையும் சுயநலவாதிகளுக்காக கட்சியா அல்லது மக்களுக்காக கட்சியா?
தனிநபர்களை திருப்தி படுத்துவதா அல்லது முழு சமூகத்தையும் திருப்திபடுத்துவதா? இதுவே
இன்றைய முஸ்லிம் மக்களின் விடை தெரியாத வினாவாகும்.


0 Comments