ஒரு புகைப்படம் நாம் விருப்பட்டது போல எடுக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்வோம்...? ஒரு பத்து முறை... அதிகபட்சம் ஒரு ஐம்பது முறை. ஆனால் ஆலன் மெக்ஃபேட்யென் என்பவரோ, ஆறு முழு ஆண்டுகளில் 4200 மணி நேரங்கள் செலவழித்து, 7,20,000 படங்கள் எடுத்ததன் விளைவாக, அவர் எதிர்பார்த்த படம் கிடைத்திருக்கிறது.
மீன்கொத்தி பறவை ஒன்று மேலிருந்து கீழாக பறந்து வந்து, தண்ணீரின் மேல் பரப்பில் தன் அலகை வைக்கும் நொடியில் ஆலன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். அத்தனை ஆண்டுகளில் அவ்வளவு படங்களிலும் அவர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைக்கவில்லை. பிறகுதான் அப்படி ஒரு அருமையான படம் கிடைத்திருக்கிறது!
“நான் எதிர்பார்த்த ஷாட் கிடைத்திருக்கிறது. இந்த ஒரு படத்திற்காக நான் எவ்வளவு படங்கள் இதற்கு முன் எடுத்திருக்கிறேன் என்று பார்க்கும் போது எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்று உணர்கிறேன். நான் ரொம்ப லக்கி” என்கிறார் ஆலன்.
தன் தாத்தாவை ரோல்மாடலாக கொண்டிருக்கும் ஆலன், சிறுவயதில் அவர் தன்னை மீன்கொத்திகளை பார்க்க அழைத்து சென்றதையும் நினைவுகூர்கிறார். புகைப்படக்கலைஞரான பிறகு, அதுவே மீன்கொத்திகளை புகைப்படம் எடுக்க அவருக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருப்பதாகவும் ஆலன் சொல்கிறார்.
-சு. அருண் பிரசாத்



0 Comments