டெல்லியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தான் முதன்முதலில் செல்போன் வாங்கியது எப்போது? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
தேடல் இணையதளமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்ட பின்னர், இரண்டாவது முறையாக அவர் இந்தியா வந்துள்ளார்.
டெல்லியில் எஸ்.ஆர்.சி.சி மாணவ-மாணவிகளிடம் இன்று அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ''கல்விமுறை படைப்பாற்றலை ஊக்குவிக்கும் அற்புதமான இடம் கூகுள். இது உங்கள் கனவுகளை அடையவும், சாதிக்கவும் ஏற்ற இடம். மேலும், புதியதாக கண்டுபிடிக்க பல வாய்ப்புகளை கூகுள் ஏற்படுத்தி தருகிறது. எப்போதும் நல்லதை சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும்.
கிராமங்களில் உள்ள பெண்களுக்கு இன்னும் இணையதள வசதி குறித்து தெரியவில்லை. அவர்களுக்கு இணையதள வசதியை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதேபோல், பல பெண்களுக்கும் இணையதள வசதி குறித்து விழிப்புணர்வு இல்லாதததால், அது உலக பிரச்னையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது இந்தியாவில்தான் அதிகமாக பேசப்படுகிறது'' என்றார்.
"நீங்கள் உங்களுடைய முதல் செல்போனை எப்போது வாங்கினீர்கள்?" என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, " 1995 - 96 ல் வாங்கிய மோட்டாரோலா செல்போன்தான் முதலில் வாங்கியது. 2006 ல்தான் முதல் ஸ்மார்ட் போன் வாங்கினேன். என்னுடைய வீட்டில் 20 முதல் 30 ஸ்மார்ட் போன்கள் உள்ளன" என்றார்.


0 Comments