Subscribe Us

குரோதப் பேச்சு சட்டமூலம் நிறைவேற்றப்பட மாட்டாது!- நீதி அமைச்சர் அறிவிப்பு

குரோதப் பேச்சுகளை தடைசெய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட மாட்டாது என்று நீதி அமைச்சு அறிவித்தது. 

குரோதப் பேச்சுகளை தடைசெய்யும் வகையில் குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டவரைபை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

எதிர்வரும் 8ம் திகதி இது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. இதற்கு எதிரணியும் சிவில் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு வெளியிட்டன.

இதனால் விவாதம் நடத்தி திருத்தங்களை நிறைவேற்றும் திகதியை அரசு ஒத்திவைத்தது.

இந்நிலையிலேயே தான் மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்படாது என்று நீதி அமைச்சு நேற்று அறிவித்தது.

அரச தகவல் திணைகளத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கை அரசமைப்பில் 291 சரத்தில் குரோதப் பேச்சுகளையும், செயற்பாடுகளையும், வைராக்கியங்களையும் கட்டுப்படுத்தும் தடுப்புச் சட்டமூலமொன்று காணப்படுகிறது.

ஆனால், அச்சட்டம் இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் வலுவாக இல்லை என்ற காரணத்தால் குரோதப் பேச்சுகளையும், செயற்பாடுகளையும் தடுக்கும் நோக்கில் சட்டமூலத்தைக் கொண்டு வருமாறு பல்வேறு தரப்பினர் குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்கள் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

பின்னர் சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரமும் பெற்றுக் கொள்ள இருந்த நிலையில், அச்சட்டத்தை நீக்குமாறு மீண்டும் சிறுபான்மை இனத்தினர் உள்ளிட்ட சில அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, அச்சட்டத்தை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கை ஏற்பட செயற்படுவதே ஜனநாயகமாகும் என்றார்.

Post a Comment

0 Comments