வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் வீடு, ஏலத்திற்கு விடப்படுகிறது. ஆரம்ப விலை ரூ.150 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது, வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது சி.பி.ஐ. அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 -ம் தேதி இங்கிலாந்துக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்தியாவுக்கு நான் இப்போது திரும்ப வாய்ப்பு இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மும்பை கிங்ஃபிஷர் வீட்டை எஸ்.பி.ஐ. இன்று ஏலம் விடுகிறது. தற்போது கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு கடனாக கொடுத்த ரூ. 6,963 கோடியை மீட்கும் நடவடிக்கையாக மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள அவருடைய கிங்ஃபிஷர் வீட்டை எஸ்.பி.ஐ. ஏலம் விட உள்ளது. ஆன்-லைனில் வீடு ஏலத்திற்கு விடப்படுகிறது. வீட்டின் ஆரம்ப மதிப்பு ரூ. 150 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏலம் ரூ.5 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ரூ. 15 லட்சம் கணக்கில் டெபாசிட் செய்திருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் வெற்றிபெற்ற எஸ்.பி.ஐ. , கடந்த பிப்ரவரி மாதம் விமான நிலையம் அருகே உள்ள கிங்ஃபிஷர் வீட்டை தன்வசம் கொண்டுவந்தது. இதேபோன்று கோவாவில் உள்ள ரூ.90 கோடி மதிப்பிலான கிங்ஃபிஷர் வில்லாவையும் ஏலத்தில் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments