முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
எந்தவித நிபந்தனையுமின்றி அமைச்சர் ஹக்கீமுடன்
இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் அறிக்கையொன்றை
வெளியிட்டுள்ளார். இது இதயசுத்தியுடன் இருக்குமானால் வரவேற்கப்படவேண்டியதும்,
வரலாற்றில் எழுதப்படவேண்டியதுமான ஓர் அற்புதமான விடயமாகும்.
தேசியப்பட்டியளுக்கான பெயர் அறிவிப்பு
செய்யப்பட்டால் முஸ்லிம் காங்கிரசில் பிளவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு
நடைபெறாத நிலையில், திடீரென அமைச்சரினால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினை
வெளிப்படையாக பார்க்கும் போது பாராட்டக்கூடியதாகவும், அமைச்சர் ரிசாத்தின்
பெருந்தன்மயை காட்டுவதாகவும் எண்ணதோன்றுகின்றது.
அத்துடன் தனது ஏவல்களைக்கொண்டு தன்னை ஒரு சத்திய
தேசிய தலைவராக ஊடகங்கள் மூலமாக விளம்பரப்படுத்திவரும் அமைச்சர் ரிசாத் அவர்கள்,
திடீரென ஹக்கீம் அவர்களை ஏற்று அவருடன் சேர்ந்து செயற்படப்போவதாக அறிவிப்பு
செய்ததானது ஹக்கீம் அவர்களை தேசியத்தலைவராக ஏற்றுக்கொண்டதனை காட்டுகின்றது.
அப்படியானால் தனது சத்திய தேசிய தலைமைக்கு என்ன நடந்தது?
சற்றும் எதிர்பாராத இந்த அறிவிப்பினால் பலர் அதிர்ச்சியும்,
ஆச்சரியமும் அடைந்தாலும் இதில் புதைந்துகிடக்கும் சூழ்சிகளை அறியாத பாமர மக்களினால்
இது முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு வைத்த அரசியல் பொறி என்பதனை அறியாதவர்களாக
உள்ளனர்.
இங்கே ஒரு விடயத்தை நாங்கள் அவதானிக்க வேண்டும்.
அதாவது அமைச்சர் ஹக்கீமுடன் சேர்ந்து செயற்படப்போவதாக கூறியுள்ளாரே தவிர, முஸ்லிம்
மக்களின் நலனுக்காக முஸ்லிம் காங்கிரசிலோ அல்லது ஒரு பொது அமைப்பாகவோ ஒன்று
சேர்ந்து செயற்படப்போவதாக அறிவிக்கவில்லை. இதிலிருந்துதான் சந்தேகம்
ஆரம்பிக்கின்றது.
எமது சகோதர தமிழ் மக்களின் அரசியல் தலைமையினை
நோக்குகையில் அதில் பல அரசியல் கட்சிகளும், முன்னாள் ஆயுத இயக்கங்களும் ஒன்று
சேர்ந்து, அவர்களுக்குள் இருக்கின்ற தனிப்பட்ட கொள்கை முரண்பாடுகளை களைந்துவிட்டு தமது
மக்களின் உரிமையினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற
கட்சியின் பெயரிலேயே ஒன்றினைந்துள்ளனர். மாறாக இரா சம்பந்தனுடன் சேர்ந்து செயற்படுவதாக
அவர்கள் அறிவிக்கவில்லை.
தனக்கு அரசியல் ரீதியாக நெருக்கடிகள்
வருகின்றபோது அமைச்சர் ஹக்கீமின் தயவினை நாடுவது ஒன்றும் அமைச்சர் ரிசாதுக்கு
புதிதல்ல. அந்தவகையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்பு, தேர்தல் மாற்றத்தின்
மூலம் தொகுதி அடிப்படையில் பொதுத்தேர்தலினை நடத்துவதற்காக அனைத்து
நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
இது நடைமுறைக்கு வந்தால் தனக்கென்று ஒரு தொகுதி
இல்லாதநிலையில் தனது அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும் என்ற பயத்தினால் பதறியடித்துக்கொண்டு
அமைச்சர் ஹக்கீமிடம் தஞ்சம் அடைந்தார். பின்பு அமைச்சர் ஹக்கீமின் தலைமையின் கீழ் செயற்பட்டதுடன்
ஐ.தே.கட்சியின் முழுமையான ஆதரவு இன்மையினால் அத்திட்டத்தை கைவிடவேண்டிய நிலை ஜனாதிபதிக்கு
ஏற்பட்டது. அதன்பின்பு அமைச்சர் ஹக்கீமையும் ரிசாத் அவர்கள் கைவிட்டது
மட்டுமல்லாமல், பலகோடி ரூபாய் விலை பேசுதல்களுடன் முஸ்லிம் காங்கிரசிலிருந்த பலரை
பிரித்தெடுத்து தனது கட்சியில் இணைத்துக்கொண்டார்.
கடந்த ஊவா மாகாணசபை தேர்தலில் அன்றைய ஆட்சியாளர்
மகிந்த ராஜபக்ஸ அவர்களின் திட்டத்துக்கு அமைய, முஸ்லிம் மக்களின் வாக்குகள் தனக்கு
கிடைக்காது என்பதனால் அது ஐ.தே.கட்சிக்கு போவதனை தடுக்கும் வகையில் முஸ்லிம்
காங்கிரசுடன் சேர்ந்து செயற்படப்போவதாக இதுபோன்றே
அறிவிப்பு செய்து தனது அரசியல் சதியினை மேற்கொண்டார். அதேபோல இந்த
அறிவிப்பானது யாரின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அமைச்சர் ரிசாத் அவர்கள் செயற்படப்போகின்றார்
என்ற சந்தேகம் வலுவடைகின்றது.
இனப்பிரச்சினைக்கு தீர்வினை காணும் வகையில்
சிறுபான்மை மக்களுக்கு அரசியல் உரிமையினை வழங்கும் நோக்கில் இன்றைய அரசாங்கம்
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. இதில் முஸ்லிம்
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு அரசாங்கம், தமிழ் தேசிய
கூட்டமைப்பு, மற்றும் சர்வதேச சமூகத்தினர்கள் அனைவரும் முஸ்லிம்களின் பிரதிநிதியான
முஸ்லிம் காங்கிரஸின் தலைவருடனேயே பேச்சுக்களை நடாத்திவருகின்றனர். தன்னை ஒரு
சத்திய தேசிய தலைவராக எவ்வளவுதான் விளம்பரம் செய்தும் யாரும் கண்டுகொள்ளாமல்
இருப்பது அமைச்சர் ரிசாத் அவர்களுக்கு மண உளைச்சலை உண்டுபன்னியுள்ளது.
இப்படியான பேச்சுவார்த்தைகள் மூலமாக அமைச்சர்
ஹக்கீமுடன் சேர்ந்து அதில் தானும் நலைந்துகொண்டு இறுதியில் மு.கா. தலைவர் ஹக்கீம்
மீது ஏதாவது குற்றச்சாட்டினை சுமத்தி அவரை ஓரம்கட்டிவிட்டு, முஸ்லிம் மக்களின்
உரிமை போராட்டத்தில் தானே வீராதி சூரர் என்று தனது ஏவல்கள் மூலமாக விளம்பரம்
செய்வதற்கு எத்தனிக்கின்றாரா?
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் ரிசாத் பதியுதீன்
அவர்கள் ஒரு முக்கிய அமைச்சராகவும், சுயமாக தீர்மானம் எடுக்ககூடியவராகவும்
இருந்ததுடன், அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.கா. க்கு அவ்வாறான அதிகாரங்கள் கிடைத்திடாமல்
இருக்கும்பொருட்டு மிகவும் கவனமாக மகிந்தவை கையாண்டார். ஆனால் இந்த அரசாங்கத்தில்
அந்த நிலை இல்லை. எல்லாம் தலைகீழாக காணப்படுகின்றது. அதாவது மகிந்தவின்
அரசாங்கத்தில் இருந்ததுபோலன்றி அதிகாரமுள்ள அமைச்சராக ஹக்கீம் அவர்கள் பல பாரிய அபிவிருத்தி
பணிகளை மேற்கொண்டுவருகின்றார். இந்த நிலையினாலும் அமைச்சர் ரிசாத் அவர்களுக்கு மண
உளைச்சலை உண்டுபண்ணியிருக்கலாம்.
முஸ்லிம்
காங்கிரசிலிருந்து எத்தனையோ பேர்கள் வெளியேறியிருந்தாலும் அமைச்சர்
ரிசாத்தின் வெளியேற்றம் மிகவும் கொடூரமானது. வரலாற்றிலே மன்னிக்க முடியாத ஓர்
அவப்பெயரை உண்டுபன்னிவிட்டே சென்றார். அதனாலேயே மு.கா. போராளிகளினால் அவரை ஏற்றுக்கொள்ளவோ,
நம்பவோ முடியாதுள்ளது.
எனவேதான் உண்மையில் இதய சுத்தியுடன் எமது
சமூகத்தின் உரிமையினை எல்லோரும் ஒன்றுசேர்ந்து பெறவேண்டும் என்பதுவே அனைத்து முஸ்லிம்
மக்களின் விருப்பமாகும். அதற்காக அமைச்சர் ஹக்கீமுடன் சேர்ந்து செயற்படுவது
ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
மாறாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும்
கட்சியை கலைத்துவிட்டு, தன்னை தாலாட்டி சீராட்டி பாலூட்டி, வளர்த்து ஆளாக்கி, இந்த
உலகத்துக்கு காண்பித்து, அரசியல் அங்கீகாரம் வழங்கிய தாய்க்கட்சியான ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து அதன் தேசியத் தலைவர் ஹக்கீம் அவர்களுடன் செயற்படுவதனையே
மு.கா.போராளிகளும், மக்களும் விரும்புகின்றனர். அப்படியல்லாது அமைச்சர் ஹக்கீமுடன்
இணைந்து செயற்படுவதாக இருந்தால் அது அமைச்சர் ரிசாத் அவர்களின் சுயநலத்துக்கான
இன்னுமொரு காய்நகர்த்தலுக்கான அரசியல் பொறியாகவே பார்க்கப்படுகின்றது.
0 Comments