மது அருந்துவது ஓர் இழிவான செயல் என்று எப்போது உணர்கிறார்களோ, மதுவை அருந்துவதற்கு எப்போது உண்மையிலேயே வெட்கப்படுகிறார்களோ, அப்போது தான் மது வெறியர்கள் மதுப் பழக்கத்தை விட்டொழிப்பார்கள். மது பாவனையாளர்களின் மனம் போகும் போக்குக்கு எல்லையே இல்லை. எந்தவொரு ஊசியின் இருப்பக்கமும் கூர்மையாக இருக்காது.
அந்த ஊசியைப் போன்றவர்களே மதுவுக்கு அடிமையானவர்களும். அவர்களுக்கு சொந்தப் புத்தியும் இல்லை. அடுத்தவர்கள் புத்திமதி சொன்னாலும் கேட்கவும் மாட்டார்கள்” என்கிறார் திருமதி பி.ஏ.வயலட்.
தான் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்தபின் இன்று பலரை நல்வழிக்கு இட்டுச் செல்லும் இயந்திரமாக செயற்படுகிறார் திருமதி பி.ஏ.வயலட் (63 வயது) எனும் புதுமைப் பெண்மணி.
சிலாபம் ஜயபிம பிரதேசத்தில் வசிக்கும் பி.ஏ.வயலட், ஒரு பெண் குழந்தையின் தாயாவார்.
தான் எவ்வாறு மதுவுக்கு அடிமையானதையும் அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டதையும் எவ்வித தயக்கமும் இன்றி எமக்குத் தெரிவித்தார்.
ஒவ்வொருவரின் சோகக்கதையும் அடுத்தவருக்கு பெரியதோர் பாடமாகும். இந்த மது பாவனையால் நான் பட்ட கஷ்டங்களை விட எனது கணவன், பிள்ளைகள் எதிர்கொண்ட அவலம் மிக அதிகம் என்கிறார் வயலட்.
தனது கடந்த காலம் குறித்து அவர் கூறுகையில், “நான் திருமணம் முடித்து மிக சந்தோசமாக இல்லற வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருந்தேன்.
நல்ல கணவர். அவர் கட்டட ஒப்பந்தக்காரர். எமக்கு பணத்திற்குப் பஞ்சமில்லை. ஒரு பெண் குழந்தைக்குத் தாயானேன்.
எனது திருமணத்தின் பின் வருடாவருடம் குழுவாக தனி பஸ் வண்டியில் கதிர்காமம், நயினாதீவு, மடு, சிவனொளிபாத மலை என பல இடங்களுக்கும் யாத்திரை செல்வோம்.
இவ்வாறு யாத்திரை சென்றுவருகையில் இரவில் சிறிதளவு மது குடிக்கப் பழகினேன்.
முதலில் பயணம் செல்லுகையில் மாத்திரமே குடித்து வந்தேன். கூட்டமாக அனைவரும் குடிப்போம். உண்மையில் அது ஒரு விநோதமான குடிக்கும் நிகழ்வாகவே இருந்தது.
ஆனால், அப்பழக்கம் எனது முப்பத்தைந்தாவது வயதில் என்னை முழுக் குடிகாரியாக மாற்றியது.
கணவன் தொழிலுக்குச் சென்று விடுவார். பிள்ளையும் பாடசாலை சென்றபின் தனிமை என்னை வாட்டியது.
இந்தத் தனிமை என்னை முழுக் குடிகாரியாக மாற்றம் பெறவைத்துவிட்டது. காலையிலையே குடிக்கப் பழகினேன்.
வெளியே சொன்னால் வெட்கக்கேடு. கணவர், மகள், உறவினர்கள் என்னைத் திட்டுவார்கள். புத்தி சொல்லுவார்கள். வீட்டார் என்னை திட்டும் போது எனக்குள் இருந்த கள்ளச்சாராய வேகம் என்னைத் திசைதிருப்பி அவர்கள் மீது என்னை ஏவி விடும். நான் போடும் சத்தத்தில் அவர்கள் அடங்கிப் போய் விடுவார்கள்.
இரவு சாப்பாடு நேரத்தில் மிக வேகமாகக் கத்தி அவர்களை அடக்கி விடுவேன்.
அப்போது மது வெறி என்னை உச்சக்கட்ட வெறியில் நிலை நிறுத்தி வேடிக்கைப் பார்க்கும்.
எனது அம்மா, அப்பா என்னை திட்டிப் பேசுவார்கள். இயலாத போது சத்தமிட்டு ஒப்பாரி வைத்து அழுவார்கள். என்னதான் இவர்கள் ஒப்பாரி வைத்து அழுதாலும் காலையில் தனியாக வீட்டில் நான் சுதந்திரமாக வடிசாராயம் குடிப்பேன்.
அதுவும் நாறிப்போன பழங்களால் தயாரிக்கப்படும் கசிப்பையே குடித்தேன்” என்றார்.
பணம் எங்கே, எப்படி உங்களின் மது பாவனைக்கு கிடைத்தது?
நான் தையல் கலையில் இப்பிரதேசத்தில் பிரசித்தி பெற்றவள். தையல் தொழில் மூலம் பணம் கிடைக்கும்.
எனது குடி வெறியின் தாக்கத்தால் தையல் தொழிலும் பின்னடைவை எட்டியது. எனது கணவர் கட்டட ஒப்பந்தக்காரர்.
ஆகையால், வீட்டில் பணத்திற்குத் தட்டுப்பாடுகள் இல்லை. அவர் பெட்டகத்தில் வைக்கும் பணத்தை எப்போதும் கணக்குப் பார்ப்பதில்லை.
எனது அன்றாட குடிக்காக, எவருமே இல்லாத போது அவ்வப்போது பணக்கட்டுகளில் தேவையான பணத்தை உருவிக் கொள்வேன் என்றார் வயலட் குறுகுறுக்கும் மனத்தோடு.
குடி வெறி உச்சத்தை தொட்டால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டோம்...
உண்மையிலேயே வெறி உச்சத்துக்கு சென்றதும் என்ன செய்கிறேன் என எனக்கே தெரியாது.
வெற்றிலையை வாயில் திணித்து சப்பி சப்பி வீடு முழுவதையும் அசிங்கப்படுத்தி விடுவேன்.
நிதானத்தை இழந்து உளறுவேன். இவ்வாறு பெரும் குடிகாரியாக சுமார் பதினெட்டு வருடங்கள் வாழ்ந்தேன்.
கேவலம் அவ்வாழ்க்கையை இன்று நினைக்கையில் எனக்குள் கோபம் பொத்துக் கொண்டு வருகின்றது எனத் தெரிவித்தார்.
இந்தக் குடியால் எதையெல்லாம் இழந்தீர்கள்?
ஆண்கள் குடித்தால் அவர்கள் எதையாவது சொல்லித் தப்பித்துக் கொள்வார்கள். பெண்களால் அவ்வாறு செயற்பட இயலாது.
பெண்களின் வாழ்க்கை முறையானது பெரும் வித்தியாசத்தைக் கொண்டது. சமூக கட்டுப்பாட்டுக்குள் அடங்கி வாழவேண்டும்.
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும். உண்மையோடு ஒத்து வாழ வேண்டும். முதலில் ஒரு சிறிய அளவு மது என்னை பல பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்றுவிட்டது.
தனி மனிதரின் குடித்தாக்கம் எனது குடும்பத்தையும் உறவினர்களையும் பாதித்திருக்கின்றது.
அந்தத் தாக்கமானது பல தீமைகளையே கொடுத்தது. எவ்வித நன்மையையும் கொடுக்கவில்லை. மனைவியாக, தாயாக இருந்த நான் ஒரு குடும்பப்பெண்ணாக அடையாளம் காணும் வழிமுறைகளிலிருந்து தொலைந்து போனேன்.
குடிவெறியால் மற்றவர்களை மிரட்டிப் பணிய வைத்தேன். எவ்வளவு கேவலமான செயல். பணம்,பாசம், கௌரவம் அனைத்தையும் இழந்தேன். இனிய இளமைக்காலத்தை இழந்தேன்.
ச்சே ! ஒரு மிகவும் கேவலமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். இரவும், பகலும் தூக்கத்தை இழந்தேன்.
இன்று இவைகளை நினைக்கையில் வெளியே எவருக்கும் தெரியாத வகையில் மனதிற்குள் அழுகிறேன் என அவர் தெரிவிக்கையில் அவரின் வார்த்தைகள் அறுந்து அறுந்து விழுந்தன.
இவ்வாறு குடிக்கு அடிமையாகிய நீங்கள் எவ்வாறு சம வாழ்க்கைக்கு மீண்டும் வந்தீர்கள்?
குடிக்கு அடிமையாகி உச்சத்தை எட்டியதும் நான் பித்துப்பிடித்தது போலானேன். உளறல் சத்தம் அதிகரித்தது.
அக்கம் பக்கத்தாருக்கு பெரும் தொந்தரவுக்காரியாக மாற்றம் பெற்றேன். பின்னர் வடிசாராயம் என்னைத் தேடி வரத் தொடங்கியது.
முதலில் உடலில் தாக்கம் ஏற்பட்டது. உடல் உறுப்புகளில் முதலில் இதயம் பாதிக்கப்பட்டது.
வைத்தியம் செய்தோம். ஆனால், குடியை மட்டும் என்னால் கைவிட இயலவில்லை. அப்போது வெற்றிலையையும் அதிகம் பயன்படுத்தத் தொடங்கினேன்.
சாராயத்தையும் அளவுக்கதிகமாகக் குடித்தேன். இக் குடிப்பழக்கம் ஒரு வழயில் மட்டுமல்லாது, அது பல வழிகளில் எனது உயிரைக் குடித்து வருவதை என்னால் அறிய முடியாதிருந்தது.
ஒரு சிறிய அளவு மது என்னைக் கட்டுப்பாட்டோடு செயற்படவும் விடவில்லை.
அதன் பின்னர் என்ன நடந்தது?
நான் குடிக்கு முழுமையாகி விட்ட நிலையில், சிலாபம் தெதுறு ஓயா கிராமத்து புனித ஜூட் தேவஸ்தானத்தில் (2005 இல்) இடம்பெற்ற அல்கஹோலிக்ஸ் அனானிமஸ் என்ற பொது சேவை மையம் குடி நோயாளர்களை மீளவும் இயல்பு வாழ்க்கைக்கு எடுத்துச் செல்லும் கூட்டத்திற்கு தேவஸ்தானத்தின் வண.அருட் தந்தை ஜெயசூரியா என்னை தனது காரில் கொண்டு சென்று கூட்டத்தில் அமரவைத்தார்.
அப்போது என் சுயநினைவையும் இழந்து நடக்கவும் இயலாத நிலையில் இருந்தேன்.
கூட்டம் நிறைவடைந்ததும் இப்போது சேவை மையத்தின் தற்போதைய மக்கள் தகவல் தொடர்பாளர் பிரிவுத் தலைவர் ஜெரமி டயஸ் என்னைப் பற்றி விசாரித்தார்.
எனது விபரத்தைத் தெரிவித்தேன். கை, கால்கள், நடுங்கின. என்னை உடினடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்ப்பித்து சிகிச்சை பெற வைத்தார்.
அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி அவரின் பல கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு நடக்கும் கருத்துரைகளைக் கேட்டு மனம் திருந்தினேன். பின்னர் பல கத்தோலிக்க தேவஸ்தானத்தில் ‘அல்கஹோலிக்ஸ் அனானிமஸ்’ சேவை மையம் நடத்தும் நிகழ்வுகளில் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன்.
நான் குடிநோயிலிருந்து விடுபட்டு பத்து வருடமாகிவிட்டது. நானும் அவ் அமைப்பின் பிரிவை ஆரம்பித்து சிலாபம் ஜயபிம, தெதுறு ஓயா புனித ஜூட் தேவஸ்தானத்தில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் காலை பத்து மணிக்கு வண. அருட் தந்தை திலான் மெரியன் தலைமையில் குடிநோயில் சிக்கியவர்களுக்கு விடுதலை கிடைக்கும் வகையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இதுவரை எவ்வாறு உங்களின் சேவை வெற்றி பெற்றுள்ளது?
இதுவரை முப்பது பேர் வரையில் மருந்து இல்லாது குடிநோயிலிருந்து வெளிவரச் செய்துள்ளோம்.
இதற்கு மருந்து தேவையில்லை. அறிவுரை மூலமே அவர்களை குணப்படுத்துகிறோம். அவர்களின் மனதை மாற்ற பெரும் முயற்சி செய்வோம். குடியை அவர்கள் வெறுக்கும் வரை அறிவுரையை வழங்குவோம்.
“இப்போது தங்களின் நிலைமை எப்படி?” எனக் கேட்டோம்...
“மிகவும் சந்தோஷமான வாழ்க்கையில் நுழைந்துள்ளேன். குடியை நிறுத்திய பின்னர் பெரும் வெற்றியை நோக்கி குடும்பமே செல்கிறது. நான்கு தடவை இந்தியா முழுவதும் குடும்பமாக சுற்றுலா சென்றோம்.
இன்று சகல வசதிகளுடன் வாழ்கின்றோம். இதனை விட என்ன தேவை உள்ளது. குடிநோயாளிகளை குணப்படுத்தலே எனது கடைமையாக இன்று உள்ளது” என்றார் வயலட் மெல்லிய சிரிப்போடு...
“இறுதியாக சமூகத்திற்கு என்ன செய்தியை சொல்ல விரும்புகிறீர்கள்?” எனவும் கேட்டோம்...
“குடியால் மக்கள் பாதிப்படைகிறார்கள். குடிப்பவர்கள் மீது உங்களுக்கு அன்பிருந்தால் அவரின் அல்லது அவளின் குடிநடத்தையை நிறுத்த உதவுங்கள்.
குடியால் நான் பட்ட அவஸ்தை பெரும் சோகக் கதையாகும். விழிப்புடன் செயற்படுங்கள்.
குடிப்பழகத்துக்கு எதிராகச் செயற்படுங்கள். அதைத் தடுக்க முனையுங்கள். குடி குடியைக் கெடுக்கும். கேவலமானது தான் குடிப்பழக்கம்.
வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்திச்செல்ல நல்ல உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பது மிக அவசியம் என உணருங்கள்.
இளம் சமூகமே! குடிப்பழக்கம் உங்களின் உடலின் மூளை, ஈரல், இரத்தம்,சிறுநீரகம் போன்றவற்றில் தீங்கை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மது இல்லா சமூகத்தை ஏற்படுத்த அனைவரும் எங்களுடன் கைகோருங்கள்” என்றார் வயலட்.
(சிலாபம் திண்ணனூரான்)


0 Comments