சிறுநீரக வர்த்தகத்துடன் தொடர்புள்ளதாக உறுதியாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை, மருத்துவ தொழிற்துறையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் வெளிநாட்டவர்களுக்கான சிறுநீரக தொகுதி மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் சிலவற்றில், இந்தியர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகத் தொகுதி மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
சிகிச்சைப் பெற வந்த சிலரது சிறுநீரகத்தொகுதி களவாடப்பட்டிருந்ததாகவும் அந்த செய்திகள் தெரிவித்திருந்தன.
இந்த குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்ட இலங்கையின் 6 இலங்கை வைத்தியர்களுக்கு எதிராக ஐதராபாத் காவற்துறை நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தோட்டபுற மக்களை தொடர்புபடுத்தி குறித்த வர்த்தகம் முன் எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.


0 Comments