பாராளுமன்ற அமர்வுகளுக்கான ஒரு நாள் கொடுப்பனவை அமர்வொன்றிற்கு 500 ரூபாய்களில் இருந்து 20,000 ரூபாய்களாக நல்லாட்சி அரசு அதிகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விவகாரமாகும்.
பாராளுமன்ற உணவகத்தில் 80 வகையானஉணவுகள் தினமும் அவர்களுக்காக சமைக்கப்படுவதாகவும் சுமார் 500,000 ரூபாய்கள் தினமும் செலவாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 400 ரூபாய்கள் பெறுமதியான ஒரு வேளை உணவிற்கு அவர்களிடமிருந்து சுமார் 12.50 ரூபாய்களே அறவிடப் படுகின்றதாம்.
அமர்வுகள் இடம்பெறும் தினத்தில் சுமார் 200,000 பெறுமதியான உணவு விரயமாகிறதாம். வருடாந்தம் சுமார் 10 கோடி ரூபாய்கள் உணவகத்திற்கு நஷ்டம் ஏற்படுகின்றதாம்.
கொழும்பில் இலவச விடுதி, தீர்வையற்ற வாகனம் (சுமார் ஒன்றரைக் கோடி பெறுமதியான), எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி, அலைபேசி கொடுப்பனவுகள் எல்லாம் கொடுத்து இவர்களுக்கு அமர்வுகளுக்கான கொடுப்பனவையும் அதிகரிப்பது மக்கள் மீதான சுமைகளை அதிகரிக்கும் செயலாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சலுகைகளில் சரி பாதி மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என அரசியலமைப்பில் இருப்பதனால் ஏற்கனவே வெள்ளை யானைகளாக கருதப்படும் மாகாண சபைகளிற்கான அமையச் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினருக்குக் கிடைக்கப் பெறும் வரப்பிரசாதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி,
சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் – ரூ. 54525.00
போக்குவரத்துக் கொடுப்பனவு – ரூ. 10000.00
உணவு, குடிபானக் கொடுப்பனவு – ரூ. 1000.00
தொலைபேசிக் கட்டணம் – ரூ. 2000.00
பாராளுமன்றக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்கான கொடுப்பனவு -ரூ. 500.00
பாராளுமன்ற உறுப்பினர் ஒரு அமைச்சர் எனின்,
அவரின் அடிப்படைச் சம்பளம் – ரூ. 65000.00
பிரதி அமைச்சருக்கு அடிப்படைச் சம்பளம் – ரூ. 63500.00
மாதாந்தம் கொடுக்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு மாவட்டத்துக்கு மாவட்டம் வித்தியாசப்படும்.
இதன்படி,
கொழும்பு மாவட்டம் – ரூ. 18845.00
கம்பஹா மாவட்டம் – ரூ. 23000.00
கேகாலை, இரத்தினபுரி, காலி, கண்டி மற்றும் குருநாகல் – ரூ.28000.00
மாத்தளை, புத்தளம், மாத்தறை, நுவரெலியா – 32000.00
பொலன்னறுவை, பதுளை, ஹம்பாந்தோட்டை, வவுனியா, மொனராகலை, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி – ரூ. 37745.00
இது தவிர, சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிலையான தொலைபேசி அழைப்புக்கள் இரண்டு வழங்கப்படும். இதற்கான மாதாந்த கொடுப்பனவை பாராளுமன்றம் செலுத்தும்.
அத்துடன், உறுப்பினராக இருக்கும் காலத்தில் மாதிவெல கட்டிடத் தொகுதியில் ஒரு வீடு வழங்கப்படும். அல்லது வீட்டிற்கான கூலி வழங்கப்படும்.
மேலும், பாராளுமன்றத்தில் ஐந்து வருடம் முழுமையாக உறுப்பினராக இருக்கும் சகலருக்கும் ஓய்வுதியம் வழங்கப்படும்.
ஏற்கனேவே இலஞ்ச ஊழல் மோசடிக் குற்றச் சாட்டுகளில் தொடர்புடையோர் வருவாய்களுடன் ஒப்பிடும் பொழுது மேற்படி சட்ட ரீதியான வருவாய்கள் துச்சமானவையாகும்.
அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அமைச்சுப் பதவிகளையும், வரப்பிரசாதங்களையும் , வாகானாதிகளையும் கடந்த அரசு மக்கள் பிரதிநிதிகளுக்கு உத்தியோக பூர்வ இலஞ்சமாக கொடுத்தது போன்று நல்லாட்சி அரசும் செய்யக் கூடாது.
-Inamullah Masihudeen-


0 Comments