மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஏதோ இனம்புரியாத ஒரு பொருளாதார பின்னடைவும், தொழில்துறை மற்றும் கட்டுமான துறையில் பாரிய வீழ்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு நிலைமையும் உருவாக்கப்பட்டுள்ளது நிச்சயம் வெளிநாட்டு வேலையாட்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சமீபத்திய பல மாபெரும் கட்டுமான ஜாம்பவான் நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் உணர்ந்து கொள்ளக்கூடியதாய் உள்ளது.
இந்த நிலை மீண்டும் ஒரு இயல்புக்கு திரும்புதல் என்பது ,கச்சா எண்ணெயில்தான் தங்கி உள்ளது என்பது மிகவும் ஆபத்தான ஒரு விடையமாகும். உலக சந்தையில் கச்சா எண்ணையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி ,என்னைப்பொறுத்தவரை மீள முடியாத ஒரு நிலையில்தான் உள்ளது. அப்படி மீண்டும் எழுந்து வந்தாலும், அது முன்போல ஒரு விலைக்கு விற்க முடியுமா என்பது கேள்விக்குறியே!!
இந்த நேரடி பொருளாதார தாக்கத்தின் விளைவை சகல மட்டத்திலும் உள்ள நிறுவனங்கள் இங்கு உணர ஆரம்பித்துள்ளதை அந்த நிறுவனங்களின் சமகால ஆட்குறைப்பு மற்றும் நிதிப்பற்றாக்குறை மூலம் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும்.
இருந்தும், எண்ணை வளமிக்க நாடான சவுதி, சமீபத்திய கச்சா எண்ணை வீழ்ச்சி மூலம் நேரடியாக பாதிக்கப்பட்டாலும் இந்த பாதிப்பு அந்நாட்டு அரசை மற்றும் மக்களை சற்று விழிப்படைய செய்து தமது பொருளாதார அடைவை கச்சா எண்ணை தவிர்த்து வேறு கருப்பொருளில் கவனத்தை மேற்கொள்ள தூண்டியுள்ளது என்பதை அதன் சமீபத்திய கல்விக்கொள்கை, சுற்றுலா, விவசாயம் போன்ற விடயங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால், இங்கு ஏற்படப்போகும் பொருளாதார வீழ்ச்சி என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிநாட்டு வேலையாட்கள் மீதே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சற்று கவலையான செய்திதான்.
மத்தியகிழக்கு நாடுகளின் ஒவ்வொரு அபிவிருத்திட்கும் பின்னால் உள்ள இந்த வெளிநாட்டு மக்கள் இப்போது செய்வதறியாது, தாம் கைவிடப்பட்டு விட்டோமே என்ற மனப்பான்மையில் இருப்பதை கண்ணால் காணும்போது எதிர்காலம் குறித்த அச்சம் மெதுவாக எங்கோ ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
-A.W.Hussain-


0 Comments