ஆர்.எஸ். மஹி
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், தேர்தலுக்கான காய்நகர்த்தல்களை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.
கடந்த காலங்களில் இனவாத அடக்குமுறைகளை சுட்டிக்காட்டி அரசியல் நாடகத்தை அரங்கேற்றிய முஸ்லிம் தலைமைகளுக்கு இம்முறை தேர்தலின் போது மக்களைக் கவர்வதற்கான பேசுபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், சில சமூகப்பிரச்சினைகளைக் கிழப்பி விட்டு அதன்மூலம் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கான அடித்தளத்தை ஆரம்பித்துள்ளனர் சிலர். இதற்காக சில வங்குரோத்து ஊடகங்களும், சமூகப் பணி என்ற சாயத்தைப் பூசிக்கொண்டு செயற்படும் இணையதளங்களும் இதற்குத் துணைபோயுள்ளன.
அண்மைக்காலமாக முஸ்லிம் அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் கடுமையாக சாடி தமது வாக்குவங்கியை நிரப்புவதற்கு சதிகளை மேற்கொண்ட ஒரு சில வங்குரோத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது எதிர்கால அரசியல் வேட்டைக்காக சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சகோதரி ரிஸானா நபீக் விவகாரத்தை பேசுபொருளாக மாற்றுவதற்கு எத்தனிக்கின்றது.
கடந்த பொதுத் தேர்தலின்போது பிரதான கட்சியொன்று பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் விவகாரத்தை தமது அரசியல் பேசுபொருளாக ப்பயன்படுத்தியது. இறுதியில் அது வெற்றியும் பெற்றது. இதனை உதாரணமாகக்கொண்டு சகோதரி ரிஸானாவின் விவகாரத்தைத் தூண்டி அரசியல் இலாபமடைய முடியும் என ஒருசில முஸ்லிம் தலைமைகள் கனவு கண்டுள்ளன போலும்.
திருகோணமலை, மூதூரைச் சேர்ந்த வறிய குடும்பப் பின்னணியைக் கொண்ட சகோதரி ரிஸானா நபீக், தனது குடும்பக் கஷ்டத்துக்குத் தீர்வுதேடி 2005 மே 4ஆம் திகதி வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக சவூதி பறந்தார்.
அங்கு, எதுவும் அறியாத 17 வயதுச் சிறுமியான ரிஸானா, செய்யாத குற்றத்துக்காக குழந்தையைக் கொலைசெய்ததாக 2005 மே 21ஆம் திகதி குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்று முதல் அவரது விடுதலைக்காக பல தரப்புகளும் பல்வேறு விதத்தில் முயற்சிகளை முடுக்கிவிட்டன. அனைத்தையும் மீறி, 2007 ஜூன் 16ஆம் திகதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
இதனையடுத்து ரிஸானாவின் விடுதலைக்கான போராட்டங்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. மனித உரிமை அமைப்புகளுக்கு நிகராக இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரிஸானாவை விடுதலைசெய்யுமாறு இரண்டு தடவைகள் சவூதி மன்னனிடம் கோரிக்கை முன்வைத்தார். அது தவிர, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸும் கோரிக்கை வைத்தார். எனினும், சவூதி அரசு தனது நிலைப்பாட்டில் சிறு துளியேனும் மாறவில்லை.
ரிஸானாவின் விடுதலைக்கான 8 வருட போராட்டத்துக்கு சாட்டையடியாக 2013 ஜனவரி 9 ஆம் திகதி அமைந்தது. அன்றைய தினம் ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, ரிஸானாவை தண்டனையிலிருந்து மீட்பதற்காக முயற்சி செய்தவர்கள் அவரது குடும்பத்தை கஷ்டத்திலிருந்து மீட்பதற்கு கவனம் செலுத்தினர்.
அரசாங்கம், இராணுவம், சமூக சேவையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பல உதவிகளை ரிஸானாவின் குடும்பத்துக்கு வழங்கினர்.
இவ்வாறான பின்னணியில், அண்மையில் ஊடகம் வாயிலாக ரிஸானாவின் தாயார் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார். இதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பலரையும் சாடி அவர் கருத்துகளை வெளியிட்டிருந்தார். அவரது ஆதங்கத்தில் பல உண்மைகள் பொதிந்திருந்தாலும் அதனுள் சில அரசியல் முடிச்சுகளும் இருப்பதை அது உணர்த்தியது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 10 இலட்சம் ரூபா தருவதாகவும், திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் 50 இலட்சம் ரூபா மற்றும் நகரில் இரு வீடுகள் அமைத்துத் தருவதாகவும் கூறியதாக அத்தாய் கூறியிருந்தார். அது மட்டுமல்லாது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இரண்டு காசோலைகளைத் தந்ததாகவும், அதில் 3 1ஃ2 இலட்சம் ரூபா பொறுமதியான காசோலை செல்லுபடியற்றது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அது தவிர, முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் வீடு கட்டுவதற்காக அடிக்கல் வைத்துவிட்டுச் சென்றார் என்றும் அது நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் அவர் மீண்டும் இப்பகுதிக்கே வரவில்லை என்றும் ரிஸானாவின் தாயார் அங்கலாய்த்திருந்தார்.
அத்தாயின் குற்றச்சாட்டுகள் உண்மையா? பொய்யா? என நாங்கள் நிறுவுவதற்கு முன்னர் இதனைப் பூதாகரமாகக் காட்டி சிலர் அரசியல் இலாபமடைய முற்படுகின்றார்கள் என்பதை உணர வேண்டும்.
சிலவேளை அத்தாய் குறித்த தரப்பினரின் தூண்டுதலினாலேயோ தெரியவில்லை இவ்வாறான கருத்துகளை ஊடகங்களுக்கு வெளியிட்டார் என்பதும் சந்தேகமே.
சகோதரி ரிஸானா மரணித்து மூன்று வருடங்களைக் கடந்துள்ள நிலையில் இப்பிரச்சினை வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஆகவே, இதற்குக் காரணமாக இருந்த ஊடகத்தைப் பாராட்ட வேண்டும். என்றாலும், ஊடக தர்மக் கோட்பாட்டுக்கமைய நடு நிலைமையுடன் இப்பிரச்சினை ஆராயப்பட்டிருப்பின் மேலும் சிறந்தது.
குறிப்பிட்ட சில முஸ்லிம் அரசியல்வாதிகளை தாக்கும் வகையிலும், ரிஸானாவின் குடும்பம் மற்றும் சமூகத்தின் மீதுள்ள குறைபாடுகள் இங்கு சுட்டிக்காட்டப்படவில்லை. இதனாலேயே இது அரசியல் நோக்கத்துக்காக சிலரினால் நடத்தப்படும் அரசியல் நாடகம் என்ற சந்தேகம் மேல் எழுகின்றது.
குற்றம் சாட்டப்படும் அரசியல் தலைமைகளின் தரப்பு நியாயமான பக்கங்களையும் உள்ளடக்கி இருதரப்பு உண்மைகளையும் அலசி ஆராய்வது சிறந்தது என எண்ணுகின்றேன்.
இம்ரான் மஹ்ரூப் 50 இலட்சம் ரூபா தருவதாகவும், தனது பெண் பிள்ளைகளுக்கு சீதனம் வழங்குவதற்காக நகரில் இரண்டு வீடுகள் அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதி வழங்கியதாக அத்தாய் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவ்வாறான அறிவிப்பு ஓர் அரசியல் வாதியினால் வழங்கப்பட்டிருக்குமாயின் நிச்சயம் அது ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். எனினும், இம்ரான் இவ்வாறு மிகப்பெரும் நிதி ஓதுக்கீடு செய்ததாக எந்த ஓர் ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.
அடுத்து, அமைச்சர் ஹக்கீம் 2 இலட்சம், 3 1ஃ2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கியதாகவும், அதில் 3 1ஃ2 இலட்சம் ரூபா பொறுமதியான காசோலை பணம் போடாமையினால் செல்லுபடியற்ற காசோலையாக நிராகரிக்கப்பட்டதாகவும் ரிஸானாவின் தாயார் கூறியுள்ளார். ஹக்கீம் அரசியலுக்கு அப்பால் ஒரு சிறந்த மனிதர். கொடைவள்ளல் என்பது சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். நாடு கடந்து துருக்கியில் அவதிப்படும் சிரிய மக்களுக்காக எந்தவித அரசியல் எதிர்பார்ப்பும் இல்லாமல் கோடிக்கணக்கில் செலவழித்த அவருக்கு 3 1ஃ2 இலட்சம் என்பது துச்சம். 2 இலட்சம் கொடுத்த அவர் மீதிப்பணத்தை வழங்கவில்லை என்று குறைகூறுவது உசிதமல்ல.
முன்னணி முஸ்லிம் அரசியல் வாதியான ஹக்கீம் மிகவும் வேலைப்பளுமிக்கவர் என்பது அனைவரும் அறிவர். ஆகையினால் தான் வழங்கிய காசோலை சிலவேளை மறந்திருக்கவும் வாய்ப்புண்டு என்றும் ஊகிக்கலாம். எது எவ்வாறாயினும், ஹக்கீம் வழங்கிய காசோலை நிராகரிக்கப்பட்ட விடயம் ஊடகம் வாயிலாக அவரே அறிந்துள்ளார். இதனை முன்னரே அவரின் கவனத்துக்கு கொண்டுவந்திருக்கவேண்டிய பொறுப்பு ரிஸானாவின் குடும்பத்துக்கு உள்ளது.
ஹிஸ்புல்லாஹ் 10 இலட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகவும் ரிஸானாவின் தாயார் கூறியுள்ளார். எனினும், இது இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பது நிதர்சனமாகியுள்ளதுடன் இவ்வதந்திக்குப் பின்னால் எவர் உள்ளார்கள் என்பது ஊகிக்க முடியும் – புலனாகியுள்ளது.
ரிஸானாவின் விடுதலை தொடர்பாக முழு மூச்சாக செயற்பட்டவர்களுள் ஹிஸ்புல்லாஹ் முக்கியமானவர். அவர் அவரது நண்பரான சவூதி அரேபிய இளவரசரின் சட்ட ஆலோசகரும் தனவந்தருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸித் என்பவர் மூலமாக சவூதி அரசை நாடினார். இதற்காக வேண்டி அவ்வப்போது சவூதிக்கான தனது வேலைகளைப் புறம்தள்ளிவிட்டு அவர் அங்கு சென்று பேச்சுகளில் ஈடுபட்டார்.
ரிஸானாவின் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியமைக்கு காரணம் ஹிஸ்புல்லாஹ், மசூர் மௌலான உள்ளிட்ட சிலர் அவருக்கு விடுத்த அளுத்தமே. இவ்வாறான பின்னணியில் ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2013.01.12 அன்று இலங்கை விஜயம் செய்த ஹிஸ்புல்லாஹ்வின் நண்பர் யஹ்யாவிடம் அவர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அவர் 10 இலட்சம் ரூபாவை ரிஸானாவின் குடும்பத்துக்கு வழங்குமாறு கூறி ஹிஸ்புல்லாஹ்விடம் கையளித்தார்.
இப்பணத்தை ரிஸானாவின் குடும்பத்தினரிடம் வழங்கி வைப்பற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ‘எனது மகளைக் கொன்ற நாட்டின் பணம் எனக்குத் தேவையில்லை’ என ரிஸானாவின் தாய் ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டார். அன்று அத்தாயின் ஆதங்கம் நியாயமானது. எனினும், இப்பணம் சவூதி அரசுடையது அல்ல என அவருக்கு விளங்கப்படுத்திய போதிலும் அத்தாய் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.
அதனைத் தொடர்ந்து “ரிஸானாவின் தாய் பணத்தை ஏற்காவிடின் அதனை திருப்பி அனுப்புவதாக’ ஹிஸ்புல்லாஹ் பதிலுக்கு அறிக்கை விட்டிருந்தார். இந்நிலையில், தனது நண்பரிடன் விடயத்தை அவர் தெளிவுபடுத்திய போதிலும் அவர் அப்பணத்தை ஏற்க மறுத்ததுடன் அதனை ஹிஸ்புல்லாவின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். அதனால் அப்பணம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில், ஹிஸ்புல்லாஹ் பணம் வழங்குவதாக வாக்குறுதி எதுவும் வழங்காமல் அவர் மீது அபாண்டம் சுமத்தப்பட்டுள்ளமை அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனத்துடிக்கும் ஒருசிலரின் முயற்சிகளின் ஒரு அங்கமாகும் என்பது புலனாகியுள்ளது.
ஹிஸ்புல்லாஹ்வை இல்லாதொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டித்திரியும் அவ்வாறானவர்கள் ரிஸானாவின் தாயாரை பலிக்கடாவாக்கியுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் வீடு கட்டுவதற்காக அடிக்கல் நட்டதாகவும் அதன் பின்னர் அவரை இந்தப்பகுதியில் காணவே கிடைக்கவில்லை என்பதே ரிஸானாவின் தாயாரின் அடுத்த குற்றச்சாட்டு.
அக்குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும் அவ்வாறான ஒரு நிலை ஏன் உருவாகியிருக்கும் என்பதனை நாங்கள் ஆராய வேண்டும்.
ரிஸானாவின் குடும்பத்தினருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கு இராணுவத்தினர் முன்வந்தமையால் சிலவேளை, நஜீப் தான் வழங்கிய வாக்குறுதி ஏதே ஒரு வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதனை நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்காது என எண்ணியிருக்கலாம். ஆகவே நஜீப் தரப்பில் ஆயிரம் நியாயங்கள் உள்ளமை வெளிப்படை.
ரிஸானாவின் தாயாரின் மனக்கவலைகள் உண்மையானது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்றாலும், அவருக்குத் தெரியாமலேயே ரிஸானா நபீக்கின் விவகாரத்தை அரசியல் பேசு பொருளாக மாற்றுவதற்கு சில குண்டர்கள் முயற்சி செய்கின்றனர். கடந்த பொதுத் தேர்தலின்போது திருமலையில் இம்ரான் மஹ்ரூப் மற்றும் மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாஹ்வையும் தோற்கடிக்க முழு மூச்சாக செயற்பட்டவர்களே அவர்கள்.
ரிஸானா இளவயதில் வெளிநாடு சென்றமை தனது குடும்பக் கஷ்டங்களுக்குத் தீர்வு காண்பதற்கேயாகும். அவர் கனவு கண்ட நிலையில் அவரது குடும்பம் இன்று உள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய வீட்டை இராணுவம் அமைத்துக்கொடுத்தது. சகோதரனுக்கு அரசாங்க உத்தியோகம் ஒன்றை டிலான் பெரேரா வழங்கினார். அது தவிர, ஒரு சகோதரி திருமணம் முடித்துள்ளதுடன் மற்றைய சகோதரி தனது கல்வியை புத்தளத்தில் தொடர்கிறார். அவரது மாதாந்த செலவுகளை தனியார் நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுள்ளது.
இவ்வாறான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட போதிலும், மேலும் சலுகைகள் எதிர்பார்க்கப்படுமானால் அது நியாயமற்ற வாதமாகும். நவீன காலத்திலும் சீதனம் எதிர்பார்ப்பவர்கள் இன்னும் இருப்பார்களாயின் அது சமூகப் பிரச்சினை. அதனை நிவர்த்தி செய்ய அச்சமூகம் முன்வர வேண்டும்.
தனது குடும்பப் பிரச்சினைகளை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் முறையிடும் ரிஸானாவின் குடும்பம் ஏன் பொறுப்பு வாய்ந்த சமூக நிறுவனங்களிடம் முறையிடவில்லை? ஜமிஇயதுல் உலமா, ஷூறா சபை, முஸ்லிம் கவுன்சில் என பல்வேறு அமைப்புகள் செயற்படுகின்றமை அவர் அறியவில்லையா? இவ்வாறான கேள்விகளை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
அப்பாவியான ரிஸானாவின் குடும்பத்துக்கு நல்லது செய்யும் போர்வையில் தனது அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ள கட்சிகள் மக்களால் வெகுவிரைவில் இனங்காணப்படுவார்கள். இவ்வாறான அரசியல்வாதிகள் முகவரியற்றவர்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
0 Comments