தைரியம் இருந்தால் அரசாங்கம் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் விசாரணைகளை செய்யட்டும் என பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நல்லாட்சி அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் பௌத்த பிக்குகளை துரத்தாமல், ஐ.எஸ் தீவிரவாதிகள் பற்றி விசாரணை செய்யட்டும் என சவால் விடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தொடர்பில் பொலிஸாரும், பிரதமரும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், ஞானசார தேரர் நீதிமன்றை அவமரியாதை செய்தாரா என்பதனை நீதிமன்றம் தீர்மானிக்கும் என அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞானசார தேரர் ஒரு போதும் தன்னைப் பற்றி பேசவில்லை மாறாக இனம், மதம், மொழி மற்றும் படைவீரர்கள் பற்றியே பேசியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஞானசார தேரர் மக்கள் முன் எடுத்துச் செல்ல முயற்சித்த எண்ணக்கருவினை நாம் அமைதியான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாங்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு எதிராக நாம் போராட்டம் நடத்தவில்லை என குறிப்பிட்ட அவர் நாட்டையும், இனததையும், மதத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே போராடுகின்றோம் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், தமது போராட்டத்தின் நோக்கம் மஹிந்தவிற்கு ஆதரவான போராட்டமல்ல, படைவீரர்களை பாதுகாப்பதே எமது நோக்கமாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் படைவீரர்களை மறந்தாலும் எம்மால் அவ்வாறு இருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எங்களது பௌத்த பிக்குகளை பின் தொடர்ந்து செல்லாது அரசாங்கம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பின்னால் செல்ல வேண்டும் எனவும், தமது அமைப்பு இனவாத அமைப்பு கிடையாது எனவும் திலந்த விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments