முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கும்,
இழுபறிகளுக்கும், வாதப்பிரதிவாதங்களுக்கும் மத்தியில் முஸ்லிம் காங்கிரசின் இரு
தேசியப்பட்டியல்களில் ஒன்றை நிரப்புவதற்கான பெயர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் மிக நீண்ட காலம்
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரிகோணமலை மாவட்டத்தை சேர்ந்த எம்.எஸ். தௌபீக்
அவர்களின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டவுடன் நாட்டின் நாலாபுறத்திலிருந்தும் தனக்கே
அப்பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் ஏமாற்றம்
அடைந்துள்ளதாக உணர்ந்து, வழக்கம் போன்று தங்களது கண்டனங்களையும், எச்சரிக்கைகளையும்,
அதிருப்திகளையும் தலைமைக்கு எதிராக கொக்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். சில
நேரங்களில் கட்சி மாறுகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றது.
கடந்த பொது தேர்தலின் பெறுபேறுகள் பூரணமாக
வெளியாகுவற்கிடையில், தேசியப்பட்டியல் நியமனம் தனக்கே வழங்கப்பட வேண்டுமென்று
பலவிதமான அழுத்தங்களுடனும், நியாயப்படுத்தல்களுடனும் நாட்டின் பலபாகங்களில்
இருந்தும் ஒவ்வொருவரும் தங்களது படை பட்டாளங்களை திரட்டிக்கொண்டு தலைவரின்
இல்லத்தை முற்றுகையிட்டிருந்தனர்.
அந்தவகையில் வடகிழக்குக்கு வெளியே உள்ளவர்கள்,
தங்களது மாவட்டங்களில் பலயீனமாக இருக்கின்ற கட்சியை வளர்க்க வேண்டுமென்று
தனித்தனியாக ஒவ்வொருவரும் தலைமையை அழுத்தினார்கள்.
வன்னி மாவட்டத்தில் ரிசாத் பதியுதீனின் சவால்களை
முறியடிக்க போவதாக கூறி வன்னியில் மூன்றுக்கு மேற்பட்ட கட்சி முக்கியஸ்தர்கள்
தனித்தனியாக தலைமையை அழுத்தினார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியில்
அமீரலியின் சவாலை முறியடிப்பதற்காக சகோதரர் ரியால் அவர்களுக்கு எம்பி பதவி
வழங்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்களும், மறுபுறத்தில் காத்தான்குடியில்
ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஈடுகொடுக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின்
அழுத்தங்கள் ஒருபுறமிருக்க இம்முறை முஸ்லிம் காங்கிரசில் இணைந்து அதன் தயவுடன் போட்டியிட்ட
நல்லாட்சிக்கான முன்னணியின் தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் எம்பி பதவி வழங்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கையும் அதிகரித்துக் காணப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் வாக்குறுதியளித்தபடி
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கியாக வேண்டும் என்ற அழுத்தம்
ஒருபுறமும், அக்கரைப்பற்று, பொத்துவில் பிரதேசத்தில் இருந்தும் எம்பி பதவியினை வழங்கும்படி
கடுமையான வேண்டுதல்கள் தலைமைக்கு விடுக்கப்பட்டிருந்தது.
இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க, முஸ்லிம்
காங்கிரசின் அரசியல் அதிகாரங்களையும், தேசியப்பட்டியலையும் காலம் பூராகவும்
அனுபவித்து பழக்கப்பட்ட பஷீர் சேகுதாவூத், ஹசனலி போன்றவர்களின் செயற்பாடுகள் தலைவருக்கு
என்றுமில்லாத தலையிடியை உருவாக்கியிருந்தது. இந்த சூழ்நிலையில்தான்
தேசியப்பட்டியல் நியமனம் வழங்குவதில் என்றுமில்லாதவாறு காலதாமதம் ஏற்பட்டது.
இதனை புரிந்துகொள்ளாதவர்களும், புரிந்தும்
புரியாததுபோல நடிப்பவர்களும் வேண்டுமென்றே தலைமையை விமர்சித்துதிருந்தனர். இவர்கள்
யாராவது எம்பி பதவியின் அதிகாரத்தினை மக்கள் அனுபவிக்க செய்யவும், மக்களுக்காக
குரல் கொடுப்பதற்காகவும், தங்களை அர்ப்பணித்து சேவயாற்றுவதற்காக பதவியை
கோரினார்களா அல்லது பிரதேசவாதத்தை தூண்டுவதன் மூலம் தங்களது தனிப்பட்ட குடும்ப சுகபோக
வாழ்வுக்காக இப்பதவி தேவைப்படுகிறதா என்றால் எது உண்மை என்பதனை நான்
கூறத்தேவையில்லை.
முஸ்லிம் காங்கிரசுக்கு தொண்ணூறு சதவீத
வாக்குகளை வழங்குகின்ற அட்டாளைச்சேனைக்கு நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர்
இல்லாததனால், அப்பதவியினை வழங்க வேண்டிய தேவை முஸ்லிம் காங்கிரசுக்கு
இருக்கின்றது. அதனாலேயே அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற
உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று தேர்தலின்போது வாக்குறுதி
வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராதமுறையில் திரிகோணமலை
மாவட்டத்தில் இம்முறை பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்ததனாலேயே அட்டாளைச்சேனைக்கு
வழங்கிய குறித்த வாக்குறுதியை நிறைவேற்றமுடியாமல் போனது. அத்துடன் குறித்த
வாக்குறுதிக்கு ஈடு செய்யும் பொருட்டு எம்பி பதவியையும்விட அதிகமாக வேலை
செய்யக்கூடிய மாகான அமைச்சர் பதவியை முன்கூட்டியே அட்டாளைச்சேனைக்கு தலைமையினால்
வழங்கப்பட்டிருந்தது.
திருகோணமலை மாவட்டமானது சுமார் இருபது முஸ்லிம்
கிராமங்களை கொண்டதாகும். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எம்.
எஸ். தௌபீக் அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் சுமார் இருபத்து ஆராயிரமாகும். இது
வன்னி மாவட்டத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பெற்ற வாக்குகளுக்கு சமனானதாகும்.
எனவே அட்டாளைச்சேனை என்கின்ற ஒரு கிராமத்தை
திருப்தி படுத்துவதா அல்லது திருகோணமலை மாவட்டத்தின் மொத்த இருபது முஸ்லிம்
கிராமங்களையும் திருப்தி படுத்துவதா என்ற நிலையிலேயே தலைமை இந்த முடிவை எடுத்தது.
திருகோணமலை மாவட்டத்தில் நல்லாட்சிக்கான
முன்னணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டதனாலேயே அங்கு
இவ்வளவு காலமும் பெற்றுவந்த ஆசனத்தை இழக்க வேண்டியேற்பட்டது.
நல்லாட்சி முன்னணி சார்பாக மூதூரை சேர்ந்த
டாக்டர் சாகிர் அவர்களும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கிண்ணியாவை சேர்ந்த
எம்.எஸ்.தௌபீக் அவர்களும் வேட்பாளர்களாக மு.கா. மூலமாக நிறுத்தப்பட்டபோது,
முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையான மூதூரில் அக்கட்சி சார்பாக வேட்பாளர்
நிருத்தப்படாதது கட்சிப்போராளிகளினால் ஓர் அதிருப்தியாக நோக்கப்பட்டது. இந்த
நிலையில் தௌபீக் அவர்களை தோற்கடிக்கும் நோக்கில் திட்டமிட்டு மூதூரிலிருந்து பிரதேசவாதம்
உசுப்பிவிடப்பட்டது.
கடந்த காலங்களைவிட அதிகமான விருப்பு வாக்குகளைப்
பெற்றிருந்தும் எம்,.எஸ்.தௌபீக் அவர்களால் வெற்றிபெற முடியாமைக்கு பிரதேசவாதமே
காரமாகும். ஆனால் நல்லாட்சிக்கான முன்னணியுடன் கூட்டு சேராமல் இருந்திருந்தால்
இந்தநிலை முஸ்லிம் காங்கிரசுக்கு அங்கு ஏற்பட்டிருக்காது. இது பொல்லை கொடுத்து
அடிவாங்கியதனை காட்டுகின்றது.
அத்துடன் தேசியப்பட்டியல் எம்பி பதவிக்காக கடுமையாக
தங்களை நியாயப்படுத்திய பிரதேசங்களில் இம்முறை முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த
வாக்குகளை நோக்குகையில், கல்குடா தொகுதியில் சுமார் பத்தாயிரம் வாக்குகளும், வன்னி
மாவட்டத்தில் சுமார் ஏழாயிரம் வக்குகளுமே முஸ்லிம் காங்கிரசுக்கு
கிடைக்கப்பெற்றது. அப்படியிருந்தும் இருபத்து ஆறாயிரம் வாக்குகளை வழங்கிய
திருகோணமலை மாவட்ட மக்களை புறக்கணித்துவிட்டு குறைந்த வாக்குகளை வழங்கிய
பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் எம்பி பதவிக்கு முன்னுரிமை வழங்குவதானது ஒரு
சானாக்கியமான விடயமல்ல.
எனவேதான் இவைகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து
தோல்வியடைந்ததாக தென்பட்டாலும் தோல்வியடையாத அதிகபட்ச மக்களின் ஆணையை பெற்றவரும்,
நீண்ட கால பாராளுமன்ற அனுபவமும் கொண்ட எம்.எஸ். தௌபீக் அவர்களுக்கு
தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பதவிக்காக சிபாரிசு செய்யப்பட்டதானது தலைமையின்
தீர்க்கதரிசனமானதும், சானாக்கியமானதுமான முடிவாகும்.


0 Comments