தற்போதைய காலப்பகுதியில் அதிகளவான இணையத்தளங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. ஆனால், இணையத்தளங்களை பதிவு செய்வதன் மூலம் அவர்களுக்கான உரிய அந்தஸ்த்து கிடைக்கும் என்று பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது ஏராளமான இணையத்தளங்கள் காணப்படுகின்றன. இதில் பதிவு செய்யப்படாமல் பல இணையத்தளங்கள் உள்ளன. சில இணையத்தளங்கள் செய்திகளை வழங்குகின்றன.
மேலும், சில இணையத்தளங்கள் சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகின்றன.
ஆனால் இவை அனைத்தும் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்படாமல் காணப்படுகின்றன. இவற்றை பதிவு செய்வதன் மூலம் குறித்த இணையத்தளங்களில் கடமையாற்றுவோருக்கு உரிய அந்தஸ்த்தும், அங்கீகாரமும் கிடைக்கும்.
இதேவேளை, செய்தி வெளியிடும் ஒரு இணையத்தளமாக இருந்தால் அதில் செய்தி தயாரிப்போருக்கு ஊடகவியலாளர் என்ற அந்தஸ்த்தும், அவருக்கு ஒரு அடையாள அட்டையும் கிடைக்கப்பெறும். மேலும் அவர்களுக்குரிய பாதுகாப்பும் கிடைக்கும்.
அரசின் இவ்வாறான செயற்பாடுகளால் எந்தவிதமான இடையூறுகளுமின்றி, தமது பணிகளை செய்யலாம். என ஊடக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்தனர். மேலும் ஒரு ஊடகவியலாளர் “இது ஒரு திட்டமிட்ட செயற்பாடாகும். அரசுக்கு எதிராக பதிவேற்றப்படும் செய்திகளை முடக்குவதற்காகவே இவ்வாறு ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசு தீர்மானித்துள்ளது.” என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர், இது தவறான கருத்தாகும். எமது நல்லாட்சி அரசு ஒருபோதும் ஊடக சுதந்திரத்திற்கு தடை விதிக்காது ஊடக சுதந்திரத்திற்கு இடையூறுகளையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார்.
மேலும், இணையத்தள பதிவு சம்பந்தமாக 2 வழக்குகள் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதற்கன தீர்வு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்தத் தீர்ப்பில் பதிவு செய்யப்படாத அனைத்து இணையத்தளங்களையும் ஒரு உரிய கோவையின் கீழ் பதிவு செய்யுமாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
0 Comments