Subscribe Us

header ads

முஸ்லிம் பள்ளிவாசல்களும் முஸ்லிம் திணைக்களமும்.


இலங்கையிலுள்ள மிகவுமே வினைத்திறன் குன்றிய அரச திணைக்களமாகக் கருதப்பட்ட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சமகாலத்தில் ஓரளவு வரவேற்கத்தக்க ஆரோக்கியமான மாற்றங்களோடு தனது செயற்பாட்டுப் பரப்பெல்லையை விஸ்தீரப்படுத்திக் கொண்டு நாடளாவிய ரீதியில் செயற்பட்டு வருவதனை அவதானிக்க முடிக்கின்றது. இலங்கையிலுள்ள மஸ்ஜித்களின் பரிபாலனம் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ள மேற்படி திணைக்களத்தினால் பேணப்பட்டு வரும் "வக்ப் பிரிவு" ஒரு காலத்தில் அறவே வினைத்திறன் குன்றிய, முழுக்க முழுக்க பக்க சார்பாக செயற்படுகின்ற, கடந்த கால அமைச்சர்களின் தலையாட்டி பொம்மையாக செயற்படுகின்ற பிரிவாகக் காணப்பட்டாலும்,சமகாலத்தில் அதன் செயற்பாடுகளிலும், முன்னெடுப்புக்களிலும் நம்பிக்கை ஔிக்கீற்றுக்கள் ஏற்பட்டு வருகின்றது. அந்தவகையில், ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களிலும் பெரும் பிரச்சினைகளைக் கிளப்புகின்ற பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தெரிவினை முழுக்க முழுக்க ஜனநாயக ரீதியில் ஊர்மக்களாலேயே வாக்களிப்பு அடிப்படையில் மிக நீதமாக தெரிவு செய்வதற்கான ஏற்பாட்டினை நிறுவனத்தின் மஸ்தியத்துடனேயேமேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படடு வருகின்றன. இது மிகவுமே வரவேற்கத்த ஒரு அம்சமாகும். மேலும் பள்ளிவாசல் முன் பதிவு செய்யப்படும் செயலாக்கமும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். 

ஆனால் இதனையும் தாண்டிய ஆக்கபூர்வமான சட்ட திட்டங்கள் மஸ்ஜித் ஒழுங்குகள் மற்றும், மஸ்ஜித் நிர்வாகிகளின் தகைமைகள் தொடர்பில் திணைக்களத்தினால் வகுக்கப்படல் வேண்டும். இதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, இஸ்லாமிய இயக்கங்கள், தரீக்காக்கள், இஸ்லாமிய நிறுவனங்கள், ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அரசியற் கட்சிகளின் பங்களிப்பும் பெறப்படல் வேண்டும். எமது மஸ்ஜித்கள் தொடர்பில் தேசிய ரீதியான பொதுவான யாப்பு ஒன்றின் தேவை இன்றியமையாதது. மஸ்ஜிதுக்கு தொழுகையை நிறைவேற்ற வருகின்ற பொது மக்கள் தொடக்கம் மஸ்ஜித் நிர்வாகிகள் வரையிலும் பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள் தொடர்பில் தௌிவான வரையறைகள் உருவாக்கப்படல் வேண்டும்.

தொழுகை்காகவும், இன்னபிற இபாதத்துக்களுக்காகவும் மஸ்ஜிதை நோக்கிப் போகின்ற நாம் அங்கு மோட்டார் சைக்கிள்களையும், துவிச்சக்கர வண்டிகளையும், ஆட்டோக்களையும் நிறுத்தி வைக்கின்ற விதத்தை வைத்தும், செருப்புக்களை கைழட்டி வைக்கும் விதத்தை வைத்தும், எமது ஐங்காலத் தொழுகைகள் எம்மில் எந்தவிதமான ஒழுங்குமனப்பான்மையினையோ, சீர்திருத்தத்தினையோ, அழகுணர்ச்சியினையோ ஏற்படுத்தவில்லை என்று அடித்துச் சொல்லலாம். தொழுகைக்காக பள்ளிக்குச் செல்லும் சாதாரண பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்தி வைக்கும் முறை, வௌ்ளிக்கிழமை ஜூம்ஆ முடிந்து களைந்து செல்லும் முறை, பள்ளி வளாகத்தினுள் ஏனைய ஒழுக்கங்களை கடைபிடிக்கின்ற முறைகள் அனைத்தும் யாப்பாக வரையப்படல் வேண்டும். அதே போன்று பள்ளி நிர்வாகிகளின் தகைமைகள், அவர்களது கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் வகிபங்குகளும் யாப்பாக வரையப்படல் வேண்டும்.

அத்தோடு, பள்ளி நிர்வாகிகளின் பரப்பெல்லையும், அதிகாரமும் மஸ்ஜித் வளாகத்தைத் தாண்ட வேண்டும். ஊருக்கான தலைமைத்துவத்தை வழங்கல், ஊரில் நடக்கும் குற்றங்களைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், கல்வி மற்றும் பாடசாலைகளை நோக்கியதான செயற்பாட்டு முன்னெடுப்புக்கள் பற்றியும் அந்த யாப்பில் இடம்பெறல் வேண்டும். ஏனெனில், பெரும்பாலான பள்ளி நிர்வாகிகள் தமது செயற்பாட்டுப் பரப்பாக மஸ்ஜித் வளாகத்தை மாத்திரமே எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். பள்ளியை உடைத்துக் கட்டுவதும், பெய்ன்ட் பூசுவதும், அழகுபடுத்துவதும், இமாமுக்கும், கதீபுக்குமான மாத சம்பளத்துக்கான ஏற்பாடுகளை செய்வதும் தான் தமது கடமை என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். மஸ்ஜிதை மையப்படுத்திய கல்வி, பொருளாதார , சமூக செயற்பாடுகளை எவ்வாறு ஊராரினதும், அரசினதும் பங்களிப்போடு மேற்கொள்வது என்ற வழிகாட்டல்களையும் குறித்த யாப்பினூடாகவே தௌிவுபடுத்த வேண்டும்.

மஸ்ஜித் நிர்வாகிகள் முழுக்க முழுக்க நீதம் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். சுன்னத் வல் ஜமாஅத் என்ற அடிப்படையில் தரீக்காக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டே மஸ்ஜித் நடவடிக்கைகள் அமையப் பெறல் வேண்டும். தரீக்கா அமைப்புக்கள் தமது வழமையான திக்று மஜ்லிஸ்கள், கந்தூரி வைபவங்களை எந்தவித இடையூறுகள், தடையுமின்றி நடாத்திச் செல்வதற்கான ஏற்பாடுகள் மஸ்ஜிதில் இருக்க வேண்டும். அதே போன்று தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி போன்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கும் தமது தஹ்வா நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும். சுன்னா சார்ந்த வேறுபாடுகளை தான் கொண்ட கருத்தின் அடிப்படையில் செயலாற்ற அனைவருக்கும் உரிமை வழங்கப்படல் வேண்டும். ஜனாஸா ஒன்றின் போது, ஜனாஸாவை ஓதிக் கொண்டு சுமந்து வருவதா, அமைதியாக கொண்டு வருவதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க குறித்த குடும்பத்துக்கே முழு உரிமையும் வழங்கப்படல் வேண்டும். குனூத் ஓதுவதா அல்லது ஓதாமல் விடுவதா? கூட்டு துஆவுக்கு கையேந்துவதா? தனியாகத் கேட்டுக் கொள்வதா? தொப்பி அணிவதா இல்லையா என்பது போன்ற சின்னச் சின்ன விடயங்களில் தனது கருத்துக்கேற்ப செயலாற்ற அனைவருக்கும் உரிமை இருக்க வேண்டும். இங்கு விட்டுக் கொடுப்பின் தேயைும், புரிந்துணர்வின் அவசியமும் அதிகமாக வலியுறுத்தப்படுகின்றது. நான் இங்கு விட்டுக் கொடுப்பு என்று சொன்னது, எமது கருத்தை விட்டுக் கொடுப்பதல்ல, மாறாக மற்றவர்களின் கருத்துக்களையும் அங்கீகரிப்பதே.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை பற்றி அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் அது மஸ்ஜிதை மையப்படுத்தியே சாத்தியமாகும். அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களுக்கும், தரீக்காக்களுக்கும் சுதந்திரமாக செயற்படும் விதத்தில் மஸ்ஜித்தகள் கட்டமைக்கப்பட்டால் அனைத்து சாராரும் பள்ளியில் சந்தித்துக் கொள்வார்கள். முகமன் கூறிக் கொள்வார்கள். இல்லாவிட்டால், பிளவும், தெருவுக்குத் தெரு பள்ளிவாயல்களின் அதிகரிப்புமே ஏற்படும். இல்லாமல்,  எவ்வளவுதான் கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் மிம்பரில் இருந்து ஜம்இய்யதுல் உலமாவின் குரலாக "ஒற்றுமையினதும்ஒருமைப்பாட்டினதை தேவையை தேசமெங்கும் பெரும் உறுக்கத்துடன் வலியுறுத்தினாலும் அது ஏற்படப் போவதில்லை.

கடைசியாக, அகீதாவுக்கு வேட்டு வைக்கும் ஷீஆயிசம், காதியானிசம், அத்வைதம் போன்ற விசக் கொடிகள் சற்றும் துளிர்விடாமல் பள்ளி நிர்வாககங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments