சில குழுக்கள் நாட்டு மக்களிடையே அச்ச நிலையை உருவாக்கி அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றன. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கர் விவகாரத்தை இவ்வாறே பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் அவ்வாறான முயற்சிகளுக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது என நகர திட்டமிடல் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நேற்றுக் காலை நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறுவியுள்ள புதிய தொழிற் சங்கமான தேசிய ஐக்கிய ஊழியர் தொழிற்சங்கத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய ஐக்கிய ஊழியர் தொழிற்சங்கத்தின் தலைவராக பதவியேற்றுள்ள அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
‘சிங்ஹ லே’ போன்ற ஸ்டிக்கர் குழுக்களினால் நாம் பீதிக்குள்ளாக வேண்டியதில்லை. நாட்டில் இனவாதத்தை உருவாக்க முயற்சித்த குழுக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது அவைருக்கும் தெரியும். அப்படியானவர்கள் மீண்டும் இனவாதத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று நினைப்பதென்றால் அது தவறாகும்.
தற்போது ‘சிங்ஹ லே’ ஸ்டிக்கர்களினால் தேவையற்ற பீதியை உருவாக்கி வருகிறார்கள். இது தொடர்பாக இன்றுவரை நான் வாய் திறக்கவில்லை. வாய் திறந்திருந்தால் என்னை இனவாதியென்றும் நான் இனவாதத்தைப் பரப்புவதாகவும் தவறான கருத்துகளைப் பரப்புவார்கள்.
இதனாலேயே வாய் திறக்கவில்லை. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கருக்குப் பதிலளிக்கும் முகமாக‘அபித் சிங்ஹ லே’ (நாங்களும் சிங்ஹ லே) என்ற ஸ்டிக்கரை வெளியிடலாம் என்றும் எண்ணியிருந்தேன். இது அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியாகும்.
கிறிஸ் மனிதன் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கிறீஸ் மனிதன் (கிறீஸ் யகா) சம்பவங்கள் மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கின. இந்த சம்பவங்கள் ஏன் நடந்தன என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான காரணம் அறியப்படவில்லை.
தேசிய ஐக்கிய ஊழியர் தொழிற்சங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபித்துள்ள தேசிய ஐக்கிய ஊழியர் தொழிற்சங்கம் மறைந்த எமது தலைவர் அஷ்ரபின் கனவாகும். தேசிய ஐக்கிய முன்னணியின் தேவை 1999 லிருந்து பேசப்பட்டு வந்தது. இன்று அது ஒரு தொழிற்சங்கமாக நிறைவேறியுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒரு இனவாதக் கட்சி என்றே கூறுகிறார்கள். இதிலிருந்தும் பிறழ்வுற்ற முஸ்லிம் காங்கிரஸ் இனவாதக் கட்சியல்ல என்பதை நிரூபிப்பதற்காகவுமே இந்த புதிய தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சாதி, சமய, மொழி பேதங்களற்ற ஒரு புதிய அரசியல் கலாசாரம் இந்த தொழிற்சங்கம் மூலம் உருவாக்கப்படும்.
A.R.A. Fareelc


0 Comments