வரலாறு காணாத மழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். நடிகர்கள், தொழிலதிபர்கள் என வசதி படைத்தவர்கள் எல்லோரும் முதலமைச்சர் வெள்ள நிவாரணத்துக்கு நிதியை அனுப்பிய வண்ணம் உள்ளனர். அதோடு வெளி மாநில மற்றும் மாவட்டங்களிலிருந்தும் நிவாரண பொருட்களை அனுப்பி சென்னைக்கும், கடலூருக்கும் பலர் உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் 5ம் வகுப்பு மாணவியும், ஒன்றாம் வகுப்பு மாணவனான அவருடைய தம்பியும் சேர்ந்து தாங்கள் சிறுக, சிறுக சேகரித்த உண்டியல் பணத்தை முதலமைச்சர் வெள்ள நிவாரணத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நெகிழ்வான சம்பவத்தின் விவரம் இதோ...
சென்னை கொருக்குப்பேட்டை, முத்தமிழ்நகரை சேர்ந்த சோமசுந்தரம்-ஸ்ரீதேவி பிரியா தம்பதியின் மகள் யுவஸ்ரீஜா, மகன் நிகில் ஸ்ரீஜித். யுவஸ்ரீஜா எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பும், நிகில் 1ம் வகுப்பும் படிக்கின்றனர்.
சென்னை தண்ணீரில் தத்தளித்த டிசம்பர் 2-ம் தேதிதான் யுவஸ்ரீஜாவுக்குப் பிறந்தநாள். பிறந்த நாளை கொண்டாடாமல் மக்களின் பரிதவிப்பை டிவியில் பார்த்துக் கொண்டு இருந்தார். பிறகு தானும், தம்பியும் சிறுக, சிறுக சேமித்து வைத்த உண்டியலை எடுத்து வந்து உடைத்துள்ளார். அதிலுள்ள பணத்தை எண்ணியபோது அதில் ரூ.683.50 இருந்துள்ளது. அதை எடுத்துக் கொண்டு தனது அப்பாவிடம் சென்ற யுவஸ்ரீஜா, 'இதை வெள்ள நிவாரணத்துக்காக கொடுங்கள்' என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த சோமசுந்தரம், அந்தப்பணத்தை செக் மூலம் முதலமைச்சரின் வெள்ள நிவாரணத்துக்கு 16-ம் தேதி அனுப்பி வைத்துள்ளார். அதோடு முதலமைச்சருக்கு யுவஸ்ரீஜாவும், நிகிலும் எழுதிய கடிதம் ஒன்றும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தை தன்கையாலே இருவரும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர். கடிதத்தில், 'சென்னையில் பெய்த கனமழையில் நிறைய அண்ணன், அக்கா, தம்பி, தங்கை எல்லாம் ரொம்ப கஷ்டப்படடு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக எங்களுடைய தினசரி சிறுசேமிப்பான ரூ.683.50 ஐ உங்களுடைய வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்கப்போறோம். அதை தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த இரண்டு பிஞ்சு மனதில் உதவ வேண்டும் என்று எண்ணம் பிறந்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம்.
இதற்கிடையில் தன்னுடைய குழந்தைகளின் செயலைக் கண்டு ஆச்சரியமடைந்த தயார் ஸ்ரீதேவி பிரியாவும், தன்னுடைய ஒரு மாத சம்பளத்தையும் வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்துள்ளார். ஸ்ரீதேவி பிரியா, கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார்.




0 Comments