சமகால இலங்கை அரசியலும் , அதை நகர்த்திச்செல்லும் நபர்களினதும் நடவடிக்கைகள் எல்லாம் பார்க்கும் போது, சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த ஒரு சமூகமாக நாம் இருப்பதை எண்ணி கவலையை தவிர வேறென்ன பண்ணமுடியும்.
அவர்களே பிள்ளையும் கிள்ளுகின்றனர் பின் அவர்களாகவே தொட்டிலையும் ஆட்டி விடுகின்றனர் (மயித்திரி அறிக்கை விடுவதும் , ராஜித அதை மறுதலிப்பதும்) , ஆனால் கடந்த வாரமாக மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாடறுத்தல் விவகாரத்தின் பின், அமைச்சரவை பேச்சாளர் ராஜிதவின் கருத்தொன்று நிச்சயம் கவனிக்க பட வேண்டியதாகின்றது.
அதாவது, முஸ்லிம் அமைச்சர்கள் அல்லது அரசியல்வாதிகள் எம்மிடம் வந்து பேசவில்லை அல்லது சுட்டிக்காட்ட வில்லை என்ற ஒரு செய்தியாகும். உண்மையில் இந்த விடயம் ஒரு வெறும் மாடறுப்பு என்ற ஒன்றாக நோக்காமல், சமகாலத்தில், இலங்கை அரசியலில் முஸ்லிம் தலைவர்களினதும் , அங்கத்தவர்களைனதும் வகிபாகம் எந்தளவுக்கு நலிந்து போயுள்ளது என்பதை நிரூபிற்ற்கின்றது என்ற ஒரு செய்தியைத்தான் சொல்லி நிற்கின்றது.
மிகவும் ஆபத்தானதும், அபாயகரமானதுமான ஒரு இக்கட்டான சூழலில் , எங்கோ ஒரு இடத்தில் புகைந்து கொண்டிருக்கும் இனவாத வெறுப்பிற்கு மத்தியில் இலங்கை முஸ்லிம்கள் வாழும் இத்தருணத்தில் , இவை குறித்து அரசுக்கும் , சர்வதேசத்திற்கும் பகிரங்கப்படுத்த வேண்டிய எமது அரசியல், வெறும் பாராளமன்றம் தாண்டிய மேடைகளிலும் , சிறுவர் விளையாட்டு நிகழ்வுகளிலும் , எதோ ஒரு பாடசாலை அல்லது பொது கட்டட திறப்பு விழாக்களிலும் மட்டுமே சமூகம் குறித்து அக்கறைப்படுவதும் , வீரமாய் பேசி கைதட்டல்களையும் பெறுவதை பார்க்கும் போது, எம்மவர்கள் வெறும் பேச்சுக்கும் , கவர்ச்சிக்கும் அடிமைப்பட்டு, எதிர்கால சந்ததிக்கு மிகவும் இக்கட்டான ஒரு அரசியல் முன்னெடுத்தலை அல்லது சூழலை தாமாகவே ஏற்படுத்துகின்றனர் என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது.
அரசியல்தலமைகள் தான் இவ்வாறு இருக்கின்றனர் என்று பார்த்தல் , அவர்களுக்கு வாக்களித்த மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட , அரசியல் என்றால் , அடுத்த கட்சிக்காரனுக்கு அல்லது அடுத்த கட்சி தலைவனுக்கு ஏசியும், பேசியும், தரக்குறைவாக சித்தரித்தும் , தமது வெறுப்பை வீசி எறிவதன் மூலம் தான் சார்ந்த கட்சியின் அல்லது சமூகத்திற்கான தனது அரசியல் பங்களிப்பு பூரணப்படுத்தப்பட்டு விட்டது என்று கருதி அந்த கேவலமான செயற்பாடுகளில் இன்னமும் மும்முரமாக இயங்குவதை பார்க்கும் போது , எமது அரசியல் தான் விரும்பியதை அடைந்துவிட்டதாக அவர்கள் எண்ணிவிடக்கூடும். இது ஒரு தமிழ்நாட்டு அரசியலை விட கேவலமான ஒரு நிலைமை என்றால் அது மிகையாகாது.
இப்போது , தான் சார்ந்த தலைவன் தனக்கும் , தனது எதிர்கால சந்ததிக்கும் உருப்படியாக , நின்று நிலைக்கக்கூடிய எதை செய்துள்ளான் என்று நோக்குவதை விட, அவன் குடும்ப பின்னணி , பணம் , அழகு , அவன் செய்யும் சாதாரண செயற்பாடுகளையும் எண்ணி புழகாதம் அடைந்து தம்மை மறப்பது , எதை சொன்னாலும் பகுத்தறியாமல் ஏற்றுக்கொள்வது, தான் சார்ந்த அரசியலே எப்போதும் எனக்கான முகவரி என கருதுவது , வெறுமனே கண்மூடித்தனமாக இயங்கி அடுத்த கட்சியை வசை பாடுவதன் மூலம் தனது தலைவனை திருப்திப்படுத்துவதாக எண்ணுவது, அரசியலால் மட்டுமே எதுவும் ஆகும் என்று நம்பி அதன் படி இயங்குவது போன்ற வெறித்தனமான , கண்கள் கட்டப்பட்டு ஓடும் குதிரைகள் போல இருக்கும் ஆதரவாளர்கள் இருக்கும் வரை நாம் ஒரு போதும் மேம்படுத்தப்பட்ட அரசியலையும் , அதன் மூலம் எமது எதிர்காலத்திற்கு ஒரு நிலையான அமைதியை கொடுக்க முடியாது என்பது மட்டும் திண்ணம்.
பெரும்பான்மை அரசியல் , நல்லாட்சி என்ற நாமத்தில் இருந்து அதன் இனவாத முகத்தை மெதுமெதுவாக வெளிப்படுத்தும் இந்நாட்களில் , அல்லது அது போன்ற செயற்பாடுகளை கண்டுகொள்ளாத இந்நாட்களில் , எமது அரசியல்கள் , இன்னமும் பதவி ஒன்றை பங்குவைக்க முடியாமல் திணறுவதும் , அதை பங்குவைப்பதனால் ஏற்படப்போகும் சிக்கல்களையும் , அது குறித்து அக்கட்சிக்குள் ஏற்படப்போகும் எதிர்கால மாற்றங்கள் குறித்து ஐயப்பட்டு , அது குறித்து மட்டுமே சிந்தனை செய்யும் நிலையில் , சமூகம் குறித்தும் ஆகக்குறைந்தது மாடுகளைக்குறித்தாவது சிந்திக்குமா என்பது சந்தேகமே, இன்னொரு பக்கம் வெறும் வில்பத்து என்ற ஒரு விடயத்தை மட்டுமே வைத்து அதை உடனடியாக தீர்க்க சந்தர்பங்கள் இருந்தும் மீண்டும் மீண்டும் நீட்டியடித்து தனது அரசியலை நீட்சி அடைய செய்துகொண்டிருக்கும் தலைமையும் சமூகம் குறித்து சிந்திக்குமா என்பது வெறும் கனவுதான்.
வெறும் அடிக்கல் நாட்டு விழாக்களிலும், திறப்பு விழாக்களிலும் , பரிசளிப்பு விழாக்களிலும் , பாராட்டு விழாக்களிலும் மூழ்கிப்போயுள்ள எமது அரசியல் , ஹலால் , புலால் , ஹிஜாப் , வடக்கு மீள் குடியேற்றம் , லே க்களின் அச்சுறுத்தல், சேனாக்களின் சொறிச்சல்கள், ராவண யின் ரவுசுகள் என்பவற்றை கண்டு ஒரு நாளும் பொங்காது என்பது மட்டும் பச்சிளம் குழந்தைக்கு கூட தெரியும் என்பது பரிதாபமே!!!
-A.Waaqir Hussain-


0 Comments