அதிகமாய் ஆசைப்படும் நான் கடும் கோடையின் இடையே சட்டென பெய்த திடீர் மழையில் நனைந்து கொண்டே ஓடோடிப் போய் ஐஸ்கிறீம் வாங்கி உண்டேன்...
அங்கே ஒரு ஏழைச்சிறுவன் பசிக்குதய்யா என கேட்டும் அவனை ஏளனமாய்ப் பார்த்துக் கொண்டே...
நனைந்த ஆடைகளை பெருமைத்தனம் கொண்டு குப்பைத் தொட்டியில் போட்டேன் கிழிந்த அழுக்கு உடைகளுடன் அந்தச் சிறுவன் போகையில் அவனுக்கு அதைக் கொடுக்காமல்...
தொடர் மழை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன் தேங்கி நின்ற மழை நீரை உதை பந்தென அச்சிறுவன் மீது காலால் தெளித்துக் கொண்டுருந்தேன் என் களிப்புக்கு...
அவ்வளவு இருமாப்பெனக்கு அட தொடரூந்து மழையா இப்படி பொழிகிறது என வியந்து கொண்டிருந்தேன்...
மழை கொஞ்சம் அதிகம் போலும் என் வீட்டு தரைக்கும் மேல் வெள்ளம்...
பெய்யென பொழிந்து கொண்டேயிருக்கிறது...
என் வீட்டிற்குள் இடுப்பளவிற்கு வெள்ளம்...
இது பருவ மழையா பருவமடைந்த மழையா என்று யோசிக்குமளவிற்கு மழை வேறு இடங்களிலிருந்தெல்லாம் வீட்டிற்குள் தண்ணீர் ஓடி வருகிறது
ஆற்று நீரா காட்டு நீரா தெரியவில்லை வீட்டிற்குள் என் கழுத்தளவிற்கு வெள்ளம்...
வாழத் தெரியாதவர்கள் என ஏழைகளைப் பார்த்து தலைக்கனம் கொண்டிருந்தேன் நீந்தத் தெரியாத எனக்கு தலைக்கு மேல் வெள்ளம் வரும் வரை...
மூச்சு முட்ட தத்தளிக்கிறேன் எல்லாமே இருந்த எனக்கு இப்போது உயிர் மட்டுமே தேவைப்படுகிறது...
தீயனைப்பாளர் உதவியுடன் மீட்கப்படுகிறேன் தண்ணீரிலிருந்து மீண்டும் பிறப்பதாய் உணர்கிறேன் ஒரு பாடசாலை கட்டடத்தில் நிர்க்கதியாகிறேன்...
இப்போது மழைக்கால குளிரில் எடுத்த பசி உணவு தேவைப்படுகிறது...
ஒருவேளை சாப்பாட்டிற்கு வரிசையில் நிற்கிறேன் அந்த ஏழைச்சிறுவனின் பசி உணர்கிறேன் தொண்டு நிறுவனங்களது சுடச்சுட உணவும் பறிமாறப்பட்டது...
ஈரமான ஒரே ஆடையை தொடர்ந்து உடுத்தியதால் மாற்று உடை தேவைப்படுகிறது...
பல வீடுகளில் சமூக ஆர்வலர்களால் சேகரிக்கப்பட்ட பழைய ஆடைகளில் ஒன்றும் கிடைக்கிறது..
பழைய உடையணியும் ஏழைகளது உடையின் மதிப்பை உணர்கிறேன்..
இப்படியே நாட்கள் சில நகர்கிறது..
வெள்ள நீர் வடிந்தோடிவிட்டது..
எனக்கு மீண்டும் வீட்டுக்கு போக வேண்டிய தேவை வருகிறது...
வீடு வந்தேன் குடும்பத்தையே வெள்ளத்தில் இழந்திருந்தேன் சிதைந்து போன என் வீட்டோடு இப்போது நான் தனிமையாய் அனாதையாய் ஏழையாய்...
இப்போது உணவு உடை படிப்பு சுகாதாரம் இப்படி நிவர்த்தி செய்யமுடியாமல் பல தேவைகளோடு நான்...
-UR Anwas-


0 Comments