கடையொன்றில் பொருட்களை திருடிய பெண்ணொருவரை கைது செய்ய சென்ற அமெரிக்க பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அப்பெண் தனது குழந்தையின் பிறந்த தினத்துக்கு கேக் செய்வதற்காக அப்பொருட்களை திருடினார் என்பதை அறிந்தவுடன் மேற்படி பொருட்களுக்கான பணத்தை செலுத்திவிட்டு திரும்பி வந்துள்ளார்.
நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்திலுள்ள போர்ட்ஸ்மௌத் நகரிலுள்ள கடையொன்றில் கேக் தயாரிப்புக்கான பொருட்களை பெண்ணொருவர் திருடியபோது அகப்பட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக போர்ட்ஸ்மௌத் நகர பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மைக்கல் கோட்ஸோனிஸ் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் அப்பெண்ணை கைது செய்வதற்காக அனுப்பப்பட்டார்.
ஆனால், வறிய நிலையிலுள்ள 19 வயதான அப்பெண் தனது குழந்தையின் பிறந்த தினத்துக்கு கேக் தயாரிப்பதற்காக அப்பொருட்களை திருடியதை அறிந்து பரிதாபம் கொண்டார்.
அதனால், அப்பெண்ணை கைது செய்யாமல், மேற்படி பொருட்களுக்கான பணத்தை கோட்ஸோனிக்கே செலுத்தினார்.
போர்ட்ஸ்மௌத் நகர பொலிஸார் இத்தகவலை தெரிவித்துள்ளனர். ஆனால், கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்யவில்லை எனவும் தனது சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறான கருணையான செயற்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுவதுண்டு எனவும் மைக்கல் கோட்ஸோனிஸ் தெரிவித்துள்ளார்.
“பொருட்களை திருடுவது சரியானதல்ல. ஆனால், அதற்கான விலையை ஒரு குழந்தை செலுத்த நேரிடக்கூடாது” என அவர் கூறியுள்ளார்.
“மேற்படி கடை ஊழியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “மோசமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பல கதைகளுக்கு மத்தியில், இந்த கதை உங்களுக்க மிக மகிழ்ச்சியளிக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


0 Comments