அபு அலா –
சுதேசத்துறையில் கடந்த 2014 / 2015 ஆண்டு காலப்பகுதியில் 3 ½ மாதம் மருந்தக கலவையாளர் பயிற்சி நெறியை முடித்து வெளியான 34 மருந்தக கலவையாளர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு இம்மாதம் 17 ஆம் திகதி புதன்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் வழங்கி வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆயுள்வேத ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதர் இன்று (14) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாண ஆயுள்வேத ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச செயலாளர், உதவிச் செயலாளர்கள், சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கிழக்கு மாகாண அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் மருந்த கலவையாளர்கள் இல்லாத குறைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றி வந்த சிற்றூழியர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 34 பேருக்கு 3 ½ மாதம் மருந்தக கலவையாளர் பயிற்சிநெறி வழங்கி வைக்கப்பட்டது.
இந்த பயிற்சிநெறி கடந்த 27/11/2004 ஆம் ஆண்டு திருகோணமலை உப்புவெளி முகாமைத்துவ கற்கைநெறி பயிற்சி நிலையத்தில் 2 மாத காலமும், கொழும்பு மகரகம தேசிய பாரம்பரிய வைத்திய ஆராய்ச்சி நிலையத்தில் 1 ½ மாத காலமும் இப்பயிற்சிநெறி இடம்பெற்றது.
இதில் தமிழ்மொழி மூல பயிற்சியை முடித்த 29 பேருக்கும், சிங்களமொழி மூல பயிற்சியை முடித்த 5 பேருக்குமான 34 மருந்தக கலவையாளர்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் வழங்கி வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments