Subscribe Us

header ads

Gossip தளங்களின் Facebook பக்கங்களை "விரும்பும்" உரிமை - Right to "like" gossip pages

அண்மையில் நியூ ஜப்னா மற்றும் அதிரடி போன்ற வெப் தளங்களில் ஒரு இளம்பெண்ணைப் பற்றி எழுதப்பட்ட அவதூறு செய்திகளால் பல சமூக சிந்தனையாளர்கள் அந்த வெப்தளங்களை முகப்புத்தகத்தில் விருப்பக்குறியிட்டிருப்பவர்களை தங்களுடைய முகப்புத்தக நண்பர் வட்டத்திலிருந்து நீக்கப்போவதாக அறிவித்திருந்தார்கள். அதற்கான முன்னறிவிப்பும் தங்களினுடைய முகப்புத்தக பக்கங்களின் ஊடாக வழங்கியிருந்தார்கள். ஆனால், நான் இவ்வாறான அறிவிப்புக்களின் பின்னரே அந்தத் தளங்களை என் முகப்புத்தகத்தில் விருப்பக்குறியிட்டிருந்தேன். 

இதற்கு முன்னர் அவ்வகையான தளங்கள் பற்றி அறிந்திராத எனக்கு அவை எவ்வாறான செய்திகளை மக்களுக்கு வழங்க முற்படுகின்றது என்பது பற்றியும் மற்றைய செய்தித்தளங்களிளிருந்து அது வேறுபடும் விதம் பற்றியும் தெரிந்துக்கொள்ளவே அதனை விருப்பக்குறியிட்டிருந்தேன். இன்று காலை என்னுடைய முகப்புத்தகத்தை திறந்து பார்த்த போது உள்பெட்டியில் வந்த மூவர் அச்செயல் தொடர்பாக என்னை விமர்சித்திருந்தார்கள். 

அது பற்றி நான் சிந்திக்கப் போவதுமில்லை, வருத்தப்பட போவதுமில்லை.இது என்னுடைய சொந்த தனிப்பட்ட விருப்பம். அதை வைத்துக்கொண்டு என்னை எடை போடுவதோ அல்லது என்னுடைய எண்ணங்களின்பால் கேள்வி எழுப்புவதையோ நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய சுய விருப்பங்களில் தலையிட அனுமதிக்க முடியாது. இவ்வாறானவர்கள் என்னை அவர்களது நண்பர் வட்டத்திலிருந்து நீக்குவதாயின் தாரளமாக நீக்கி விடலாம். ஆனால்,நான் சிந்திப்பது எல்லாம் ஒருவரின் சிந்தனையை அல்லது அவர் பற்றிய பொதுவான அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொள்ள இந்த மாதிரியான அளவீடுகள் சரியானதா என்பது பற்றியே. - Anantharaj Chanthirabalan
அந்த Facebook பக்கங்களை விருப்பக்குறியிடுவதற்கு ஒருவருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கக்கூடும். எம்மிடமுள்ள காரணங்களைக் கொண்டு அவ்வொருவரை முத்திரை குத்துவதோ ஏசுவதோ சரியல்ல. 

அந்த வகையில் அப்பக்கங்களை விரும்புவதற்கு உங்களுக்குள்ள உரிமையை நான் மதிக்கிறேன். தனி நபர்கள் எதையும் புறக்கணிப்பதனூடாகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்து விட முடியாதென்பதையும் நான் உணர்கிறேன். அவ்வாறான புறக்கணிப்புக்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதுமில்லை. 

ஆனால், இவ்வேளையில் சில விடயங்களைக் கவனப்படுத்தவும் விரும்புகிறேன். 

நாம் இன்று எல்லோரும் சில வலைத்தளங்களை எதிர்த்து நிற்கிறோமல்லவா, அவ்வகைச் சமூக விரோத வலைத்தளங்கள் ஏன் நடத்தப்படுகின்றன?

அவை பண வருவாயினைப் பெற்றுத்தருகின்றன. ஒரு வலைத்தளத்திற்கு அன்றாடம் வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அளவிடுவதற்கு ஏராளமான கருவிகள் கிடைக்கின்றன. ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான, பல நூறாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகைதரும் வலைத்தளம் ஒன்றில் சில இலட்சங்கள் கொடுத்து விளம்பரம் செய்வதற்குப் பலர் முன்வருவார்கள். இது தவிர, கூகிள் விளம்பரங்கள் போன்ற சேவைகளை இணைத்துக்கொள்வதன் மூல நாம் நினைத்துப்பார்க்க முடியாத வருமானத்தினை ஈட்டவும் முடியும். Facebook பக்கங்களாக இருந்தால் அப்பக்கங்களை எத்தனை பேர் விருப்பக்குறியிடுகிறார்கள் என்பதைக்கொண்டு வருமானமீட்டும் வழிமுறைகள் உள்ளன. இது நேரடியானதும் எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கதுமான வருமானம். 

மறைமுகமான வருமான வழிகள் உள்ளன. சில அரசியற் சக்திகள் தமக்குச் சாதகமான அரசியற் கருத்துக்களை வெகுமக்களிடத்தில் மெல்லக்கொல்லும் நஞ்சைப்போல ஊட்டுவதற்கு இத்தகைய "பரபரப்பானதும்" "பிரபலமான"துமான வலைத்தளங்களையும் Facebook பக்கங்களையும் நாடுகின்றன. இது தனிநபர் அரசியல் தொடக்கம் உலக அரசியல் வரையான நிகழ்ச்சிநிரல்களைக் கொண்டிருக்கக்கூடியது. நாம் நன்கறிந்த எடுத்துக்காட்டாக, புலிகளுக்குச் சாதகமானதைப்போல் தோற்றம் காட்டிக்கொண்டு EPDP யினுடைய அரசியலை முன்னெடுத்த மிகப்பிரபலமான "தினமுரசு" பத்திரிகையைச் சொல்லலாம். அவ்வாறான மஞ்சட் பத்திரிகைகளின் இணைய வடிவமான இவ்வலைத்தளங்களும் பக்கங்களும் திட்டமிடப்பட்ட சில அரசியற் பரப்புரைகளை முன்னெடுப்பதனூடாக நிறைய வருமானமீட்டுகின்றன. 

மக்களின் - குறிப்பாக இளைஞர்களின் - கவனத்தை வேண்டிய நேரத்தில் வேண்டியபடி திசைதிருப்புவதற்கும் இத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இவை கப்பம் பெறும் வேலையும் செய்கின்றன. ஆட்களைப்பற்றிய பொய்யானதும் அந்தரங்கமானதுமான தகவல்களைத் தமது தளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டி பணம் பறிக்கின்றன. பெண்களும் பல பிரமுகர்களும் இதில் இலக்கு வைக்கப்படுகிறார்கள். எவரும் பார்க்காத தளத்தில் தகவல் கசிந்தால் எவரும் கவலைப்படப்போவதில்லை. மிரட்டிக் கப்பம் பெறுவதற்கான பேரம் பேசும் சக்தியாக இவர்கள் தமது தளத்தின் வருகையாளர் எண்ணிக்கையையும் பக்கங்களின் விருப்பக்குறிகளின் எண்ணிக்கையையுமே பயன்படுக்கிறார்கள். 

ஒரு வலைத்தளத்துக்கோ, Facebook பக்கத்திற்கோ இருக்கும் வருகையாளர்/வாசகர் எண்ணிக்கையையும் தன்மையையும் கொண்டு அத்தளங்களையும் பக்கங்களையும் பெறுமதி குறிக்கும் வழிமுறைகள் உள்ளன. அவ்வாறு பெறுமதி அளவிடப்பட்டபிறகு மிகப்பெரியதொரு தொகைக்கு அத்தளங்களையும் பக்கங்களையும் கைமாற்றிப் பணம் பார்க்கும் வேலையும் நடக்கிறது. இதுவும் இணையத்தில் உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கும் வணிகம். 

பண வருவாயைத் தாண்டி, அதிகாரம் மிக்கவர்களை அண்டி, அவர்களுக்குத் தமது தளங்களூடாகக் கால் நக்குவதன் மூலம் தாமும் அதிகாரத்தில்சிறு எச்சிற் பங்கினைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்ட முடிகிறது. ஆட்களை மிரட்டிக் காரியம் சாதிக்க முடிகிறது.   

இன்னும் நுணுக்கமானதும் திரைமறைவானதுமான எத்தனையோ காரணங்களுக்காக இவ்வலைத்தளங்களும் பக்கங்களும் நடத்தப்படுகின்றன. 
இவ்வளவு பெரிய பண வருமானத்தையும் அதிகாரத்தையும் இவர்கள் எதை விற்றுச் சம்பாதிக்கிறார்கள்? தாம் பிரசுரிக்கும் செய்திகளையா? தாம் வெளியிடும் கட்டுரைகளையா? 

இல்லை! உங்களைத்தான் விற்கிறார்கள். அவர்களது வியாபாரமே வருகையாளர் எண்ணிக்கையும் விருப்பக்குறிகளும் தான். அதை நோக்காகக்கொண்டேதான் கடைகெட்ட கேவலமான செய்திகளையும் வதந்திகளையும் வெளியிடுகிறார்கள். உங்கள் விருப்பக்குறிகளையும் வருகைகளையும் கவரும் உத்திதான் அக் கிளுகிளுப்பூட்டும் கிழ்த்தரமான செய்திகள். 

நாம் ஒவ்வொருமுறை அவ்வலைத்தளங்களைப் பார்வையிடும்போதும், ஒவ்வொருமுறை அவர்களது தொடுப்புக்களைப் பகிரும்போதும், ஒவ்வொரு முறை அவர்கள் Facebook பக்கங்களை விருப்பக்குறியிடும்போதும், பார்வையிடும்போதும் நாம் காசாக மாற்றப்பட்டு அவர்களது பைகளுக்குள் போய்ச் சேருகிறோம். பதிலாக நாம் எமது நேரத்தையும் அறிவையும் நேர்மையான அரசியற்பார்வையையும் மாற்றங்களைச் செய்யும் வலிமையையும் இழக்கிறோம். 

நாம் பகிரும்போது நாம் உருவாக்கி வைத்திருக்கும் நன்மதிப்பைப் பணயம் வைத்து நண்பர்களைப் பலியாக்குகிறோம். நாம் அவர்களது Facebook பக்கத்தை விரும்பும்போதும், எமது "விருப்பங்கள்" தொடர்பாக நண்பர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மரியாதையும் நாசப்படுத்தி நண்பர்களையும் கொண்டுபோய் அந்த ரவுடிக்கும்பலின் வளர்ச்சிக்கு உரமாயிடுகிறோம். Fake profiles ஐ நண்பராகச் சேர்த்துக்கொள்வதில் உள்ளதைப் போன்ற சிக்கலும் இதில் உள்ளது. 

ஒரு like ஐ புறக்கணிப்பதனூடாக நாம் மாற்றங்களைச் செய்ய முடியாதுதான். ஆனால், அந்த "like" இனை இடுவது எமது சமூகக் கடமை சார்ந்தும் அறம் சார்ந்தும் மிகப்பெரிய சிக்கலைக் கொண்டது.  

குறித்த பக்கங்களை உண்மையில் நாம் ஆய்வு நோக்கத்தோடு தொடர விரும்பினால், அவற்றை எமது வலை உலாவியில் புத்தகக்குறியிட்டு வைத்துவிட்டு வசதிப்படி சில நாட்களுக்கொருமுறை அனைத்தையும் ஒரே பார்வையாகப் பார்த்துவிட்டு வரலாம். 

ஒரு போதைப்பொருள் வியாபாரியிடம் நாம் போதைப்பொருள் வாங்காமல் விடுவதனூடாக அவ்வலையமைப்பை எம்மால் அழிக்க முடியாது. ஆனால் வாங்குவதனூடாக அதை எம் சொந்த அறத்துக்கு மாறாக மேலும் வளர உதவுகிறோம்.   இராஜபக்ச குடும்பத்துக்கு வாக்களிக்காமல் விடுவதனூடாக படுகொலைக்குள்ளான தமிழர்களுக்கு நியாயம் பெற்றுத்தர முடியாது. ஆனால் அக்குடும்பத்துக்கு வாக்களிப்பதென்பது வதையுண்ட அத்தனை உயிர்களின் முன்னால் நாம் பெருங்குற்றவாளியாவதாய் ஆகும். 

இந்த Like உம் அந்த வாக்கினைப் போலத்தான். 

Muralitharan Mayuran Mauran

Post a Comment

0 Comments