"ஒரு சமூகத்தின் வளர்ச்சி அதன் உறுப்பினர்களின் கடுமையான உழைப்பு" என்பதுவே உலகத்தின் எல்லா நாகரீகங்களும் வரலாற்று ரீதியாக எமக்கு கற்றுத் தந்த பாடமாகும். செல்வம் கொந்தளிக்கின்ற மத்தியக்கிழக்கு பூமியில் செல்வத்தை தேடி பெற்றுக்கொள்ள எண்ணில்லா தொழிலாளிகள் நாளாந்தம் இறக்குமதி செய்யப்படுகிறார்கள்.
இலங்கை தாய்த்திரு நாட்டின்; குறிப்பாக புத்தளம் சமூகத்தின் மனித வலு கட்டார் தேசத்தை நோக்கி படையெடுக்கும் நடைமுறை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இவ்வாறு தொழில் தேடி வருபவர்கள் கட்டாரிலும் சரி, தொழில் புரிகின்ற மற்றும் தங்கி வாழ்கின்ற இடங்களிலும் சரி எதிர் நோக்கும் பிரச்சினைகள் ஏராளம் தாராளம்.
இளைஞர்களோடு முதியவர்களும், படித்தவர்களோடு படிக்காதவர்களும், அனுபவசாலிகளோடு மொழித் தெரியாதவருமாக எல்லா வகையான திறன் மட்டங்களை கொண்ட நமது புத்தளம் சமூகத்தின் உழைக்கும் வர்க்கம்; கட்டாரிலே குடியேறிகளாக வந்து தமது தொழிற்துறையில் வளர்ச்சி காண்பதில் பல்வேறு சவால்களை அனுபவிக்கிறார்கள்.
கல்வித் தேவைகள் நிமித்தம் கட்டார் வந்த சகோதரர் விஷான் மகீன் அவர்களின் முயற்சியால் (தனது சொந்த செலவில்); கட்டார் தேசத்தில் அதிக காலமாக தொழில் நிபுணர்களாக பணியாற்றி வரும் எமது புத்தளத்து சகோதரர்களை (சொத்துக்களில்) ஒரு சிலரை அழைத்து அவர்களின் அனுபவப் பகிர்வுகளை பெற்று; அதனூடாக தொழில் தேடி வரத் தயாராகும் அல்லது ஏற்கனவே தொழில் செய்யும் சகோதரர்கள் விழிப்புணர்வு அடையக்கூடிய விடயங்களை அறிந்துக் கொள்ள FOCUS GROUP (கவனக்குழு) ஆய்வு நேர்முக பரிசோதனையை செய்தோம்.
ஏன் புத்தளத்து இளைஜர்கள் வேலைத்தேடி கட்டார் வர வேண்டும்? என்ற கேள்விக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும்; எல்லோரும் ஒருமிக்க ஏகமனதாக முன்வைத்த விடயம் "பணம்". வேறெந்த நாட்டிலும் பார்க்க நம்மவர்கள் இங்கே விரைவாக பணத்தை உழைக்க கூடிய மற்றும் அதனை சேமிக்க கூடிய நாடாக கட்டார் இருப்பதுவே முதன்மை காரணமாகும்.
தமது சொந்த வியாபாரத்துக்கு முதலீட்டை திரட்டுதல் அல்லது குடும்ப வியாபாரத்துக்கு நிதி ஒத்துழைப்பை வழங்குதல் அல்லது புத்தளத்தில் "பஜார் பஜாராக" கூடி வாழ்ந்து பொழுதையும் பெருபதியான நேரத்தை கடத்துதல் என்ற எண்ணத்தில் தான் புத்தளத்தின் ஆண்மகன்கள் கட்டார் வருகிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டது.
ஆனால் இங்கே தொழில் தேடி வரும் இளைஜர்கள் போதுமான தொழிற் கல்வித் தகைமைகள் இல்லாது வெறுமனே சாதாரண தரப் பரீட்சை அல்லது 18 வயது பூர்த்தியடைந்த நிலையிலே; நண்பர்களினது ஆசை வார்த்தைகளுக்கும் சொகுசான வாழ்க்கை முறைக்கும் ஈர்ப்படைந்து தவறான வழிகாட்டுதலினால் கட்டார் பயணமாகிறார்கள் என்பதும் இந்நிகழ்வில் அறியப்பட்டது.
டோஹா மாநகரை இரண்டாவது புத்தளமாகவும், கட்டாரை தமது இன்னொரு நாடாகவும் கற்பனை செய்து வாழும் புத்தளத்து இளைஞர்கள்;முன்மாதிரிகள் அல்ல வழித்தொடர்வோர் (Trend Followers & Not Trend Setters ) என்பதாகவே குற்றம் சொல்ல வேண்டிய நிர்பந்த்தம் உருவாகியிருப்பதாக மேலும் குறிப்பிட்டார்கள்.
தனியார் நிறுவனங்களில் கூட உயர் முகாமைத்துவ மட்டங்களில் நம்மவர்கள் எவரும் இல்லை என்பதும்; இடைநிலை மற்றும் கீழ்நிலை முகாமைத்துவ நிர்வாக பதவிகளிலும் நம்மவர்கள் இருக்கிறார்கள் என்பதும் இங்கே எமக்கு அறியக் கிடைத்தது.
ஆங்கில மொழி வல்லமையும், தொழிற்சார் திறன்களுமின்றி இங்கே வருகின்ற பொழுது திறமையான முறையில் தொழிற் தேர்ச்சி அடைய முடியாமல், தொழிற் பதவிகளில் கீழ்நிலை மட்டத்திலே தொடர்ந்தும் வேலை செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் எனவும்சில சமயத்தில் தொழில் போட்டி காரணமாக தொழிலை இழந்து பரிதவிக்கின்ற நிலையும் காணப்படுகிறதாம்.
இவ்வாறு வருமானம் குறைந்த தொழில்களில் சிக்கிக் கொள்வதால் தாம் வந்த நோக்கத்தை அல்லது இலக்குகளை அடைவதற்குரிய காலம் தாழ்ந்து போதலால் வாழ்நாளின் பெரும்பகுதியை வெளிநாடுகளிலே கழித்து விட்டு; சொந்த நாட்டுக்கு இளம் வயதிலே மீள முடியாத துரதிஷ்டவசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
கட்டாரில் இருந்தாலும் நாட்டில் குறிப்பாக புத்தளத்தில் சொந்த வியாபாரங்களை கவனிக்கக் கூடிய வல்லமையோடு விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் குடும்பத்தின் தலைவராக இருப்பவர் கட்டார் வருவதனால் சமூகச் சீர்கேட்டுக்கு தமது குடும்பமும் பலியாகிவிடும் என்ற பயமும் கட்டார் வாழ் புத்தளம் சகோதரர்களை ஆட்டி படைக்கத்தான் செய்கிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேடி வருவோருக்கு; தொழிற் துறை தேர்ச்சியையும் அதிக வருமானத்தையும் பெற்றுக்கொள்ளக் கூடிய சரியான தெளிவையும் அறிவையும் வழங்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இருந்த போதிலும், புத்தள சமூக நல அமைப்புக்களின் பங்களிப்பும் இங்கே அவசியமாகின்றது.
எதிர்காலத்தில் தலைமைத்துவ பயிற்சிகளை தொழில் வழிகாட்டல் நிகழ்வுகளை செய்யத் தயாராகும் இளைஜர் அமைப்புக்கள் சமூக சேவை நல நிறுவனங்கள்; நமது புத்தளம் இளைஜர் சமூகம் சமகாலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அனுபவிக்கும் பரிதாபமான நிலைகளிலிருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க உடனடியாக கவனத்தில் எடுத்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நிகழ்வில் பங்குகொண்ட சகோதரர்கள் வினயமாக வேண்டினர்.
Mohamed Iflal







0 Comments