இலங்கையில் முதன் முதலாக மலையேறும் வீரர்களான ஜயந்தி குரு மற்றும் ஜோன் பீரிஸ் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு ஏறும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
இதுவரையில் எவரெஸ்ட் மலை உச்சிக்கு இலங்கையர்கள் எவரும் ஏறியதில்லை. இந்நிலையில் இலங்கை வரலாற்றில் புதிய பெயரைப் பதிவதற்கான இந்த சாதனை முயற்சியில் களமிறங்கியுள்ளனர் இவர்கள்.
8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சிக்கு ஏறும் பயணத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
எவரெஸ்ட் மலைச் சிகரமானது இமய மலைத் தொடரின் ஒரு பகுதி. இது நேபாளம் மற்றும் திபெத்தில் அமைந்துள்ளது. இந்த எவரெஸ்ட் மலை உச்சியே உலகின் அதி உயரமான சிகரமாகத் திகழ்கின்றது. இந்த மலை உச்சியை வெற்றிகரமாக அடைந்தவர்கள் சிலரே.
ஜயந்தி குரு உடும்பல என்ற வீராங்கனை மலை ஏறும் வீராங்க னையாக திகழ்வதுடன் 2003ஆம் ஆண்டு தொடக்கம் தொழில் ரீதியான மலை ஏறியாக அறியப்படுகின்றார். இந்தப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த ஜயந்தி, எவரெஸ்ட் மலைக்கு ஏறுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். எமக்கும் அது தெரியும். ஆனாலும் நம்பிக்கையை அதிகமாக நாம் கொண்டு செல்கிறோம். மலை ஏறுவதற்கு எவ்வளவு சக்தி அவசியமோ அதேஅளவான சக்தி இறங்குவதற்கும் அவசியம். எது எப்படியோ எமது இந்தப் பயணத்தை நாம் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவோம் என்றார்.
இது குறித்து ஜோன் பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், நானும் ஜயந்தியும் பல பிற சிகரங்களை ஒன்றாக ஏறி இருக்கிறோம். இறுதி இலக்கான எவரெஸ்ட் மலைச்சிகரத்தை வெற்றி கொள்வதற்காக இருவரும் ஒன்றாகப் புறப்படுகின்றோம்.
எவரெஸ்ட் உச்சிக்கு செல்லவுள்ள முதலாவது இலங்கையர்கள் என்ற கௌரவத்தை நாங்கள் பெருமையாகக்
கருதுகின்றோம். நாட்டிற்காக புதிய சாதனை வரலாறு ஒன்றை படைப்பதற்காக எம்மை நாமே உந்தித் தள்ளுகின்ற இந்த வாய்ப்பினை எண்ணி நாம் மகிழ்கின்றோம் என்றார்.
0 Comments