பீகார் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக அரசு பள்ளியில் சமையல் செய்யவிடாமல் கிராம மக்களால் தடுக்கப்பட்ட விதவை பெண் ஊழியருக்கு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று உதவி செய்துள்ளார்.
கோபால்கஞ்ச் மாவட்டம் கல்யாண்பூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் விதவைப் பெண் உள்ளிட்ட 5 பேர் மாதம் சம்பளமாக ரூ.1000 பெற்றுக் கொண்டு மதிய உணவு சமைத்து வந்துள்ளனர். தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலையில் கல்யாண்பூர் கிராமம் உள்ளது. கல்யாண்பூரில் உள்ள அந்த நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் சுமார் 734 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
சமையல் பணியில் ஈடுபட்டு அந்த விதவை பெண்ணை கடந்த புதன்கிழமை முதல் சமைக்க விடாமல் கிராம மக்கள் தடுத்துள்ளனர். மேலும், அந்த பள்ளியையும் செயல்படவிடாமல் கல்யாண்பூர் கிராம மக்கள் முடக்கினர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த விதவைப் பெண் மாவட்ட கலெக்டரை கடந்த வியாழக்கிழமை அணுகி புகார் தெரிவித்தார். கிராம மக்களை சமாதானம் செய்வதற்காக கோபால்கஞ்ச் மாவட்ட கலெக்டர் ராகுல்குமார் தலைமையில் குழு சென்றது.
மாவட்ட நிர்வாகம் தலையிட்டதை அடுத்து அந்த பெண் மீண்டும் பள்ளியால் பணியமர்த்தப்பட்டார். கிராம மக்களும் போராட்டத்தை கைவிட்டனர்.
கிராம மக்களை சமாதானம் செய்ததோடு, பள்ளி மாணவர்களோடு ஒன்றாக தரையில் அமர்ந்து விதவை பெண்மணி சமைத்த உணவினையும் கலெக்டர் சாப்பிட்டுள்ளார். மாவட்ட கலெக்டரின் இந்த செயல் மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை அளித்தது.


0 Comments