யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் என அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய பிரபு ஒருவரின் மகன் கைதானமையை தாங்கிக் கொள்ள முடியாத பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் எனவும் அதற்கு தடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்…
பதவி விலகப் போவதாக கூறி தொடர்ந்தும் ஊடக கண்காட்சி நடத்த வேண்டியதில்லை. பதவி விலக விரும்புவோர் தங்களது பெயர்களை உடனடியாக வெளியிட வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் அனைவருக்கும் சமமானது. யாரேனும் சட்டத்தை மீறினால் தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி எந்த நேரத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கத் தயார். புதிய முறையில் நடத்தினாலும் பழைய முறையில் நடத்தினாலும் எமக்கு அது பிரச்சினையில்லை
ஆட்சி அதிகாரமின்றியே நாம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை, நாடாளுமன்றம், மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்தை மஹிந்த வைத்திருந்த போது அவரை தோற்கடித்தோம்.
புதிய கட்சி அமைத்தாலும் எதிர்க்கட்சிக்கு முன்னேற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை.
பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். எனினும் மக்கள் நல்லாட்சியை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
0 Comments