முன்னாள் ஜனாதிபதி மதிப்புக்குரிய மஹிந்த ராஜபக்ஷ அவர்களே,
உங்களது மகனைக் கைது செய்ததற்காக உங்கள் கண்களில் கண்ணீர் பனிக்கிறது.
ஒரு தாயாக… உங்கள் மனைவி தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார்.
சிறிய தந்தை ஸ்தானத்தில், உங்கள் சகோதரர்கள் உங்கள் மகனுக்காக நீதிமன்றில் வந்து காத்துக் கிடக்கிறார்கள்.
இன்றுதான் நீங்கள் எல்லோரும் குழந்தைப் பாசத்தைக் குடும்பத்தோடு உணர்கிறீர்கள் போலும்.
வசீம் தாஜுதீனின் தந்தைக்கும் உங்களைப் போலத்தான் கண்கள் இருந்திருக்கும்.
இரவு பகல் தூங்காது அந்தக் கண்களும் குளம் குளமாய்க் கண்ணீர் வீட்டிருக்குமே…வசீமின் தாயும் பெற்ற வயிறு பற்றியெரிய அழுது துவண்டிருப்பாரே…. எத்தனை வருஷமாச்சு…?
லசந்த விக்ரமசிங்கவின் மனைவியின் ஏக்கம், இதயம் முழுக்கவும் தன் கணவனுக்காக கோட்டை கட்டியிருந்த காதல்…
எக்னெலிகொடவின் மனைவி, குழந்தைகளின் பரிதவிப்பு. துடிப்பு, ஏக்கம், கண்ணீர், இயலாமை, ஆற்றாமை….
தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள்மீது பிரயோகிக்கப்பட்ட காட்டு மிராண்டித்தனங்கள்…
இப்படி… உமது ஆட்சிக்காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளையும், குழந்தைகள் பெற்றோர்களையும், மனைவிகள் கணவர்களையும்…ஏன், வாழ்வின் ஆதாரங்களையும் இழந்தது அதிகம்தான்…
அப்போது நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும்…ஒரு ஆட்சியாளராக, ஒரு தந்தையாக…ஒரு கணவராக…நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும்.
அதிகார மமதையிலும் போதையிலும் அப்போது இருந்தீர்கள்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த ஆணவத்தில் தொடர்ந்தும் ஆட்சியில் அமர்ந்திருக்க இயலும் எனக் கருதினீர்கள். சட்டத்தை குடும்பம் சகிதம் துஷ்பிரயோகம் செய்தீர்கள்…
இப்போது சட்டம் யாவருக்கும் பொது என்கிற அடிப்படையில் தன் கடமையைச் செய்யும்போது… கலங்குகிறீர்கள்.
வலிக்குதா?
இந்த வலியின் உக்கிரத்தை நீங்கள் உணரத்தான் வேண்டும்…ஒரு தந்தையாக, கணவராக, ஒரு ஆட்சியாளராக.
– ஹம்தா மொஹம்மட் நவாஸ் என்பவரின் முகநூல் மடல் திருத்தங்களுடன் இங்கு பிரசுரமாகியுள்ளது.


0 Comments