ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள புருண்டி நாட்டில் பியர்ரே குருன்சிஷா அதிபராக பதவி வகித்து வருகிறார். அந்நாட்டு அரசியல் சாசனத்திற்கு மாறாக கடந்த ஜூலை மாதம் நடந்த மறு தேர்தலில் வென்ற அவர் 3-வது முறையாக அதிபராக உள்ளார்.
ஆனால் இது சட்டவிரோதம் எனக் கூறி பல மாதங்களாக போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த போராட்டங்களில் இதுவரை 240 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 2 லட்சத்திற்கு அதிகமானவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், புருண்டியில் தொடர்ந்து நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த புஜூம்புராவுக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் நான்கு நாட்கள் அவகாசம் (டெட் லைன்) கொடுத்துள்ளது. அதே நேரம், என்ன நடந்நாலும் 5 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்புவதாகவும் அப்பிரிக்க ஒன்றிய அமைதி மற்றும் பாதுகாப்பு கவுன்சில்(PSC) நேற்று அறிவித்துள்ளது.
புருண்டியில் கடந்த வார வெள்ளிக்கிழமை அன்று தலைநகர் புஜும் புராவில் உள்ள 3 ராணுவ தளங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதாவும், அப்போது நடந்த சண்டையில் 87 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பளர் தெரிவித்தார்.
மேலும் இதில் 8 பேர் ராணுவ வீரர்கள் என்றும், இது தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அந்நாட்டை சேர்ந்த பொதுமக்களோ, ராணுவத்தினர் வீடுகளில் புகுந்து அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்தனர். மேலும் சிலர் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
முன்னதாக, புருண்டியில் வன்முறை சம்பவங்கள் எல்லை மீறி சென்றுவிட்டதாகவும், சர்வதேச நாடுகள் உடனே இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் அந்நாட்டு மக்கள் கோரிக்கைவிடுத்தது குறிப்பிடத்தக்கது.


0 Comments