கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை லெப்டினன்ட் யோஷித ராஜபக் ஷவினுடைய 12,000 மின்னஞ்சல் செய்திகள் குறித்தும் பொலிஸ் பாரிய நிதி மோசடிப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சீ.எஸ்.என். தொலைக்காட்சி சேவையின் சிறு முடிவு எடுக்கும் வகையில் யோஷித்த செயற்பட்டமையை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்கள் அவரது மின்னஞ்சல் செய்திகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றையும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை பாரிய நிதி மோசடி பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யோஷித ராஜபக் ஷ கடந்த சனிக்கிழமை பாரிய நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவர் கொழும்பிலுள்ள கடற்படை தலைமையகத்தில் வைத்து சுமார் ஆறு மணித்தியாலங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டதன் பின்னரே கைது செய்யப்பட்டார்.
பாரிய நிதி மோசடி தொடர்பாக நிதிக்குற்றப்புலனாய்வுக்கு அழைத்து விசாரணை செய்யப்படுவதே வழமை. ஆனால், யோஷித ராஜபக் ஷ இதற்கு மாறாக கடற்படை தலைமையகத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக் ஷ அடங்கலான ஐவர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை அவர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.
0 Comments