நாங்களும் இவ்வுலகில் வாழப் பிறந்தவர்கள்.
ஏனையவர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் எமக்கு உரியவை. எங்களையும் இச் சமூகத்தின் அங்கத்தவராக நோக்குங்கள்.
கோணலான பார்வையை எங்கள் மீது செலுத்தாதீர்கள்.
நாங்களும் இறைவனின் படைப்பில் பிறந்தவர்களே” என்கிறார் செல்வி சசினி. இவரின் வரலாறு சோகம் நிறைந்தது.
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர் சசினி. கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள “ஹார்ட் டூ ஹார்ட் (Heart 2 Heart) அமைப்பின் தலைமையகத்தில் அண்மையில் இவரை சந்திக்க முடிந்தது.
”நான் கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்தவள். நான் தமிழ் குடும்பத்தில் பிறந்தேன். அப்பா காலமாகிவிட்டார். என்னுடன் பிறந்தவர்கள் மூவர். நான்
முகத்துவாரத்தைச் சேர்ந்த பிரபல தமிழ் பாடசாலையில் கல்வி கற்றேன்.
எனது பத்து வயது வரை நான் ஏனைய சிறுவர்களைப் போலவே வாழ்ந்தேன். பத்து வயதின் பின்னர் எனது உடலில் வித்தியாசம் தோன்றியது.
பெண்களைப் போல பாடசாலை மாணவிகளுடன் பழகத் தொடங்கினேன்.
அவர்களுடன் நடனம் ஆடுவது, விளையாடுவது பாடுவது என மாற்றம் ஏற்படத் தொடங்கியதையடுத்து, தொல்லைகள் உச்சத்தை தொட்டன.
பெண்களைப் போன்று ஆடையணிந்து கொள்ள விரும்பினேன். பலரும் என்னை பலவாறு விமர்சனம் செய்தனர்.
பலரின் கேலிகளுக்கு உள்ளானேன். இதனால் எனக்குள் எழும்பும் கோபத்தை அவர்கள் மீது வசை சொற்களால் திட்டுவேன். அவர்கள் அடங்கிப் போய்விடுவர்.
எனது பதினைந்து வயதில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன். நடைபாதையில் இரவு நேரங்களில் தங்குவேன்.
இரவில் பலரின் வீடுகளுக்கு முன்னால் வீதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் முச்சக்கரவண்டிகளில் உறங்குவேன்.
விடிய ஐந்து மணியாகியதும் எழுந்து நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றுவிடுவேன்” கலங்கிய கண்களுடன் சசினி கூறினார்.
“இவ்வாறு காலத்தை கழித்துக் கொண்டு இருக்கையில், மட்டக்குளியில் தேயிலை பொதி செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.
தந்தை இறந்தபின், சொத்துகளில் எனக்குரிய பங்கை பெறுவதற்கு பெரும் சிரமப்பட்டேன்.
பின்னர் எனது குடும்பத்தாரால் வாடகைக்கு விடப்பட்டிருந்த வீட்டை சட்டரீதியாக பெற்று இன்று அவ்வீட்டில் வாழ்கின்றேன். எனக்கு பெற்றோர் சசிகுமார் என பெயரிட்டனர். பின்னர் எனது பெயரை சசினி என மாற்றிக் கொண்டேன்.
இன்றும் எனது அம்மா, அக்கா, அண்ணன் அனைவரும் என்னை ஆணாகத் தான் நோக்குகிறார்கள். அப்போது எனக்கு கோபம் பொத்துக் கொண்டுவரும்” என்கிறாள் சசினி.
தொடர்ந்தும் பெண்ணாகவா வாழ விரும்புகின்றீர்கள்?
“நான் பெண்தானே. மூக்குத்தி அணிந்து, காது முழுவதும் தோடுகளை அணிந்து கவர்ச்சியான உடலோடு தானே இருக்கின்றேன்” என நளினத்தோடு பதிலளித்தார் சசினி.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நான் முழுப்பெண்ணாக அடையாளம் காட்ட ‘ஹோர்மோன்’ சிகிச்சையை மேற்கொண்டு மார்பகங்களை ஏற்படுத்திக்கொண்டேன்.
இச்சிகிச்சையை இந்நாட்டில் மேற்கொண்டேன். இலங்கையில் எங்கள் மத்தியில் அழகுராணிப் போட்டி நடத்தினால் நான் தான் வெற்றிபெறுவேன்.
இன்னும் உடலை கவர்ச்சியாக மாற்ற எதிர்காலத்தில் சிசிச்சைகளை வெளிநாட்டில் மேற்கொள்வேன்” என்றார்.
இப்போது என்ன தொழில் புரிகிறீர்கள்?
அரச நிறுவனம் ஒன்றுடன் இணைந்து எச்.ஐ.வி.எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறேன்.
மட்டக்களப்பு, நுவரெலியா, அனுராதபுரம், கொழும்பு எனும் மாவட்டங்கள் தோறும் இவ்விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றேன்.
எச்.ஐ.வி.தொற்று, எயிட்ஸ் நோய் பற்றிய முழுமையான அறிவு மக்கள் மத்தியில் தேவை. இதை முன்னெடுத்து வருகின்றேன்.
அதேவேளை, இவ்வாறான மக்களுக்கான வேலைத்திட்டத்தில் நாங்கள் இணைந்து செயற்படுவதால், மக்களின் மத்தியில் எங்களைப் பற்றி பரப்பிவிடப்படும் தவறான விமர்சனங்கள், பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
மக்களுக்கு நீங்கள் என்ன செய்தியை சொல்ல விரும்புகிறீர்கள்?
“என்னைப்போன்றவர்கள் இந்நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளில் வாழ்கின்றனர். நாங்கள் அனைவரும் பெண்ணாகவே வாழ விரும்புகின்றோம்.
தயவு செய்து எங்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என மட்டமாக விமர்சனம் செய்யாதீர்கள்.
என் முகம், கழுத்தைப் பாருங்கள், அவை பெண் தன்மையைத்தானே கொண்டுள்ளன.
நான் பெண்மையாக மாறத் தொடங்கியதும் என் முடியை பலவந்தமாக வெட்டி அவர்களின் கோப ஆக்ரோஷத்தை என்மீது செலுத்தினர்.
“அனைத்து துன்பங்களையும் அனுபவித்தேன். தொழில் இல்லாமல் பணமும் இல்லாமல் பட்டினி கிடந்துள்ளேன்” என விழிகளில் திரண்ட கண்ணீருடன் தொடர்ந்த சசினி, “சூரியனும், சந்திரனும் எங்களை வெறுப்பதில்லை.
அவை எம் மீது சந்தேக பார்வையைச் செலுத்துவதில்லை. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பெரும் பூதங்களும் எங்களை ஏற்றுக்கொண்டே உள்ளன.
ஆனால், நாங்கள் பஸ்ஸில் பயணிக்க இயலாதுள்ளது. நடந்து செல்ல முடியாது. எங்களை வேடிக்கைப் பொருளாக அல்லது வித்தைக்காரனாக பலரும் பார்க்கின்றனர்.
மற்றவர்களுக்கு எங்களால் ஏதும் தொல்லை ஏற்படுகின்றதா? ஏன் எங்களை அவமானப்படுத்துகின்றனர்.
இவ்வுலகத்தில் எங்களையும் மனிதர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள். நாங்கள் பாவப் பிறப்பல்ல. உங்கள் சகோதரிகளாக ஏற்றுக்கொள்ள முன் வாருங்கள். எங்களை காயப்படுத்தாதீர்கள்.
சமூகத்தின் பார்வையில் காயப்பட்டு காயப்பட்டு எங்கள் உள்ளமும் இதயமும் நொறுங்கிப்போயுள்ளன என வேதனையுடன் கூறினார்.
'ஹார்ட் டூ ஹார்ட்' அமைப்பு மூலமாக உங்களின் எவ்விதமான உரிமைக்காக போராடுகிறீர்கள்?
“உண்மையிலேயே எங்களுக்கான பெண்மை என்ற அடையாள உரிமை கிடைக்கவில்லை.
பாகிஸ்தானில் எங்களைப் போன்றவர்களுக்கு அடையாள அட்டையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெண் என குறிப்பிடப்படுகிறது.
இலங்கையிலும் எங்களுக்கு தேசிய அடையாள அட்டையில் பெண் என்பதை அடையாளப்படுத்தி அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். இது ஒரு சலுகையான கோரிக்கை அல்ல, எங்களின் உரிமையுமாகும்.
இவ்விடயத்தை மனித உரிமைகள் அமைப்பிடமும் தெரிவித்துள்ளோம்.
எங்களை பெண் பிறப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அரசிடம் கோரிக்கை முன்வைக்க உள்ளோம். எங்களுக்கான உரிமைகளையே கேட்கின்றோம்” என்றார் பிரகாசமான முகத்துடன்...
(படங்கள் கே.பி.பி. புஷ்பராஜா)
(சிலாபம் திண்ணனூரான்)


0 Comments