இன்று முஸ்லிம் காங்கிரஸ் உள்வீட்டு பிரச்சினை ஊடகங்களில்
வெளிவருகின்ற அளவுக்கு உருப்பெருத்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக
போர்க்கொடி தூக்கிய எவரும் எதிர்கால முஸ்லிம் சமூகத்துக்காகவோ, மக்களுக்காகவோ,
முஸ்லிம் மாகான சுயாட்சியை வலியுறுத்தியதோ அல்ல. மாறாக தங்களது சுயநலத்துக்காகவும்,
தனிப்பட்ட பதவிகளுக்காகவும், சொத்து சுகபோகங்களை அனுபவிப்பதற்காக்கவுமே.
அனுபவித்து பழக்கப்பட்டவர்கள் இடைநடுவில் அதனை
இலகுவில் இழக்க விரும்பமாட்டார்கள். அதனால்தான் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தன்னை நியமிக்கும்படி இவர்கள்
தலைமைக்கு அச்சுறுத்தல்களை வழங்கி வருகின்றார்கள். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு
இருக்கின்ற வரப்பிரசாதங்களும், இதர சலுகைகளும் எப்படிப்பட்டதென்று அனுபவித்தவர்களுக்குதான்
புரியும்.
முஸ்லிம் காங்கிரசை கஷ்டப்பட்டு வளர்த்தவர்கள்
நாங்கள்தான் என்றும், தியாகிகள் என்றும், போராளிகள் என்றும், இக்கட்சிக்கு
உரிமையாளர்கலென்றும் எந்தவித கூச்சமுமின்றி கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள் கூறிவருகின்றார்கள்.
அவர்கள் கூறுவது உண்மைதான். ஆனால் இவ்வளவு காலமும் முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக
எதனையும் அனுபவிக்கவில்லை என்றால் அவர்களது கூற்றினை ஏற்றுக்கொள்ளலாம். எப்போது முஸ்லிம்
காங்கிரஸ் அரசியல் அதிகாரத்துக்கு வந்ததோ, அன்றிலிருந்து இன்று வரைக்கும் எதனை இவர்கள்
அனுபவிக்கவில்லையென்று கூற முடியுமா? அனுபவிப்பதெல்லாம் அனுபவித்துவிட்டு இன்று தங்களை
தியாகிகள் என்றும், போராளிகள் என்றும் கூறுவதற்கு எப்படி மனசு வந்தது.
முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு
ஊர்களிலிருந்தும் கட்சியை வளர்ப்பதற்காக ஒவ்வொரு தேர்தல்களிலும் வியர்வை சிந்தி,
ரத்தம் சிந்தி, அடிவாங்கி, சிறைகளில் அடைக்கப்பட்டு, நீதிமன்ற வழக்குகளை
எதிர்கொண்டு, கொலை செய்யப்பட்டு என இன்றும் அவர்களது பெயர்கள் கூட தெரியாமல் ஒவ்வொரு
ஊர்களிலும் எத்தனையோ போராளிகளும் அவர்களது குடும்பத்தினர்களும் இருக்கின்றார்கள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையானவர்கள் இக்கட்சிக்காக பல தியாகங்களை
செய்துவிட்டு எதனையும் அனுபவிக்காமல் சிலர் ஒதுங்கியுள்ளார்கள். சிலர் தொழில்
நிமித்தம் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள்.
இப்படிப்பட்ட சாதாரண நிலையிலுள்ள போராளிகளுடன்
ஒப்பிடுகையில், இன்று பதவிக்காக தன்னை போராளிகள் என்று கூறிக்கொண்டு தலைவரை இக்கட்டான
நிலைமைக்கு கொண்டு செல்பவர்கள் செய்த போராட்டங்களும், தியாகங்களும் என்ன? இவர்கள்
எப்பொழுதாவது இக்கட்சிக்காக வியர்வை சிந்தினார்களா? சிறை சென்றார்களா? அல்லது
இவர்களது பிள்ளைகள்தான் அதனை செய்ததா? ஆனால் போராளிகளின் தியாகத்தில்
வளர்த்தெடுத்த இக்கட்சியிலிருந்து உரிமை கோரிக்கொண்டு தொடர்ந்து அரசியல்
அதிகாரங்களை அறுவடை செய்ததே இவர்களது வரலாறாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசனலி சேர் அவர்களை
ஆரம்பகால உறுப்பினர் என்றவகையில் ஓரளவு ஏற்றுக் கொண்டாலும், தவிசாளராக இருக்கின்ற
பசீர் சேகுதாவுத் என்பவர் யார்? இவரால் இக்கட்சிக்கு செய்த தியாகங்கள் என்ன என்ற
கேள்வி போராளிகள் மத்தியில் எழுகின்றது.
தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் குண்டுத்தாக்குதல்
நடாத்துவதில் பிரபலமடைந்த தமிழ் ஆயுத இயக்கம்தான் ஈரோஸ் இயக்கமாகும். இவர்கள் எப்பொழுதும்
விடுதலை புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டவர்கள். இவ்வியக்கத்தினரால்
முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு பாராளுமன்ற
பதவி வழங்கப்பட்டது.
பாராளுமன்ற பகிஸ்கரிப்பை செய்துவிட்டு, இலங்கை
பாராளுமன்றத்தின் மூலமாக தமிழ் சமூகத்துக்கு எந்தவித உரிமையையும் பெற முடியாது.
எனவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியினை ராஜினாமா செய்யுமாறு
ஈரோஸ் இயக்க தலைமைத்துவம் தனது உறுப்பினர்களுக்கு கட்டளையிட்டது. தலைமைத்துவ
கட்டளையை ஏற்று அனைத்து ஈரோஸ் இயக்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது
பதவிகளை ராஜினமா செய்தார்கள்.
ஆனால் ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினரான பசீர்
சேகுதாவூத் அவர்கள் மட்டும் தலைமைத்துவ கட்டுப்பாட்டினை மீறி தனது பதவியினை
ராஜினாமா செய்யாமல் பாதுகாப்பு தேடி 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் அஸ்ரபிடம் தஞ்சமடைந்தார்.
பசீர் சேகுதாவூத் அவர்கள் ஈரோஸ் இயக்கத்தில்
இருந்து செயற்பட்ட காலங்களில் ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரசை வளர்ப்பதில் பசீர்
சேகுதாவூதினால் பாரிய இன்னல்களையும், இடையூறுகளையும் அவ்வூர் முஸ்லிம் காங்கிரஸ்
போராளிகள் எதிர்கொண்டார்கள். அப்பொழுது இக்கட்சியை அவர் ஏற்றுக்கொண்டதில்லை. பசீர்
சேகுதாவூத் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டபோது அதனை ஜீரணித்துக்கொள்ள முடியாத
முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் பலர் கட்சியில் இருந்து அப்போது வெளியேறினர்.
தனக்கு அரசியல் அடையாளம் தந்த தலைமைக்கு
கட்டுப்பட மறுத்த இவர், தனது தலைமைக்கு கட்டுப்படுவாரா என்ற சிந்தனை தலைவர் அஷ்ரப்
அவர்களிடம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை. பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு கட்சியில் அவ்வளவு
முக்கியத்துவம் மறைந்த தலைவரினால் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் தலைவரின்
மறைவுக்கு பின்பு அதுவும் அதாஉல்லாஹ் அவர்கள் முஸ்லிம் காங்கிரசை விட்டு விலகிய
பின்பு அதாஉல்லாஹ் வகித்த தவிசாளர் பதவிக்கு பசீர் சேகுதாவூத் அவர்கள் தலைவர்
ஹக்கீமினால் நியமிக்கப்பட்டார்.
கட்சியில் எத்தனையோ மூத்த உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக இவருக்கு
இப்பதவி வழங்கப்பட்டது. அத்துடன் இவரை ஒருபொழுதும் சொந்த ஊரான ஏறாவூர் மக்கள்
ஏற்றுக்கொண்டதில்லை. அப்படியிருந்தும் இவருக்கு மூன்று தடவைகள் தேசியப்பட்டியல்
மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி முஸ்லிம் காங்கிரசினால் வழங்கப்பட்டுள்ளது.
தனது பாராளுமன்ற உறுப்பினருக்குரிய
ஓய்வூதியத்தினை பெறும்பொருட்டு, ஓய்வூதியம் பெறுவதற்கான சேவைக்காலத்தினை பூர்த்தி
செய்யும் பொருட்டே குறுகிய காலங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை தலைவரிடம்
கோரியிருந்தார். அதற்கமையவே இவருக்கு முதலாவது தடவையாக தேசியப்பட்டியல் மூலம்
பாராளுமணர் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதன்மூலம் கட்சியை வளர்ப்பதனை விட
தன்னை வளர்ப்பதிலேயே பசீர் அவர்கள் வெற்றி கண்டார்.
முஸ்லிம் காங்கிரசில் பதவி வழங்கி கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்
பலர் இருக்கும்போது இன்று தான்தான் கட்சியின் காவலன் என்றும், கட்சியை வளர்த்தவர்
என்றும், தியாகி என்றும் முழுப் பூசனிக்காயை மறைக்கப்பார்ப்பது வேடிக்கையானதும்,
வரலாற்று உண்மைகளை திரிபுபடுத்துவதுமாகும்.
இன்று முஸ்லிம் காங்கிரசுக்கு செறிவாக
வாக்களித்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியின்றி ஓட்டமாவடி, காத்தான்குடி,
அட்டாளைச்சேனை மக்கள் தங்களது ஊருக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கும்படி
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை விடுக்கின்றனர். அதேவேளை 1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டு வரைக்கும் தொடர்ச்சியாக பெற்று வந்த
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை முஸ்லிம் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் இம்முறை
இழந்து நிக்கின்றது. அத்துடன் வடகிழக்குக்கு வெளியே உள்ள மாவட்டங்களிலிருந்தும்
கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றது.
பரவலாக முஸ்லிம் காங்கிரசின் எதிர்கால
வளர்ச்சியினை கருத்தில் கொண்டு பதவிகளை வழங்க வேண்டிய தேவையும், பொறுப்பும்
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கு உள்ளது. மாறாக தொடர்ந்து ஒருசிலர் மட்டும்
அரசியல் அதிகாரங்களை அனுபவிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் யாருடைய குடும்பச்சொத்தல்ல.
கட்சியும் தலைவரும் எக்கேடு கெட்டாலும்
பரவாயில்லை தங்களது பதவியிலேயே சிலர் குறியாக உள்ளனர். ஆனால் எந்த
சந்தர்ப்பத்திலும் தங்களது ஊருக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்
பதவியினை வழங்குமாறு ஏறாவூர் மக்களோ, நிந்தவூர் மக்களோ கோரிக்கை விடவில்லை. என்ற
உண்மை தலைமைத்துவத்துக்கு நன்கு தெரிந்த ஒன்றாகும்.
எனவே கட்சிக்கு செறிவாக வாக்களித்த மக்களை
திருப்தி படுத்தும் வகையில் பதவிகளை வழங்குவதா? அல்லது கட்சியின் உயர் பதவிகளை
அலங்கரித்துக் கொண்டிருக்கும் தனிநபர்களுக்கு பதவிகளை பங்கிடுவதா என்ற இக்கட்டான
நிலையில் மக்களை திருப்தி படுத்தும் நோக்கிலேயே திரிகோணமலை மாவட்டத்துக்கு ஒரு
தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதுபோல் மீதியாக இருக்கின்ற வெற்றிடத்துக்கும் எதிர்கால
கட்சியின் வளர்ச்சியையும், மக்களின் நன்மையையும் கருத்தில்கொண்டு, தனி நபர்களை
நிராகரித்துவிட்டு சமூகத்தினை திருப்தி படுத்துவதே தலைவருக்கு இருக்கின்ற
கடமையாகும்.
0 Comments