Subscribe Us

header ads

அமெரிக்காவுக்குள் “முஸ்லிம்களை தடை செய்ய வேண்டும்” – பென்டகன் கவலை


அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது என குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டின் இராணுவ தலைமையகமான பென்டகன் கவலை வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கைகளை உடைய டொனால்ட் ட்ரம்ப், தான் பயணிக்கும் இடங்களில் எல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பிவருகிறார்.

பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும் கணக்கெடுத்து, “தாங்கள் இஸ்லாமியர்கள்” என பிறருக்கு புரியும் வகையில் அடையாள அட்டை ஒன்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் முஸ்லிம்களை அனுமதிப்பதில் உள்ள அபாயத்தைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளும் வரை அமெரிக்காவில் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகைக்கு கோரிக்கை விடுத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார். இதற்கு குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புளோரிடா மாநிலத்துக்குள் டொனால்ட் ட்ரம்ப் நுழைய அம்மாநில மேயர் தடை விதித்துள்ளார்.

அதேவேளை கடந்த திங்கட்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மேயரும் அவருக்கு தடை விதித்தார். இது குறித்து அவர் ட்விட்டரில், “ட்ரம்பின் உரைகளில் உள்ள அபாயத்தை முழுமையாக புரிந்து கொள்ளும் வரை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குள் நுழைய தடை விதிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது என குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டின் இராணுவ தலைமையகமான பென்டகன் கவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பென்டகன் ஊடகப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில்;

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளில் முஸ்லிம் வீரர்களும் உள்ளனர். அமெரிக்க முப்படைகளில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் நாட்டுப்பற்றுடன் கடமையாற்றி வருகின்றனர்.

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது என கூறும் கருத்துகள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பலம்சேர்க்கும் வகையிலும், அமெரிக்காவை முஸ்லிம்களுக்கு எதிரான நாடாக சித்தரிக்கும் விதத்திலும் நமது நாட்டின் மதிப்புக்கு மட்டுமின்றி, உள்நாட்டு பாதுகாப்புக்கும் பாதகமாகவும் அமைந்துவிடும் எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சுமார் 30 லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்நாட்டின் மக்கள் தொகையில் இந்த எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாகும். சமீபத்தில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ஒரு புள்ளிவிபரத்தின்படி, களத்திலுள்ள 3,817 வீரர், வீராங்கனைகளும், தேசிய பாதுகாப்பு மற்றும் தயார்நிலை காத்திருப்பில் உள்ள 2,079 வீரர், வீராங்கனைகளும் என மொத்தம் 5,896 முஸ்லிம்கள் அந்நாட்டின் முப்படைகளில் பணியாற்றி வருவதாக தெரியவந்துள்ளது


Post a Comment

0 Comments