Subscribe Us

header ads

இலங்கை முஸ்லிம்களை புறக்கணிப்பது பேரின வாதிகளுக்கு ஒன்றும் புதிதல்ல தெளிவான புறக்கணிப்புக்கள்


இலங்கை முஸ்லிம்களை புறக்கணிப்பது பேரின வாதிகளுக்கு ஒன்றும் புதிதல்ல.வராலாறுகளை நினைவூட்டப்போனால் வார்த்தைகளால் வெளிப்படுத்தி விட முடியாது.மாவிலாரின் இயலாமையை மறைத்துக்கொள்ள விடுதலைப் புலிகள் மூதூரைத் தாக்கிய போது,அதனை தனது பிரச்சினையாய் கருதி யுத்தத்தை முடுக்கிவிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸவை நினைவூட்டுகின்ற போது வாழ்த்தத் தோன்றுகிறது.யுத்த வெற்றிக்குப் பிற்பாடு மஹிந்த ராஜ பக்ஸ பேரின சில குழுக்கள் முஸ்லிம்கள் மீது நடாத்திய இனக் குரோதச் செயற்பாடுகளை வாய் மூடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.இது முஸ்லிம்களை ஆத்திரமூட்டச் செய்தது.ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் பழி தீர்த்துக்கொள்ள கடந்த ஜனாதிபதித் தேர்தலையும் சிறந்த முறையிலே பயன்படுத்திக் கொண்டனர்.இந்த முஸ்லிம்களுக்கு பழி தீர்த்தது போக எஞ்சியதுதான் தான் என்ன? வீட்டுப் பூதத்தை விரட்ட கிணற்றுப் பூதத்தை கொண்டு வந்து விட்டோமா என்று தான் சிந்திக்கத் தோன்றுகிறது.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற இரு சம்பவங்கள் இதனை தெளிவாக உறுதியும் செய்கின்றன.இலங்கைக்கு நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசைன் விடயத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.பல வருடமாக கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு தான் மஹிந்த ராஜ பக்ஸவினுடைய ஆட்சிக் காலத்திலும் இனவாதம் படிப்படியாக உருவாக்கி அழுத்கமையில் பாரியதொரு இனக் கலவரமாக வெடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இது போன்றதொரு நிகழ்விற்கு ஒத்திகை பார்க்கும் செயற்பாடுகளாகவும் இவ்வாறானவைகளைப் பார்க்கலாம்.அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தில் இனவாதிகள் அவ்வளவு இலகுவில் கை வைக்க வருவதில்லை.அங்கே தங்களது ஒத்திகையை நடாத்துவது பாரிய ஆபத்தொன்றிற்கான முன்னெச்சரிக்கையாகவே பார்க்கத் தோன்றுகிறது.இத்தோடு நின்று விடாமல் சாய்ந்தமருதில் உள்ள இளைஞர் மத்திய நிலையத்தையும் இடமாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாவும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிய முடிகிறது.நீலம் என்றாலும்,பச்சை என்னறாலும்,இரண்டும் கலந்த கலவை என்றாலும் முஸ்லிம்களைப் பார்க்கின்ற கோணம் ஒன்றாகவே உள்ளது. 

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் தமிழர்கள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை மாறாக முஸ்லிம்களும் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.யுத்தம் ஆரம்பமாகியதன் பின்னர் தான் இந்த தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டனர்.எப்போது விடுதலைப் புலிகள் உதயமானார்களோ அன்று முதல் வட கிழக்கு முஸ்லிம்கள் பாதிப்புகுள்ளாகிய வரலாறுகள் இரத்தத்தால் பதிவாக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதற்கு முன்பு முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்குள்ளது.இன்றும் மீள் குடியேற்றப்படாமல் பல்லாயிரம் முஸ்லிம்கள் அகதி முகாம்களிலும்,அங்கும் இங்கும் வாழ்ந்து வருகின்றனர்.தங்களது உறவுகளை இழந்து,தொலைத்து பல்லாயிரம் முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இவ் விடயத்தில் முஸ்லிம்களுக்கும் தீர்வு வேண்டும் என்ற சொல்லாடல்கள் பெரிதும் சிலாகிக்கப்படுவதில்லை.யுத்தத்தின் போது தமிழர்கள் மாத்திரம் தான் பாதிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடே சர்வதேச அரங்கில் உள்ளது.இவ் விடயத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல முஸ்லிம் அரசியல் கட்சி தவறியுள்ளமையை யாவரும் ஏற்கத்தான் வேண்டும்.இலங்கை வந்திருந்த ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசைன் முஸ்லிம் பொது மக்கள் யாரையும் சந்திக்க சிறிதும் ஆர்வம் காட்டாமை இதனை நிறுவும் ஒரு சான்றும் கூட.முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர் அறிந்திருந்தால் இவ் விஜயத்தின் போது முஸ்லிம் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச ஆர்வம் காட்டி இருப்பார்.குறைந்தது தனது நிகழ்ச்சி நிரலில் ஏன் முஸ்லிம் பிரதிநிதிகளை உள்ளடக்கவில்லை என்ற வினாக்களையாவது எழுப்பி இருப்பார்.

இலங்கை முஸ்லிம்களிடத்தில் கட்சி ரீதியாக அதிகம் செல்வாக்குப் பெற்ற இரண்டு கட்சிகள் தான் உள்ளன.அண்மையில் இலங்கைக்கு நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த செயித் அல் ஹுசைன் தனது நிகழ்ச்சி நிரலில் இவ் இரு கட்சிகளுடனும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒதுக்கி இருக்க வேண்டும்.ஆனால்,மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசைன் இவ் இரு கட்சிகளுடன் எதுவித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாமை தெளிவான புறக்கணிப்பை எடுத்துக் காட்டுகிறது.இவ் ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளர் இங்கு வருகை தந்திருந்த போது அமைச்சர் ஹக்கீம் சிரியாவிலே அகதிகளுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்தார்.சிரியா அகதிகளுக்கு குறித்த தினத்தில் தான் நிவாரணம் வழங்க வேண்டும் என்றல்ல.அமைச்சர் ஹக்கீம் நினைத்திருந்தால் இச் சந்தர்பத்தில் இலங்கையில் இருந்திருக்க முடியும்.சிரியாவில் நிவாரணம் வழங்கும் போது முஸ்லிம்களுக்கு உதவுகிறார் என்ற தோற்றம் எழுந்து இவ் விடயத்தில் தன் மீதான விமர்சனப் பார்வைகளை திசை திருப்பலாம் என அமைச்சர் ஹக்கீம் கருதினாரோ தெரியவில்லை.இது போன்றே இந்திய வெளிவிவகார அமைச்சர சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்திருந்த போதும் அமைச்சர் ஹக்கீம் பிரதமரின் வேண்டுகோலுக்கமைய துருக்கி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ் இரண்டையும் வைத்து சிந்திக்கும் போது சர்வதேச பிரதிநிதிகளை சந்திப்பதை அமைச்சர் ஹக்கீம் புறக்கணிக்கின்றாரா? என்று சிந்திக்கத் தோன்றுகிறது.அமைச்சர் ஹக்கீம் சர்வதேச பிரதிநிதிகளை புறக்கணித்திருந்தால் அவர்கள் யாருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

இந்திய வெளிவிவகார அமைச்சர சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்திருந்த போது அமைச்சர் ஹக்கீம் அவரை சந்திக்காது போனாலும் மு.கா சார்பாக ஒரு குழு சென்று சந்தித்திருந்தமையை யாவரும் அறிவர்.இது போன்று அமைச்சர் ஹக்கீம் மு.கா சார்பாக ஒரு குழுவை ஐ.நா சபை மனித உரிமை ஆணையாளரை சந்திப்பதற்காவது ஏற்பாடு செய்திருக்கலாம்.அவ்வாறும் செய்யாமை இன்னும் பல வினாக்களை தோற்றுவிக்கின்றது.கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்திருந்தார்.இவ் விடயத்தை வைத்து மு.கா சார்பாக கலந்து கொண்டது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி குறித்த விமர்சனங்களில் இருந்து மு.காவைப் பாதுக்காத்துக்கொள்ள சிலர் விளைகின்றனர்.இச் சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரோடு சேர்த்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலப்பதி மற்றும் கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.எனவே,இதனை ஒரு போதும் மு.கா சார்பான சந்திப்பாக குறிப்பிட முடியாது.குறைந்தது இச் சந்திப்பையாவது முஸ்லிம்களுக்கு பயனுள்ள விதத்தில் அமைத்திருக்கலாம்.இச் சந்தர்ப்பத்திலும் யுத்தக் குற்றச் சாட்டுகள்,மீள் குடியேற்றம் தொடர்பான பொதுவான விடயங்களை பேசியதாகவே அறிய முடிகிறது.மேலும்,இவர் ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளரிடம் எதுவிதமான அறிக்கைகளையோ,ஆவணங்களையோ முஸ்லிம்கள் சார்பாக சமர்ப்பித்ததாகக் கூட அறியமுடியவில்லை.

கிழக்கு முதலமைச்சர் என்ற வகையில் இச் சந்திப்பை மேற்கொண்ட நஸீர் அஹமட் இம் முதலமைச்சை பெறக் காரணமான முஸ்லிம்களை மறந்து செயற்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.இச் சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கிழக்கு மாகாணம் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரு முன் மாதிரியான மாகாணம் என ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளர் புகழ்ந்து கூறிய விடயத்தைத் தான் முக்கிய விடயமாக கூறி இருந்தார் (இதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் வேறு சில விடயங்கள் பற்றி கந்துரையாடியதாக கூறிய போதிலும் முஸ்லிம்களை பிரத்தியேகமாக சுட்டிக்காட்டி எந்த ஒன்றையும் பேசியதாக குறிப்பிடாமை இங்கு சுட்டிக் காட்டத்தக்க ஒரு விடயமாகும்).வட மாகாண முதலமைச்சருடான சந்திப்பை அடுத்து ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசைன் கருத்துத் தெரிவித்த போது இங்குள்ள சவால்கள் அனைத்தையும் திரட்டி நாளை கொழும்பில் அரசியல் தலைமைகளுடன் பேச்சு நடாத்த உள்ளேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.இவ் இரு கூற்றுக்களையும் சிந்தித்தாலே இரு முதலமைச்சர்களும் ஐ.நா சபை மனித உரிமை ஆணையாளருடன் என்னனென்ன பேசி இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.இதுவே முஸ்லிம்,தமிழ்த் தலைமைகளுக்குமிடையிலான வேறுபாடும் கூட.மஹிந்த ஆட்சிக் காலத்தில் அந் நேரத்தில் மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளையிடம் பல பக்க அறிக்கைகளை தைரியமாக கையளித்த மு.காவின் செயலாளர் நாயகம் இவ் விடயத்தில் வாய் மூடி மௌனியாக இருப்பதன் மர்மம் துலங்கப்படாத ஒன்றாகவே உள்ளது.இவரின் மௌனத்தின் பின்னணியில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

இதன் போது அமைச்சர் ஹக்கீம் வெளிநாட்டிலாவது இருந்தார்.அமைச்சர் றிஷாதோ உள் நாட்டில் இருந்து கொண்டே இவரை சந்திக்க முடியாமல் போனமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.வில்பத்து பிரச்சினையைக் கூட தீர்த்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் அமைச்சர் றிஷாத் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசுக்கு மிகப் பலமிக்க அழுத்தம் ஒன்றை வழங்கி இருக்கலாம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டும் அமைச்சர் றிஷாத் இதனை ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் தெளிவுபடுத்தி சர்வதேசம் கொண்டு சென்றிருக்கலாம்.காற்றுள்ள போது தூற்றத் தவறிவிட்டு காற்றில்லாத போது இறைவனை நொந்து கொள்வதை அரசியல் இலாபம் காண முயற்சிப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது.மஹிந்த ஆட்சிக் காலத்திலும் சரி இவ் ஆட்சியிலும் சரி இது தொடர்பான பிரச்சினைகளை சர்வதேசம் கொண்டு செல்வதில் அமைச்சர் றிஷாத்தின் பங்களிப்பு பூச்சியமாகத் தான் உள்ளது.மஹிந்த ராஜ பக்ஸ ஆட்சிக் காலத்தில் ஜெனீவாப் பிரேரணைகளுக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதில் முக்கிய பங்காற்றிய இவர் இப்பொழுது சென்று முஸ்லிம்களுக்கு பிரச்சினை உள்ளது என்றால் அது நகைப்பிற்குரியதாக மாறிவிடும் என்பதால் புத்திசாலித் தனமாக தவிர்ந்து கொண்டாரோ தெரியவில்லை.

அமைச்சர் றிஷாத்திற்கு ஐ.நா சபை மனித உரிமை ஆணையாளரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை போன்றதொரு கதையும் உலா வருகிறது.இவ்வாறான முக்கியஸ்தர்கள் நாட்டின் முக்கிய புள்ளிகள் சிலரை அவர்களாகவே சந்திக்க விருப்பத்தை வெளியிடுவர்.எமக்கு தேவை இருந்தும் குறித்த முக்கியஸ்தரின் அழைப்பு வரவில்லை என்றால் நாம் கோரிக்கை விடுத்து அச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சபையின் செயலாளர் எம்.ஏ.சீ.எம் ஜவாஹிர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவைக் கூட செயித் அல் ஹுசைன் சந்தித்துள்ளார்.மக்கள் வாக்குகள் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ இல்லாத ஒரு கட்சிக்கு செயித் அல் ஹுசைனின் நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்க முடியுமாக இருந்தால் நிச்சயமாக மு.கா,அ.இ.ம.கா ஆகியன முயற்சித்திருந்தால் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.சில வேளை குறித்த நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்திருந்தவர்கள் இவர்களை திட்டமிட்டு புறக்கணித்திருக்கலாம் அல்லவா? என்ற வினாவை எழுப்பலாம்.மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளரை சந்திக்க கோரிக்கை விடுத்த போதும் அது நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.மஹிந்த ராஜ பக்ஸ ஆட்சியில் கூட முஸ்லிம்களுக்கு ஐ.நா சபை மனித உரிமை ஆணையாளரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.முஸ்லிம் தலைமைகள் கோரிக்கை விடுத்து நிராகரிக்கப்பட்டிருந்தால் இவ் ஆட்சி மஹிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியாகும்.இதனைத் தோலுரித்துக்காட்ட இது தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் கேள்வி எழுப்பிருக்க வேண்டும்.அப்படி ஏதும் எழுப்பாமை இவர்கள் மனித உரிமை ஆணையாளரை சந்திப்பதற்கு ஆர்வம் காட்டாமையையே எடுத்துக்காட்டுகிறது.இவ் விடயத்தில் முஸ்லிம்கள் சார்பாக தங்களது குரல்களை பதிவாக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளரிடம் தங்கள் கோரிக்கையை முன் வைக்கும் முகமாக வட கிழக்கு அமைப்பு என்ற அமைப்பு ஐ.நா நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.இதன் போது ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளர் இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த வழியால் வெளியேறாமல் பின் வழியால் வெளியே சென்றுள்ளார்.இது திட்டமிட்ட புறக்கணிப்பால்லாமல் வேறு என்ன? இவ் ஆர்ப்பாட்டத்தை அ.இ.ம.காவினர் பின் நின்று செய்திருந்தமையை சில தகவல்கள் உறுதியும் செய்கின்றன.தங்கள் மக்களையும் தன்னையும் இவ் விடயத்தில் புறக்கணித்திருந்தால் பகிரங்கமாகவே தங்களை இணங்காட்டி ஆர்ப்பாட்டத்தை அ.இ.ம.காவினர் முன்னெடுத்திருக்க வேண்டும்.தங்களது கட்சிப் பெயரை மறைத்துச் செய்ததை பார்க்கும் போது யாருக்கோ அ.இ.ம.கா அஞ்சுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

யாழ்பாணம் நல்லூர் கோயிலுக்குச் சென்ற மனித உரிமை ஆணையாளரை தங்கள் எதிர்ப்பு சுலோகங்கள் மூலம் இழுத்த யாழ்ப்பான முஸ்லிம்கள் சிலர் தங்கள் தேவைகளை அவரிடம் எடுத்துக் கூறி இருந்தனர்.இந்த தைரியத்தை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது.குறித்த மக்களுடன் பேசுவதற்கு அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்கள் தான் சந்தர்ப்பம் பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.அவர்களே சந்திக்க ஆர்வம் காட்டாத போது மக்களுக்கு குறித்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவா போகிறார்கள்.இந்த சுலோகங்களை அப்படியே முஸ்லிம் தலைமைகள் வாக்கு கேட்டு வருகின்ற போது உயர்த்துவது பொருத்தமானதாக இருக்கும்.இவ் ஆர்ப்பாட்டத்தை ஏழு முஸ்லிம்கள் தான் நடாத்தி இருந்தனர்.பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுடன் ஒப்பிடும் போதும் தேவையுடைய இலங்கை மக்களுடன் ஒப்பிடும் போதும் இது ஒரு சிறிய எண்ணிக்கையாகும்.சில வேளை ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளர் புறக்கணிக்கத்தக்க அளவுடைய முஸ்லிம்களுக்குத் தான் தேவை உள்ளது என்று கருதிக் கூடச் சென்றிருக்கலாம்.இவ் விஜயத்தின் போது செயித் அல் ஹுசைன் தமிழ் மக்களை பல இடங்களில் சந்தித்து அவர்களின் தேவைகளை அறிந்து கொண்டதோடு சுன்னாகம் நலன்புரி நிலையம் சென்று அவர்களின் தேவைகளை நேரில் சென்றும் அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் தலைவர்கள் சொல்லி வைத்தாப் போல் சந்திக்காமையும்,எது வித விமர்சனங்கள் செய்யாமல் மௌனம் காப்பதும் ஏதோ ஒரு புறக்காரணியின் செல்வாக்கு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.இலங்கைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக உள்ள த.தே.கூ இலங்கை அரசை பொறிக்குள் தள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.இந் நேரத்தில் இலங்கை முஸ்லிம்களும் தங்களது பிரச்சினைகளை சர்வதேசம் கொண்டு சென்றால் அது அரசிற்கு மிகப் பெரிய சவாலாக அமையும்.கடந்த ஆட்சியில் இலங்கை நாட்டின் மீது பல குற்றச் சாட்டுகளை முன் வைத்து வந்த முஸ்லிம் சமூகம் தற்போது இவ் அரசை பொருந்திக்கொண்டுள்ளது என்ற தோற்றப்பாடு எழுவது கூட இலங்கைக்கு சர்வதேசத்தினால் ஏற்படத்தக்க ஆபத்துக்களை குறைக்க வழி கோலும்.சிறு பான்மையினருக்கு இனி இலங்கையில் தீர்வு கிட்டும் போன்ற நம்பிக்கைகளையும் சர்வதேச அரங்கில் ஏற்படுத்தும்.இதன் காரணமாக இவ் அரசின் உயர் வழி காட்டல்களின் பேரில் இந்த சந்திப்பை முஸ்லிம் தலைவர்கள் புறக்கணித்திருக்கலாம்.இவ்வாறும் உயர் தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.முஸ்லிம்கள் இவ் விடயத்தில் முக்கிய கதா பாத்திரம் வகிப்பதை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் பிறந்துள்ள ஞானத்தை வைத்தும் புரிந்து கொள்ளலாம்.இவ் விடயத்தில் முஸ்லிம்கள் அரசுக்கு கை கொடுக்கும் வகையில் இவ் அரசு செயற்படுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.இவ் அரசுடன் இன்னும் இன்னும் கெஞ்சி எமது தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்காமல் இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சர்வதேச அழுத்தங்களை வழங்கி சாதிக்க முயல்வதும் சாதூரியமானதாக அமையும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Post a Comment

0 Comments