Subscribe Us

ஒரு சாராருக்கு தேவை - விழிப்புணர்வு , ஒரு சாராருக்கு தேவை -சமூக உணர்வு..

சுகாதார பரிசோதனை அதிகாரிகளால் கடந்த வாரம் எனது கடையில் சில குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு வர சொல்லி இருந்தார்கள் .

எனக்கு வந்த குற்றச்சாட்டு என்னவெனில் சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்த இனிப்பு பண்டம் விற்றமை ,

அடுத்து பொறியல் பொருள் ஒன்றின் மீது பெயர் குறிக்க படாமை , நிறங்களின் பெயர் குறிக்கபடாமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது . இதன் பிரகாரமே நான் அங்கு சென்று இருந்தேன் ...


அங்கு சென்ற பின்பு சில விடயங்களை காண முடிந்தது ...

*ஒரு வியாபாரி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேரீத்தம் பழங்களை மொத்தமாக வாங்கி வந்து புத்தளம் வைத்து விற்பனை செய்துள்ளார் . இந்த பழம் பொதியிடப்பட்ட பெட்டியில் தமிழ்,சிங்கள மொழியில் லேபல் இல்லை - இது ஒருவருக்கு கூறப்பட்ட குற்றச்சாட்டு .

*அவித்த முட்டைகளை உரிக்காமல் வைத்து இருந்தாராம் ஒரு சாப்பாடு கடை உரிமையாளர் - இவருக்கும் ஒரு குற்றச்சாட்டு

*உணவு பொருள்களுக்கு எழுத்துக்கள் உள்ள பத்திரிகையை விரித்து இருந்தாராம் ஒருவர் - அவருக்கும் ஒரு குற்றச்சாட்டு .

*இன்னொரு வியாபாரி குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்த ஐஸ்கிரீமில் உள்ள லேபல் கழன்று , பெட்டிக்குள் கிடந்துள்ளது - அவருக்கும் ஒரு குற்றச்சாட்டுஇப்படி பலருக்கும் பல குற்றச்சாட்டுக்கள் , பல ரூபாய்கள் தண்டப்பணம் , இதில்லாமல் வேறாக சட்டத்தரணிகளுக்கு ஒரு கொடுப்பனவு .

ஆக மொத்தத்தில் நமது ஊர் வியாபாரிகளின் பல இலட்சம் பணம் அரசிற்கு செல்கிறது ... காரணம் என்ன ?

இது தான் நான் எடுத்துக்கொண்ட கருப்பொருள் .

எந்த ஒரு நபரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றோ ? அரசிற்கு பணம் கட்ட வேண்டும் என்றோ வீம்புக்கு வியாபாரம் செய்வதில்லை .

அல்லது வருகின்ற அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிக்கலாம் , சாராயத்திற்கு சல்லி கொடுத்து நமது குற்றச்சாட்டை விடுவிக்கலாம் என்று நினைப்பதும் இல்லை .

மாறாக இந்த பாமர வியாபாரிகளில் அதிகமானோருக்கு இது தொடர்பிலான போதிய விழிப்புணர்வு கிடையாது .

நாளுக்கு , நாள் நம் நாட்டில் மாறுகின்ற சட்டங்கள் தொடர்பிலான அறிவு கிடையாது ..

அவர்களுக்கு இவ்வாறான விழிப்புணர்வு இல்லாமலும் , அறிவுரைகள் இல்லாமலும் தான் மாட்டிக்கொள்கிறார்கள் என்பது தான் வெள்ளிடைமலை .
இதற்கு நாம் செய்யவேண்டியது அரசின் சட்டதிட்டங்களை விமர்சிப்பதை விடவும் , அவ்வாறான சட்டங்களை யாரை அணுகி பெற்றுக்கொள்வது என்பதே ஆகும் .

இப்போது இதை யார் செய்வது ? எனும் ஒரு கேள்வி எழுகிறது ...

*நமது ஊரை பொறுத்தளவில் வர்த்தக சங்கம் எனும் பெயரில் ஒரு சங்கம் உள்ளது , ஆனால் அவர்களின் செயல்பாடுகள் என்பது மக்களுக்கு ஒரு சதவீதம் கூட இல்லை . இப்படியான சங்கங்கள் தான் இந்த வியாபாரிகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் . சுகாதார திணைக்களம் / உணவு திணைக்களம் என்பவற்றின் ஊடாக இவர்களின் பிரச்சனைகளை நிவர்த்திக்க வேண்டும் .

*அதை போன்று நமது ஊரிலே இருக்கின்ற சமூகம் சார் அமைப்புகளும், சிவில் அமைப்புக்களும் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுக்கலாம் .
*அது இல்லாமல் புத்தளம் இன்சைட் எனும் ஒரு அமைப்பினரும் உள்ளனர் , இவர்களில் 53 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாய் உள்ளனர் . இவர்களிடம் ஆளணி வளமும் ஓரளவு உள்ளது , கடந்த காலங்களில் வியாபார அபிவிருத்தி , வரி தொடர்பிலான சட்டங்கள் தொடர்பிலான கருத்தரங்குகளையும் இவர்கள் செய்தார்கள் . இவர்களாலும் இப்படியான நிகழ்வுகளை செய்யலாம் .

*ஊரில் உள்ள அரசியல் தலைமைகளும் நமது மக்கள் வீணாக மாட்டிகொண்ட பின்பு பேசுவதை விடவும் , மாட்டிகொள்வதற்கு முன்பு எவ்வாறான விடயங்களில் அக்கறை கொள்ள வேண்டும் எனும் விழிப்புணர்வு நிகழ்வுகளை செய்துக்காட்டலாம் .

மேலே நான் குறிப்பிட்ட அமைப்புக்கள் இவ்வாறான விடயங்களை முன்னெடுக்கும் நேரம் , வியாபாரிகளும் ஒத்துழைப்புக்களை வழங்குதல் வேண்டும் என்பதும் கவனிக்கபட வேண்டிய ஒரு அம்சமாகும் .

Post a Comment

0 Comments